(வி-ரை) மற்று அவர் - முன் கூறியபடி மறுத்து ஆணையிட்டுக் கூறிய அவர் என்றதும் குறிப்பு. |
வற்காலம் உற்றலும் - வற்காலம் - பஞ்சம்; வற்கடம்; உணவுப் பொருள்களின்றி மக்கள் வருந்தும் காலம்; உறுதலும் என்பது உற்றலும் என நின்றது. |
அச்சுற்றத்தார் - முன் நாயனாரால் ஆணையிட்டும் வந்தனையாலுரைத்தும் அறிவுறுத்தப்பட்ட அந்த என அகரம் முன்னறி சுட்டு; சுற்றத்தார் - தம் தமர்களாயினால் (4137). |
உணவின்றி இறப்பதனில் - அமுதுபடி கொண்டாகிலும் பிழைத்து - இந்நெல் இல்லையேல் உணவின்றி இறப்போம்; அவ்வா றிறந்துபடுவதனினும், அமுதுபடி நெல்லினைக் கொண்டு உணவுண்டு பிழைத்திருந்து என்றபடி; கொண்டாகிலும் பிழைத்து - உம்மை, இது செய்யத்தகாததேயாயினும் உயிர்க்கிறுதிநேரிடுவதானால் பிழைசெய்தேனும் உயிர்காக்க என்றதோர் உலக நீதியினை எண்ணிக் கூறியது; பிழைத்து - உயிர்தப்பிப் பிழைத்து; பிழைசெய்து என்ற குறிப்பும் காண்க. |
குற்றமறப் பின் கொடுப்போம் - குற்றம் - இது பெருங்குற்றமா மென்பதனை அறிந்தே துணிந்தனர் என்பது; பின் கொடுப்போம் - நெல்லைத் தாமே கவர்ந்து கொள்ள எண்ணினாரிலர்; இப்போது கொண்டு உயிர்காத்துப் பின் திரும்பக் கொடுத்தலே அவர் கருதியது. Temporary misappropriation என்பர் நவீனர்; இவ்வாறு இந்நாள் உலகியற் சட்டத்தினும் இது குற்றமாதல் காண்க; அழித்தார் - கூட்டினைக் குலைத்து அழித்ததனோடு ஆணையினையும் அழித்தனர் என்பார் குலைத்தார் என்றமையாது குலைத்து அழித்தார் என்றார். குற்றம் அறப் பின் - பஞ்சம் நீங்கிய பின்பு என்றலுமாம்; கூடு - நெற்கூடு; அழித்தார் - நெல்லைச் செலவழித்தார் என்றலுமாம். |
உணர்வின்றி என்பது பாடமாயின் தாமே உணர்ந்து ஒழுகவேண்டிய உண்மையினைக், கட்டுரைத்து எடுத்துணர்த்தவும் உணரகில்லாமல் என்றுரைக்க. |
உற்றிட - என்பதும் பாடம். 5 |
4138. | மன்னவன்றன் றெம்முனையில் வினைவாய்த்து மற்றவன்பால் நன்னிதியின் குவைபெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர் அந்நகரிற் றமர்செய்த பிழையறிந்த தறியாமே துன்னினார் “சுற்றமெலாந் துணிப்ப” னெனும் துணிவினராய். 6 |
(இ-ள்) மன்னவன்றன்......தலைவர் - அரசனது போர் முனையில் வெற்றிகொண்டு (மீண்டு) அவ்வரசன்பாலே நல்ல நிதியின் குவியலினைப் பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவராகிய கோட்புலியார்; அந்நகரில்....அநிற்து - அந்நகரத்தில் தம் சுற்றத்தார்கள் செய்த பிழையினை அறிந்து; சுற்றமெல்லாம்.....துணிவினராய் - சுற்றத்தா ரெல்லாரையும் துணிப்பேன் என்னும் துணிந்து கொண்டவராகி; அது அறியாமே துன்னினார் - தாம் அறிந்து துணிவுகொண்டதனை அவர்கள் அறியாத நிலையில் வந்து சேர்ந்தனர். |
(வி-ரை) வினைவாய்த்து - வினை - போரில் தாம் நினைத்துச் சென்ற செய்கையாகிய வெற்றி; வாய்த்தல் - கிடைக்கப்பெறுதல். வினை - போர்த்தொழில்; ஈண்டு அதில் வெற்றியைக் குறித்து. |
மற்றவன்பால்....பெற்ற - போரில் வெற்றி பெற்றுவந்த சேனைத் தலைவருக்கு அரசர் செய்யும் சிறப்பு; சிறுத்தொண்ட நாயனார் புராணம் பார்க்க. |