பாதங்களின்மேல்; உகுத்த.....உத்தமர் - செலுத்திய மனத்தினுடனே பாடவல்லோர்கள் உத்தமர்களென்று கூறுவர். |
தொகுத்த - எல்லா மொழிகளினுஞ் சிறந்தன என்று பெரியோர்களாகிய முந்தையோர் தொகை செய்த மொழிகள் வடமொழியும் தென்மொழியு மெனஇரண்டேயாம் என்றபடி; யாதொன்று - இரண்டில் ஒன்று; அவ்வகையால் - அமைந்த அவ்வளவினால்; “கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும் வகையால்” (பிள். தேவா. வைகாவில்:1.); நெற்றி - உச்சி; உகுத்தல் - முழுதும் வைத்தல். |
விரி:- 4155. (இ-ள்) வெளிப்படை. அசுரர்களது மூன்று புரங்களையும் எரித்தவரும், பூணாக நாகங்களை யணிந்தவரும், ஞானம் முதிர்ந்த இடத்து வெளிப்படும் ஒப்பற்ற பொருளானவரும், எல்லாவுலகங்களையும் தமது மாயாசத்தியால் உளவாக்கியவரும், கருவிகரணங்களாற் காணப்படாதவராயினும் அவற்றுள் நிறைந்து நின்று காட்டுபவரும் ஆகிய பரமனையே பாடுவார்களது பெருமையினைப்பாடுவோம். |
(வி-ரை) உரன் - ஞானம்; ஈண்டுப்பதிஞானம் என்ற பொருளில் வந்தது. “உரனென்னுந் தோட்டியான்” (குறள்); உரனில் வரும் - பதிஞானத்தாலறியப்படுபவன்; “உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன்னிற்குமே” (தேவா). |
உலகனைத்துமானான் - உலகமெங்கும் நிறைந்தவன் என்பதுமாம்; ஆனான் - ஆக்கினான். “அவையே தானேயாய்” (போதம் - 2). |
காணாமல் - நிறைந்தான் - காணமுடியாதபடி அங்கு நிறைந்து நின்று காட்டுபவன்; காணாமல் - பசுஞானத்தால் அறியப்படாதவன். |
செற்றானை - முதலிய ஐந்தினையும் என உம்மைவிரித்து, இவ்வைந்து குணங்களையுமுடைய பரமனையே என்க. ஏகாரம் பிரிநிலை. |
இப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை. |
கண்ணாந்து நின்றானை - என்பதும் பாடம். 1 |
4156. | தென்றமிழும் வடகலையுந் தேசிகமும் பேசுவன மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக ஒன்றியமெய் யுணர்வோடு முள்ளுருகிப் பாடுவார் பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார். 2 |
(இ-ள்) தென்றமிழும்.....தேசிகமும் - தென்றமிழும் வட மொழியும் பிறதேச மொழிகளும் யாதொன்று அடுத்ததாகக் கைவரினும்; பேசுவன...பொருளாக - திருவம்பலத்தில் நடம் புரியும் வள்ளலாகிய ஸ்ரீ நடேசப் பெருமானையே அவற்றுள் பேசப்படும் உயர்ந்த குறிக்கோளாக, உட்கொண்டு; ஒன்றிய......பாடுவார் - ஒன்றாகப் பொருந்திய மெய்யுணர்வினோடும் மனமுருகிப் பாடுபவர்களே; பன்றியுடன்...பாடுவார்- பன்றியாகிய விட்டுணுமூர்த்தி யுடனே அன்னப்பறவையாகிய பிரமதேவனும் அறியமுடியாத பரமனையே பாடுவார் எனப்படுவார்கள். 2 |
(வி-ரை) பொருளாக....உள்ளுருகிப் பாடுவார் - பரமனையே பாடுவாராவர் - என்று முடிக்க; ஆவார் என ஆக்கச்சொல் வருவிக்க. பின்னுள்ள பாடுவார் என்ற பெயர்ப்பயனிலைகொண்டு முடிந்த தென்றலுமாம். |