பக்கம் எண் :

பெரியபுராணம்451


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

58. பத்தராய்ப்பணிவார் புராணம்

_ _ _ _ _
 

தொகை
 

“பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத்தொகை - (9)
 

வகை
 

 
அரசினை யாரூ ரமரர் பிரானை யடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங் கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த ரென்று தொகுத்தவரே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (70)
 

விரி
 

4147. ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண்டாற்
கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழவுற்
றாசையினா லாவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி யினியனவே பேசுவார்.                     1
 
     பத்தராய்ப்பணிவார் சருக்கம் :- இனி, நிறுத்தமுறையானே, ஆசிரியர்,
திருத்தொண்டத் தொகையுள் பத்தாவதாகத் திருக்கூட்டத்துட் “பத்தராய்ப் பணிவார்”
என்று தொடங்கும் பாட்டினுள் உள்ள ஏழு தன்மைப்பட்ட தொகையடியார்களது
பண்புகூறுகின்றார். தொகையடியார்களாதலின் வரலாறு பற்றிப் பேசுதற்கியைபில்லை.
 
     புராணம் :- முன் உரைத்தவாறுரைக்க.
 
     தொகை :- முன்கூறியாங்குக் கூறுக.
 
     எல்லார்க்கும் என்ற முற்றும்மையினால் எக்காலத்தும் எவ்விடத்தும் என்று
கொள்க.
 
     வகை :- அரசினை....பணிந்திட்டு - அரசரைத், திருவாரூரில் எழுந்தருளிய
தேவர்களது பெருமானைத் திருவடி வணங்கி; உரை....வந்து - கூறித் துதித்த வாக்குத்
தழுதழுத்து மயிர்க் கூச்செறிந்து; கர....கம்பித்து - கைகால் முதலிய உறுப்புக்கள்
நடுங்கி; கண்ணருவி...சொரிதரும் - கண்களினின்றும் அருவிபோலக் கண்ணீர்
சொரிகின்ற; அங்கத்தினோர் - இவ்வாறு கூறும் தன்மைபெற்ற
அங்கங்களையுடையவர்கள்; பத்தரென்று தொகுத்தவரே - பத்தராய்ப்பணிவார்கள்
என்று தொகுக்கப்பட்டவர்கள்.