பக்கம் எண் :

பெரியபுராணம்455

     (இ-ள்) வெளிப்படை. இறைவனையே வணங்கி மனமுருகி, அதனால் உள்ளூற
வரும் இன்பம் மிகுதலாலே மகிழ்ச்சியடைந்து, மொழி குழறி, மார்பின்மேற் பூசிய
திருநீற்றினைக் கண்ணீரின் பெருந்தாரையானது அழித்து அருவி போல வழியவும்,
மயிர்க்கூச்செறியவும் கூசிஉடல் நடுங்குவார்கள் மெய்க்குணமிகுந்தபத்தர்களாவார்கள்.
 
     (வி-ரை) இன்பம் - மனத்துள் நிகழும் இன்ப உணர்ச்சி; மிக - மிகுதலால்;
பேசின - போற்றின; வாய் - நா; “கூறுநாவே” (திருவா); தழுதழுத்தல் - குளறுதல்;
நீறழித்தலாவது - கண்ணீர் பெருகி மார்பில் பூசிய திருநீறுகரைதல். “திருமேனி
வெண்ணீற்று வண்ட லாட”, “மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும்”.
 
     அருவிதர - அருவிபோல இடையறாது பெருக.
 
     மெய்க்குணம் - மெய்ப்பாடு; உண்மையன்பின்குணம் என்ற குறிப்புமாம். (4152)

 

     நீற்றின்மிசை வழிந்திழிய - என்பதும் பாடம்.                      6
 
4153.     நின்றாலு மிருந்தாலுங் கிடந்தாலு நடந்தாலும்
மென்றாலுந் துயின்றாலும் விழித்தாலு மிமைத்தாலு
மன்றாடு மலர்ப்பாத மொருகாலு மறவாமை
குன்றாத வுணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார்.                7
 
     (இ-ள்) வெளிப்படை. நிற்பினும், இருப்பினும், கிடப்பினும், நடப்பினும்
உண்ணினும், உறங்கினும், இமைப்பினும், திருவம்பலத்தில் ஆடுகின்ற மலர்போன்ற
பாதங்களை ஒருபோதும் மறக்காமையாற் குறைவில்லாத உணர்வினையுடையவர்கள்
திருத்தொண்டர்கள் எனப்படும் குணமிகுந்தவர்களாவார்.
 
     (வி-ரை) இக்கூறப்பட்டவைகள் உலகியலில் மக்களுக்கு உள்ள அவத்தை
பேதங்கள். எவ்வவத்தையில் யாண்டிருந்தாலும் மக்கள் தம் அறிவைச்
சிவன்பாலேவைத்து மறவாத நிலையின் நிற்கவல்லராயின் அவரே பத்தராய்ப் பணிவார்
எனப்படுந் தன்மையுடையார் என்பதாம்.
 
     கிடத்தல் - நிலத்தில் உடல் தோயக்கிடத்தல்; பாயிற் படுத்தல்.
 
     மென்றாலும் - உணவு உண்ணும் போதும்.
 
     இமைத்தல் - துயிலும் விழிப்புமென்றிரண்டின் இடைப்பட்ட நிலை.
 
     மறவாமை - மறவாத தன்மையுடன்.
 
     இவ்வேழுபாட்டினும் தொண்டர்க்கின்றியமையாத எட்டுக் குணங்களும்
கூறப்பட்டன. “தொண்டரடித் தொழல்பூசைத் தொழின்மகிழ்த லழகார் துளங்கியவர்ச்
சனைபுரித றொகுதிநிய மங்கள், கொண்டபணி திருவடிக்கே கொடுத்த லீசன் குணமருவு
மருங்கதையைக் குலவிக் கேட்டு, மண்டிவிழி துளும்பன்மயிர் சிலும்ப லுன்னன்
மருவுதிருப் பணிகாட்டி வருப வாங்கி, யுண்டிகொளா தொழிதலென விவையோரெட்டு
முடையரவர் பத்தரென வுரைத்து ளோரே” என்று தொகுத்தனர் திருத்தொண்டர்
புராணசாரமுடையார்; “நின்று மிருந்துங்கிடந்து நடந்து நினை, என்றுஞ் சிவன்றா
ளிணை” என்பதும் காண்க.
 
     இவ்வேழுபாட்டுக்களும் பழய ஏட்டுப்பிரதிகளில் இல்லை.              7
 
4154. சங்கரனுக் காளான தவங்காட்டித் தாமதனாற்
பங்கமறப் பயன்றுய்ப்பார்; படிவிளக்கும் பெருமையினார்;
அங்கணனைத் திருவாரூ ராள்வானை யடிவணங்கிப்
பொங்கியெழுஞ் சித்தமுடன் பத்தராய்ப் போற்றுவார்.           8