அரசு - ஸ்ரீதியாகராசர்; அமரர்பிரான் - தேவலோகத்தில் வீற்றிருந்து இந்திரனும் வானவர்களும் வணங்க, எழுந்தருளிய குறிப்பு; வாய்தடுமாறுதல், மயிர்சிலிர்த்தல், உடல் நடுங்குதல், கண்ணீர் பாய்தல் முதலிய இவை பத்தி மேம்பாட்டில் நிகழும் மெய்ப்பாடுகள். “ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே, யாக வென்கை கண்க டாரை யாற தாக வையனே” (திருவா. சத - 72), “திருமேனிதன்னி லசைவும் வந்திழி கண்ணீர் மழையும்” (2168). உரைதடுமாறுதல் - வாக்குப் பேசவராமல் வாய்குழறுதல்; அங்கத்தினோர் - முன்கூறிய எல்லா அங்கங்களையும் குறித்தது. சரசரணாதி - வடசொற்சந்தி; உம்மைத் தொகை; தொகுத்தவர் - தொகுக்கப்பட்டவர். படு விகுதி தொக்குவந்தது; செயப்பாட்டுவினை; |
தொகைநூல் பணியும் தன்மை (பண்பு) பற்றிப் பெயர் கூறியது. அப் பண்புகளின் வெளிப்பாடான மெய்ப்பாடுகளை வகைநூல் வகுத்தது. இவற்றை மேலும் விரித்தருளியது விரிநூல். |
விரி :- 4147. (இ-ள்) ஈசனுக்கே...கண்டால் - சிவபெருமானுக்கே அன்பாகியவர்கள் எவரையும் தாம் கண்டால்; கூசி...மனமகிழ்வுற்று - கூசி மிகவும் பெருவிருப்பமுற்றுப் பரவி மனமகிழ்ச்சிபெற்று; ஆசையினால்.....அணைந்து - ஆசையினாலே தாய்ப்பசுவின் பின்பு கன்று அணைவது போலச் சேர்ந்து; பேசுவன....பேசுவார் - அவர்கள்பாற் பேசுவன எல்லாம் இனிய மொழிகளாகவே பேசுவார்கள். |
(வி-ரை) ஈசனுக்கே - இனியனவே - ஏகாரங்களிரண்டும் பிரிநிலை. |
யாவரையும் - முற்றும்மை; “எவரேனும் தாமாக” என்ற அரசுகள் தேவாரக் கருத்து. |
கூசுதல் - அவர்களது அளவிறந்த பெருமையினையும், தமது சிறுமையினையும் நோக்கி அஞ்சுதல்; “விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்” (திருவா); “கூசி மொழிந்து” (சித்தி - 12 - 2) |
குதுகுதுத்தல் - பெருவிப்பமேலிடுதல்; குதூகலம் என்ற வழக்குக் காண்க. |
ஆவின்பின் கன்றணைந்தாற்போல - அன்புமீக் கூர்ந்த நிலைக்குச் சிறக்க வழங்கும் உவமை; வினைபற்றிய உவமம். ஆசையினால் என்றதனை உவமையினும் பொருளிலும் கூட்டி உரைக்க முதலில் வைத்தார். |
பேசுவன - பேசுவனவாகிய மொழிகளை; வினையாலணையும் பெயர். அகரவீற்றுப் பலவறி சொல்; இரண்டனுருபு விரிக்க. மனம் - உளத்தின்நிலை; பணிவு - உடலின்நிலை; இனிமை - வாக்கின் தன்மை. |
வகைநூலுள் இறைவன் பத்தியேபற்றிக் கூற, ஈண்டு ஆசிரியர், அப் பத்தி உருப்பட்டுப் பயனெய்து மிடமாகிய அடியார்பத்தியினை உள்ளடக்கி உரைத்தனர். 1 |
4148. | தாவரிய வன்பினாற் சம்புவினை யெவ்விடத்தும் யாவர்களு மர்ச்சிக்கும் படிகண்டா லினிதுவந்து பாவனையா னோக்கினாற் பலர்காணப் பயன்பெறுவர் மேவரிய வன்பினான் மேலவர்க்கு மேலானார். 2 |
(இ-ள்) தாவரிய....கண்டால் - கெடுதலில்லாத அன்பினாலே சிவபெருமானை எவ்விடத்திலும் எவர்களாயினும் வழிபடும்படியினைக் காணப்பெற்றால்; இனிது உவந்து - இனிமையாக மகிந்து (அவ்வாறு உவந்த தன்மையால்); பாவனையால்...பெறுவார் - அவர்களது சத்தாகிய பாவனையினாலேயும் அருணோக்கத்தாலும் |