ஏந்தலார் - மேன்மையுடையவர் ஏந்தல் - ஆண்பாற் சிறப்புப் பெயர்; |
தாம் எய்துமளவும் - போர் முற்றித் தாம் திரும்பிவரும் வரையில். |
அமுது படியாக - வேண்டும் - என்று கூட்டுக; வேண்டும் - வேண்டிய அளவு. ஆக - ஆகும் பொருட்டு. |
செந்நெல் - சிவன் அமுதுக்குச் செந்நெல்லே சிறந்தது. ஏனைக் கார் நெல் முதலியவை அத்துணைச் சிறப்பில; அரிவாட்டாய நாயனாரது வரலாறும், பிறவும் பார்க்க; ஆனால் பொருளாசையினால் கோயிலுக்குள்ள சிறந்த சம்பா நெல்லை விற்றுவிட்டுத் தாழ்ந்த குறுவை நெல்லை அழுதுக்கு வைக்க என உத்தரவிடும் கோயில் அதிகாரிகளையும் காண்பது இந்நாளின் காலக்கொடுமையும் எங்கள் பாவப்பயனுமாம்; கொடுமை! |
வாய்ந்த கூடு - அளவு குறித்துப் பொருந்திய நெற்கூடுகள். |
வழிக்கொள்வார் - பயணம் போவாராகிய நாயனார். 3 |
4137. (வி-ரை) தமர்களாயினார் - தாம் இல்லாத நாளில் தமது பொருள்களைக் கையாண்டு செயல் செய்யும் நிலையுடையவர்; ஆயினார் - என்றது அக்குறிப்புத் தருவது; அவர்கள்பால் நாயனார் சொல்லிச் சென்ற கருத்துமிது. தமர் - தம்மைச் சேர்ந்தவர்; சுற்றத்தார்; காரணப்பெயர்; |
தமக்கெல்லாம் தனித்தனியே - உரைத்து என்றுகூட்டுக. தமக்கு எல்லாம் - தம் எல்லாருக்கும் என நான்கனுருபு பிரித்துக்கூட்டி முற்றும்மை விரிக்க. |
ஏற்றிய - குறித்த; அழிக்க - கூடுகளை அழித்துக் கவர; சிவனுக்கு அமுதுக்கு என்று ஆக்கிய பொருளை வேறொன்றற் காக்குதல் அதனை அழித்தலேயாம் என்றபடி. |
சிந்தையாற்றானும் என்று உம்மை விரிக்க - நினைத்தலும் செய்ததனோடு ஒக்குமாகலின் பிழை என்பது சிந்தையில் - என்க; உருபுமயக்கம். “தீண்டுவீ ராயினெம்மைத் திருநீல கண்ட மென்பார்” என்புழிப்போல. இவ்வாறு சிவன்மேல் ஆணைவைத்துக் கூறுதல் அக்கால வழக்குப்போலும்; “நாதன்றன் வல்லாணை” (4141). |
அழிக்க - நினைவார் - திருவிரையாக்கலி - அழிக்க நினைவாரேனும் சிவனாணை பிழைத்தவராவர் என்பது; திருவிரையாக்கலி - சிவனது ஆணை; முன் வகை நூலின் உரைக் குறிப்புப் பார்க்க. அழிக்க - செலவழிக்க என்றலுமாம். |
வந்தனையால் உரைத்து - நன்மொழி பகர்ந்து அவர்களை வேண்டிக் கொண்டனர் என்பதும், நல்ல சிவதருமத்தை இன்மொழிகளாற் கூறினும் கேளாதார் தண்டிக்கப்படுதற்குரியார் என்பதும் பெற வைத்துப், பிற்சரித விளைவுக் குறிப்புப்படக் கூறியபடி. வந்தனையால் - வந்தனையோடு; ஆல் - ஒடு உருபின் பொருளது. 4 |
4138. | மற்றவர்தாம் போயினபின் சிலநாளில் வற்காலம் உற்றலுமச் சுற்றத்தா “ருணவின்றி யிறப்பதனிற் பெற்றமுயர்த் தவரமுது படிகொண்டா கிலும்பிழைத்துக் குற்றமறப் பின்கொடுப்போ” மெனக்கூடு குலைத்தழிந்தார்; 5 |
(இ-ள்) மற்றவர்தாம்.....உற்றலும் -அவர் போன பின்பு சிலநாளில் வறுமைக்காலம் வருதலும்; அச் சுற்றத்தார் - (முன்கூறிய அவ்வாறு அறிவுறுத்தப் பெற்ற) அந்தச் சுற்றத்தார்கள்; உணவின்றி......என - உணவில்லாமற் சாவதனிலும் இடபத்தைக் கொடிமேல் உடைய இறைவரது திருவமுதுக்குரிய படி நெல்லினைக் கொண்டாகிலும் உயிர் பிழைத்துக் குற்றமில்லாமற் பின்னர்த் திரும்பக் கொடுத்து விடுவோம் என்று துணிந்து; கூடு குலைத்து அழித்தார் - நெற்கூடுகளைக் குலைத்து அழித்தனர். |