வகை:- தருமகள்...பால் - தகுதியானதென்ற முறைமையாலே மகட்கொடை பேசியவன் செல்லவிடுத்தாருடன் சென்றிடவே நூல்போயின சங்கிலியார் மாட்டு; புகு....பணிந்து - சென்ற மணக்காதலினாலே திருவொற்றியூர் இறைவரது மிக்க மலர்ப்பாதம் பணிந்து; அருளால் - திரு அருளினாலே; இவ்வியனுலகம்.....அரசே - இந்தப் பெரிய உலகம் நகுகின்ற வழக்கினையே நன்மையாக் கொண்டு புணர்ந்தார் திருநாவலூரரசர். |
தருமகட் பேசினோன்....அருளால் - முன் 3368 - 3370. பார்க்க. புகுமணக்காதல்...அருளால் - 3380 - 3420 பார்க்க. நகும் வழக்கு - சங்கிலியார் களவு - மகிழ்க் கீழ் நிகழ்ச்சி முதலாயின; நகுதல் - பாராட்டுதல் என்னும் பொருளில் வந்தது. இதனை முன்னர் நூல்போன சங்கிலிபால் என்றதனுடன் சேர்த்து, இடர்ப்படுவாருமுளர்; அவர் நூல்போன என்றதற்கு நூலிழந்த என்று உரைத்து மயங்குவர். அப்பொருள் பொருந்தாமை முன் உரைக்கப்பட்டது. நூல்போன என்றதற்கு நூற்றுறையிற் புகழப்பட்ட என்க. நூல் - நூற்றல் - மிகுதியாக எண்ணுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஆலோசித்து நேர்மையாகிய சிவத்தொண்டின் நெறியிலே ஒழுகிய சங்கிலியார் என்றலுமாம். அவரது சரிதக் குறிப்புக் காண்க. அன்றிப், பிறர் கொள்ளுமாறு கொள்ளின், நூலிழந்த தென்றற் கொப்ப அறியாரால் உரைக்கப்பட்ட என்று உரைத்துக் கொள்க. புகுமணக் காதல் - முன்வழியே வந்து புகுந்த (3380 - 3381 - 3382); புணர்ந்தான் - இஃது உலகம் (உயர்ந்தோர்) நகும் வழக்காமோ? என்று கூறலுமொன்று; மகட் பேசினோன் - மணமகளாகப் பெற மணம் பேசியவன். |
விரி :- 4146. (இ-ள்) யாவதுமோர்...மலர்ந்தன - ஒன்றுக்கும் பொருள் அல்லாத எளியேனது மனத்தின் மட்டுமன்றிப், பெருக்கெடுத்த காவிரி ஆறு இடையீடுபட்டுக் கீறிக்காட்டிய வழியில் நடந்தருளிய திருநாவலூர்த் தலைவரது சேவடிப் போதுகள் எப்போதும் எனது தலையின் மேலும் மலர்ந்தன; மேவரிய....என்னோ? - இப்பேறு பெறுதற்கு பொருந்துதற்கரிய பெரும் தவம் யான் முன்னே விளைவு செய்தன எவையோ? |
(வி-ரை) சேவடிப்போது - மனத்தகத்தும் அன்றியே - சென்னியினும் மலர்ந்தன; (இதற்கு) முன்பு - விளைத்தன தவம் என்னோ? என்க. தவம் யாதோ அறியேன் என்பது. |
மனத்து மலர்தல் - நினைத்தல்; சென்னியின் - மலர்தல் - மெய்யினால் வணங்குதல். சென்னியிலும் - மனத்தேயன்றிச் சிரத்திலும் என உம்மை இறந்து தழுவியது. யாவதும் - மனத்தும் உம்மைகள் குறித்தபடி. |
யாவதும் - யாதும்; வகரம் விரிக்கும்வழி விரித்தல் விகாரம். அடிப்போது - உருவகம்; எப்போதும் - முற்றும்மை. |
எப்போதும் மலர்ந்தன என்பதனை முன்னுங் கூட்டுக. |
மனம் - சென்னி என்பன உள்ளும் புறம்பும் நின்ற ஒரு தன்மையினை உணர்த்தின; “சிந்தையி னுள்ளுமென் சென்னியினுஞ் சேர, வந்தவர் வாழ்கவென் றுந்தீபற” (உந்தி - 44); “சிந்தையிலு மென்றன் சிரத்தினிலுஞ் சேரும்வகை, வந்தவனை மண்ணிடை நாம் வாராமற் - றந்தவனை” (களிறு 100) என்று இதனை ஞானநூல் விரித்தல காண்க. |