(இ-ள்) சங்கரனுக்கு.....பயன்றுய்ப்பார் - சிவபெருமானுக்கே ஆளாகிய தவத்தினை மேற்கொண்டு உலகு விளக்கித் தாம் அதனால் குற்றமறப் பயன் பெறுவர்; படிவிளக்கும் பெருமையினார் - உலகினை விளங்கச் செய்யும் பெருமையினை உடையவர்கள்; அங்கணனை...போற்றுவார் - அங்கணராகிய சிவபெருமானைத் திருவாரூரினை ஆளும் இறைவரைத் திருவடிகளில் வணங்கி மேன்மேல் எழுகின்ற சித்தத்துடனே பத்தராய்ப் போற்றுபவர்கள். |
(வி-ரை) துய்ப்பாரும் பெருமையினாரு மாவார்கள் பத்தராய்ப் பணிவார்கள் என்று இயைக்க; பெயர்ப்பயனிலை. |
தவம்காட்டி - தவம் - சிவவேடமும் சிவபூசையும்; காட்டுதல் - இவையுடைமையினால் உள்ளே நிகழும் அன்பினை அறியச் செய்தல். |
தாம் - தாமும் என எச்ச உம்மை விரிக்க; உலகறியவைத்த பயன்றருதலேயன்றித் தாமும் அத்தவத்தால் வரும்பயனை அனுபவிப்பர். உலகறியத் தவவேடம் பூணலேயன்றிக் தாம் அதன் பயன் துய்யாதாரும் உளராதலின் அவரினின்றும் வேறுபிரித்துணரத் தாமும் அதனாற் பயன்றுய்ப்பார் என்றார்; முத்தநாதன், அதிசூரன் முதலாகவந்த தருதவவேடத்தாரையும். வயிற்றுப்பிழைப்புக்காகத் தாங்கும் தவவேடத்தாரையும் நீக்குதலின் பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; பங்கமற - என்ற குறிப்புமது. பயன் - சாதனமுறையாலே தவத்தால் வரும் பயன். |
படி - உலகு; உலகருக்கு; இடவாகு பெயர்; படிவிளக்கும் - உலகை விளங்கச் செய்யும்; விளக்குதல் - எடுத்துக்காட்டாக நிற்றலால் அறிவுறுத்துதல்; நடந்து (ஒழுகிக்) காட்டுதல்; படி - இதன்படி என்ற மேற்கோள்நிலை (Example - உதாரணம்) என்றுரைக்கவும் நின்றது; பத்தர் குணங்கள் எட்டின் நிலை. |
அங்கணனைத் திருவாரூ ராள்வானை - “அரசினையாரூ ரமரர் பிரானை அடிபணிந்திட்டு” (திருவந் - 70) என்ற வகைநூற் கருத்தினை விரித்தவாறு. |
படிவிளக்கும் பெருமையினார் “உரை செய்த....அங்கத்தினோர்” (திருவந். 70) என்ற வகைநூற்கருத்தினைக் காட்டியவாறு. பொங்கி எழும் சித்தம் - மேன்மேல் அன்புபொங்கி எழும் உறைப்பாகிய சித்தம். |
பயன்றுய்யார் என்ற பாடம் தவறு. 8 |
பத்தராய்ப்பணிவார் புராணம் :- பண்பு - அடியார்களைக் கண்டாற் பசுவின்பின் கன்று போல அணைகுவர்; சிவபூசை செய்வோரைக் கண்டால் உவந்து பயன்பெறுகுவர்; அடியார்களையும் அரனையும் வழிபடுவர்; தாம் செய்யும் எத்தொழிலும் சிவனுக்காவன வென்றே செய்குவர்; சிவனடியார் கதையினைவிரும்பிக் கேட்பர்; எப்போதும் சிவனை மறவார்; உலகு விளங்கத் தவம் காட்டிப் பயன்பெறுவர்; பதிதராய் பணியும் படியினை உலகில் விளக்கம் செய்குவர்; அவரே சித்தம் பொங்கிய எழுச்சியுடன் பத்தராய்ப் பணிவார்கள். |
கற்பனை :- (1) ஆசையொடும் அரனை வழிபடுதலும் அடியாரை அடைந்து வழிபடுதலும் பத்திச்செயல்கள். |
(2) உடம்பாற் செய்வினைகள் யாவும் சிவன்பாலே யாகுக என்ற சித்தத்துடன் எல்லாத் தொழில்களும் செய்தல் வீடுபேற்றுக்குரிய சிறந்த சாதனம். |
(3) சிவனடியார் சரிதங்களை விரும்பிக்கேட்பது பத்தியின் தன்மைகளுட் சிறந்தது |
(4) எந்த அவத்தையினின்றாலும் சிவனை மறத்தலாகாது. |
(5) தவத்தை தாம் மேற்கொண்டு காட்டித் தாமும் பயன்றுய்த்தலும் அதனால் உலகை விளக்குதலும் பத்தரின் பண்பு. |
58. பத்தராய்ப்பணிவார் புராணம் முற்றும் |