பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்442

     4140. (வி-ரை) எதிர்கொண்ட - தம்மை எதிர்கொண்டு வந்து வரவேற்ற.
மதிதங்கு - மாளிகையின் உயர்ச்சி குறித்தலு; மதி - உண்மையறிவு என்று கொண்டு
மெய்யறிவே உருவமாக உள்ள நாயனார் தங்குகின்ற என்று உரைக்கவும் நின்றது; மதி
- ஆகுபெயர். பைந்துகில் - பசுமை - புதுமை குறித்தது; அழகு என்றலுமாம்;
அதிகம் - மிகுதியும். துகில் - பட்டாடை. தூய நன்மை பயந்தலால் இது
பொய்மையாகாமை உரைக்க.                                           7
 
     4141. (வி-ரை) அளிப்பார்போல் - அறியாமே (4139) என்றும், இனிய மொழிபல
மொழிந்து (4140) என்றும், அளிப்பார்போல் (4141) என்றும் இவ்வாறு மனமொழி
மெய்களால் மாறுபட ஒழுகுதல் தகுமோ? எனின், இச்சுற்றத்தாரை வினைப்போகந்
துய்ப்பித்துத் துரிசறுத்து நற்கதியடையச் செய்தற்கண் இவை வேண்டப்பட்டதென்க.
“தீயவினைப் பயன் துணிப்பார்” என்று மேற்கூறும் கருத்தும் காண்க. இறைவரது
திரோதான சத்தி தொழிற்பட்டு உயிர்களைக் கன்மபோகங்களைத் துய்க்கச் செய்யும்
நிலையும் ஈண்டுக் கருதத்தக்கது.
 
     நல்லார் - கோட்புலிநாயனார்; சுற்றத்தார்க்குத் தீவினை தீர்த்து நலம் செய்ய
நின்றமையால் இப்பெயராற் கூறினார்; தம்பெயரோன் - தமது பெயரினை உடைய
கோட்புலி என்னும் காவல் வீரன்.
 
     முன்கடைகாக்க - முன்கடை வாயிலிற் காவலாக நின்று ஒருவரும் தப்பாமே
காக்க.
 
     நாதன்றன் வல்லாணை - இறைவரது திருவாணையாகிய “திருவிரையாக்கலி”
என்பது; மறுத்த - ஆணையினைக் கடந்து அழித்த.
 
     மறுத்து அமுதுபடி அழித்த - ஆணைமறுத்த தொன்றும், சிவனமுதுக்காகிய
நெல்லினை உண்டதுமாகிய இருபெருங் குற்றங்கள் என்றவாறு.
 
     மறம் - தீய பாவம்; கொல்லாதே விடுவேனோ? - ஏகாரமும் ஓகாரவினாவும்
ஆகிய எதிர் மறைகள் கொன்றேவிடுவேன்; என உறுதிப் பொருள் தரும் உடன் பாடு
குறித்தன.
 
     கனன்று - மிக்க சினங்கொண்டு; கனன்று கொலைபுரிவர் - மூண்டசினமின்றிக்
கொலைத்தொழில் நிகழாமை குறித்தது.
 
     உரைத்துப் - புரிவார் - துணிப்பார் - துணித்தார் - என்று கூட்டி
இம்மூன்று பாட்டுக்களையும் ஒரு தொடராக்கி முடிக்க.                       8
 
     4142. (வி-ரை) தந்தையார்.......சுற்றத்தார் - இவர் தோன்றுதற்கு முதலில்
நிற்பவர் தந்தை; அதன்பின் நிற்பவர் தாயார்; அத்தாய் வயிற்றில் முன்னும் பின்னும்
வரும் அதன்பின் தொடர்புடையார் உடன்பிறந்தார்; இவர் ஒவ்வொருவர் பாலும்
பற்றாகப்பந்தித்து அதன்பின் வருவோர் சுற்றத்தார் என்றிவ்வாறு வரிசைப் படுத்திய
நிலைகாண்க. “தந்தையார் - தாயாருடன் பிறந்தார் - சுற்றமார்” என்ற திருத்தாண்டகம்
ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
 
     பந்தமார் - பற்றுச்செய்து பந்தப்படுத்தல் குறிப்பு.
 
     பதியடியார் - பதியில் உள்ள தொடர்பு கொண்ட அடிமைகள்; இவரெல்லாம்
ஒரு தொடர்பு கொண்டவர்கள். தந்தையார் முதலியவை உம்மைத் தொகைகள்.
 
     மற்று உண்ண இசைந்தார்கள் - இவர்கள் தொடர்பு பற்றாது இறைவர்பால்
அபராதம் செய்த அவ்வொன்றினால் கூடி ஒற்றுமைப்பட்டோராதலின் மற்று என்று
வேறுபிரித்துக் கூறினார்.