பக்கம் எண் :

பெரியபுராணம்459

    தென்றமிழும் வடமொழியும் தேசிகமும் - ஆகிய இவற்றுளொன்று கிட்டுவது
எதுவாயினும் அது என்க. வடமொழி - ஆரியம்; “ஆரி யத்தொடு செந்தமிழ்ப்பயன்”,
“தமிழ்ச்சொலும் வடசொலுந் தாணிழற் சேர” (தேவா), “ஆரிய முந்தமி ழும்முட
னேசொலி” (திருமந்), “வடமொழியுந் தென்றமிழு மறைகணான்கு, மானவன்காண்”
(தேவா). சிறப்புப்பற்றித் தமிழை முன்வைத்து, வடகலையை அதன்பின் சார்த்தி
ஓதினார்.
    
     தேசிகம் - பிற தேசமொழிகள்; திசைச் சொல்; பேசுவன - பேசப்படுவன;
பேசுவன - பொருளாக - என்க; தென்றமிழ் - முதலியன சொல்லும், வள்ளல் -
சொல்லாற் குறிக்கப்படும் பொருளுமாக; “உரையின் வரையும் பொருளி னளவு,
மிருவகைப் பட்ட வெல்லை” (11. திருமுறை - கோயினான்).
 
     ஒன்றிய...உருகி - இவை மனநிலை; முன்கூறிய சொல்லும் பொருளும் -
பாட்டு; இங்குக் கூறியவை பாடுங்கால் உள்ள மனநிலை; இம்மனநிலைகள்கூடாது
பாடுமவர்களது பாட்டினாற் பயனில்லை என்பதாம்; கூலிக்குப் பாடுவார்களது பாட்டில்
மயங்கிப் பொறியிழந்து வீழும் உலகமாக்கள் இவ்வுண்மையினை உணர்ந்துய்வார்களாக.
உள்உருகி - மனமுருகி.
 
     ஒன்றுதல் - சிவபரம் பொருளோடு வேறின்றி மனமொழிகள் ஒற்றித்தல்;
 
     வள்ளலையே பொருளாக - பாடுவார் - சிவனையே பொருளாகக்கொண்ட
பாட்டுக்களே பாடத்தக்கன. ஏனையோர்களைப் பொருள்களாகக் கொண்டவை
பாடத்தக்கன வல்லவென்பது; திருக்கோவையார் - ஞானஉலா - முதலியவற்றின்
பொருள் காண்க; வள்ளல் - என்றதனால் இடைவிடாமை பற்றிச் சிவனடியாரையும்
உள்ளிட்டுக் கொள்க. ஏகாரங்கள் பிரிநிலை.                                  2
 
     இவர்களை இசைத்தமிழ் வல்லார் நால்வருள் வைத்தார் உமாபதியார், இசைத்
தமிழாவது
ராகம், தாளம், மொழிப்பாட்டு என்ற இம் மூன்றும்
இசைந்திருத்தலையுடைய பாட்டு என்றும், தாள அளவுக்கேற்ற குறிலும், நெடிலும்
இசையளவு முதலிய ஓசைக்கேற்ற ஓசையும், எழுத்துக்களும், அமைந்த தமிழ்ச்
சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலோடு இடத்திற் கேற்றவாறு வேறு மொழிச் சொற்களும்
அமைந்திருத்தல் வேண்டும். இங்ஙனம் இலக்கணமும் இலக்கியங்களும் உள்ளன
வென்றும் கூறுவர்.
 
     பரமனையே பாடுவார் புராணம் - பண்பு - சிவனையே பொருளாகக்
கொண்டு தென்றமிழ், வடமொழி, தேசிகம் என்றிவற்றின் வாய்த்த ஏதானுமொன்றிற்
சிவனையே பொருளாகக் கொண்ட இய லிசைப் பாட்டுக்களை உரிய இசைவாய்த்த
வகையால் ஒன்றிய மெய்யுணர்வினுடன் உள்ளுருகிப் பாடும் மெய்யடியார்கள்
பரமனையேபாடுவார் எனப் படுவார்கள்.
 
     கற்பனை :- (1) கீதங்கள், தென்றமிழ் வடமொழி தேசிகம் என்ற இவற்றில்
வாய்த்த எம்மொழியினும் பாடத்தகுவன.
 
     (2) அவற்றுள் சிவனடியே பொருளாகக் கொண்ட இயலிசைப் பாட்டுக்களே
பாடத்தக்கன.
 
     (3) அப்பாடல்கள் ஒன்றித்த மெய்யுணர்வினோடும் உள்ளமுருகிப் பாடத்தகுவன.
 

59. பரமனையேபாடுவார் புராணம் முற்றும்