அறம்பற்றிச் செயல் செய்தனராதலானும், “குற்றமறப் பின் கொடுப்போம்” (4138) என்றதனால் சிவதிரவியங் கவரும் கருத்திலர் ஆதலானும், ஆணைமறுத்து உண்டதற்கு உரியதண்டம் செய்யப்பட்டா ராதலானும் இவர்களும் முறையிற் கன்மானுவம் தீர்ந்த பின் முத்தி பெற்றனர். புக்குப் - பின் அணைய என்க; “கலந்தணைவாய்” (37) என்புழிப்போல; இங்கு, இவ்வாறன்றிப், பொன்னுலகின் மேலுலகம் என்றதற்கு தேவருலகத்தின் மிக்கதாகிய சிவனுலகம் என்றும், கிளைஞர் பெற்றது உடலை விட்டுச் சென்று சிவனுலகு புகும் விதேகமுத்தி என்றும், அவ்வாறன்றி நாயனார் பெற்றது சதேக (உடலுடன் கூடிய) முத்தி என்றும் உரைப்பாருமுண்டு. சதேகமுத்தியாவது - நம்பிகள், சேரமானார், கண்ணப்பர், ஆனாயர் முதலியோர் பெற்றது போல வருவது; கிளை - கிளைஞர் - மரத்தின் கிளை போல்வார்; உவம வாகுபெயர்; அணைக என்று - என்றது அணை கென்று என வந்தது தொகுத்தல் விகாரம். இவர்களைச் சிவன் அடியாருடன் பகையாய் முத்திபெற்றவர்களுள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாறுடையார்; இயற்பகை நாயனாரது கிளைஞர்போல. நாயனாரது சொல்லையும் திருவாணையையும் மறுத்துச் செயல் செய்து தம் உயிர் காத்துக் கொண்ட செயலையே பகைத்து என்று கொண்டனர். |
இந்நிலை - இந்நின்ற நிலையே; தமது வளமெல்லாஞ் சிவன் திருவமுது பெருக்குதற்காக்கியமையாற் பொருட் சார்பு நீங்கிய நிலையும், கிளைமுழுதுமற வெறிந்தமையாலுடற்சார்பு உயிர்ச்சார்புக ணீங்கியமையும் பெறப்பட்டன; இவ்வாறு சார்புகெட ஒழுகினமையால் மேல்வரும் வினைகணீங்கச் சாருநிலை பெற்றனரதலின் இந்நிலையே நம்பால் அணைக - என்றருளினர்; இனி இவர் இவ்வுலகிற் றங்குதற்குக் காரணமில்லை என்பதாம். |
ஆர் உயிர் ஆய் - சித்துப் பொருள்களாகிய உயிர்கள் தோறும் நிறைந்தவனாகியும்; ஆர்தல் - நிறைதல்; கிளைமுதல் தடிந்த உம் வேற்றுமைத் தொகை; முதல் - வினைமுதல், வேர்; தடிந்த - வெட்டி வீழ்த்திய; குறிப்புப் பொருள்; “மாமுதல்தடிந்த” (முருகு); தொனி என்பர்; தாள் அடைந்து - தியானித்து; அடைந்ததனால்; ஞானமூட்டிச் செந்நெறி நிற்பித்தலின் அத்தனாய் என்றும், ஊட்டி வளர்த்தலின் அன்னையாய் என்றும், உயிர்க்குயிராதலின் ஆருயிராய் என்றும் அழியாத மீளா நிலை தருதலின் அமிர்தாகி என்றும் கூறினார் என்பர். 11 |
4145. | அத்தனா யன்னையா யாருயிரா யமிர்தாகி முத்தனா முதல்வன்றா ளடைந்துகிளை முதறடிந்த கொத்தலர்தார்க் கோட்புலியா ரடிவணங்கிக் கூட்டத்திற் பத்தராய்ப் பணிவார்தம் பரிசினையாம் பகருவாம். 12 |
(இ-ள்) அத்தனாய்.....முத்தனாம் - தந்தையும் தாயும் ஆருயிரும் அமிர்தம் ஆகி முத்தனாகிய; முதல்வன்தாள்......வணங்கி - இறைவரது திருவடியினை உட்கொண்டதனால் சுற்றத்தின் பந்தத்தினை வேரறத்தடிந்த கொத்தாகிய அலர்களைக்கொண்ட மாலையினை அணிந்த கோட்புலி நாயனாரது திருவடியை வணங்கி; கூட்டத்தில்.....பகருவாம் - கூட்டத்தவர்களாகிய அடியார்களுள்ளே பத்தராய்ப் பணிவார் களதுதன்மையினைச் சொல்வோம். |
(வி-ரை) அத்தனாய்....முத்தனாம் முதல்வன் - ஆய் - ஆக்கச் சொற்கள் அதுவாந்தன்மை கொண்டிருத்தற் குறிப்புத்தருவன. எண்ணும்மைகள் விரித் |