பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்454

திருவடித் தாமரைகளின் பக்கத்திற் சேரும் தகுதியுடையனவாகுக என்கின்ற
அன்பினாலே; காதார்.....செய்வார் - காதிலே வெண்குழையினை அணிந்த
இறைவருக்காகிய திருப்பணிகளைச் செய்பவர்கள்; கரு.....போதாவால் - கருப்பமாகிய
குழியிலே செல்லமாட்டார்கள்; அவர்களது புகழுக்கு இவ்வுலகமெல்லாம்
ஒப்பாகமாட்டா.
 
     (வி-ரை) பாதார விந்தம் - வடநூன்முடிபு. உருவகம்; கருக்குழி - பிறவி;
உருவகம்; போதார்கள் - புகுதமாட்டார்கள்.
 
     சிவனுக்காம் பணிகளே எனது செய்தொழில்களெல்லாமாகுக என்ற அன்புடன்
பணி செய்கின்றவர்களுக்கு இனிப் பிறவியில்லை; இந்த அன்புடன் செய்யும் பணிகள்
எவையேயாயினும் அவை சிவனுக்கேற்பனவாகும். வீடுபேற்றுக்குச் சாதனமாம் என்பது.

 
     போதா - ஒப்பாகா; போதியனவாகா.                             4
 
4151. சங்கரனைச் சார்ந்தகதை தான்கேட்குந் தன்மையராய்
அங்கணணை மிகவிரும்பி யயலறியா வன்பினாற்
கங்கைநதி மதியிதழி காதலிக்குந் திருமுடியார்
செங்கமல மலர்ப்பாதஞ் சேர்வதனுக் குரியார்கள்.                  5
     (இ-ள்) சங்கரனை......தன்மையராய் - சங்கரனாகிய சிவபெருமானைச்
சார்வாகவுடைய கதைகளையே கேட்கும் தன்மையுடையவர்களாகி,
அங்கணனை....அன்பினால் - இறைவரை மிகவும் விரும்பிப் பிறர் அறியாத நிலையினிற்
செய்யும் அன்பின் றிறத்தாலே; கங்கைநதி....உரியார்கள் - கங்கைநதியினையும்
பிறையினையும் கொன்றை மலரினையும் விரும்பிச் சூடும் திருமுடியினை உடைய
இறைவரது செந்தாமரை மலர்போன்ற திருவடிகளைச் சேர்வதற்கு உரியவர்களாவார்கள்.
 
     (வி-ரை) சங்கரன் - இன்பஞ் செய்பவன்; சிவபெருமான்.
 
     சங்கரனை....கேட்கும்தன்மை - அன்பு செய்து இறைவரைச் சார்ந்த
அடியார்களின் சரிதங்களைக் கேட்கும் விருப்பம். “ஞானநூல்.....கேட்டல்” (சித்தி - 8.)
 
     அயலறியா அன்பு - பிறரறியாத வகையிற் செய்யும் அன்பு; “அயலறியாமை
வாழ்ந்தார்” (367); பிறர் கண்டுமெச்சுதற்காகச் செய்யப்படுவன ஆகுல நீர்மையன;
(ஆகுலம் - ஆரவாரம்.); அன்றியும் இறைவர்பாற் செய்யும் அன்பு ஒரு நாயகி தனது
காதல் நாயகனிடம் செய்யும் அன்பு ஆதலின் அயலறிதற்பாலதன்று என்பதுமாம்.
உலகவர் பிறர் எவ்விதமாக எண்ணினும் பொருட்படுத்தாது உண்மையினைச் சிவனே
அறியும்படி அன்பு செய்தல் என்றலும்ஆம். “அண்டர்நா யகனா ரென்னை யறிவரேல்
அறியா வாய்மை யெண்டிசை மாக்க ளுக்கியா னெவ்வுரு வாயென்?” (1770) என்றது
காண்க.
 
     கங்கை நதிமதியிதழி - உம்மை தொகை; மலர்ப்பாதம் - உவமைத் தொகை.
 
     அன்பினால் - அன்பு செய்தலினால் - அன்புகாரணமாக; அன்பினால் -
உரியார்கள்
- என்று கூட்டுக. அன்புப்பணி செய்பவர்கள் என்ற எழுவாய் தொக்கு
நின்றது.                                                          5
 
4252. ஈசனையே பணிந்துருகி யின்பமிகக் களிப்பெய்திப்
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித்தங் கருவிதர மயிர்சிலிர்ப்பக்
கூசியே யுடல்கம்பித் திடுவார்மெய்க் குணமிக்கார்.                   6