மதிலாற் சூழப்பட்டுள்ளது; செல்வன் - மேம்பட்ட ஐசுவரியத்தை யுடையவன்; சிவன்; செல்வநெறி - முத்திநெறி; செல்வம் -முத்தித்திரு; அணித்தாய - மிக அணிமையாகிய; சமீபித்த; திருவாரூர்ப் பிறந்தார்களைப் பணிதல் முத்தியை அணிமையில் தேடித்தரும் என்பதாம். |
விரி :- 4158. (இ-ள்) அருவாகி...மணவாளன் - அருவமாயும், உருவமாயும், எல்லாப் பொருள்களுமாயும் நின்ற பெருமானும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மையாரது மணவாளனாரும் ஆகிய இறைவர்; மகிழ்ந்தருளும் திருவாரூர்ப் பிறந்தார்கள் - மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருவாரூரில் பிறந்தவர்களுடைய; திருத்தொண்டு....தகைமையதோ - திருத்தொண்டினைச் சிறியேனால் ஒருவாக்கினாலே தெரிந்து உணரும்படி உரைப்பது இயலும் தன்மையதாகுமா? ஆகாது. என்றபடி. |
(வி-ரை) இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை. |
அருவாதல் - உருவாதல் - இறைவரது பொதுவியல்பெனப்படும் தடத்த இலக்கணம். |
அனைத்துமாய்நின்ற - எல்லாமாய் நிற்கும்நிலை. ஆதல் - நிறைதல் என்ற பொருளில் வந்தது; எங்கும் நிறைந்த தன்மை; சர்வ வியாபகம் என்பர்; ஆய் - மாயையினால் எல்லாவற்றையும் ஆக்கும் தன்மை குறித்தது என்றலுமாம். நின்ற திருத்தாண்டகப் பொருளைப் பார்க்க. "அவையே தானே யாய்" - (போதம் - 2) "அருவமு முருவா ரூப மானது மன்றி நின்ற வுருவமு மூன்றுஞ் சொன்ன வொருவனுக் குள்ள வாமே." (சித்தர்). |
உணர உரைத்தல் ஒருவாயால் ஆம் தகைமையதோ என்க. "ஒருநாவுக் குரை செய்ய வொண்ணாமை" (1266) என்ற கருத்து. ஓகாரம் எதிர்மறை குறித்தது. |
திருத்தொண்டு - திருத்தொண்டுகள்; சாதியொருமை. |
தேர்ந்துணர - தெரிந்துரைக்க - என்பனவும் பாடங்கள். 1 |
4159. | திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் றிருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்க ளாதலினால் றருக்கியவைம் பொறியடக்கி மற்றவர்தந் தாள்வணங்கி யொருக்கியநெஞ் சுடையவர்க்கே யணித்தாகு முயர்நெறியே. 2 |
(இ-ள்) திருக்கயிலை...ஆதலினால் - பெருக்கிய சிறப்பினையுடைய திருவாரூர்ப் பிறந்தார்கள் திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானது கணங்களே யாவார்கள்; ஆதலினாலே; தருக்கிய....உடையவர்க்கே - செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி மற்று அவர்களுடைய திருவடிகளை வணங்கி ஒற்றுமைப்படுத்திய மனத்தையுடையவர்களுக்கே உயர்நெறி அணியதாகும். |
(வி-ரை) பிறந்தார்கள் - கணத்தார்கள் - ஆதலினால் என்க; சிவகணத்தவர்களே அத்தவத்தினால் திருவாரூரில் வந்தவதரிக்கப்பெற்றவர்கள்; "திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்" (3592). ஆதலினால் - கணத்தவர்களே இவர்களாதலினால் இவர்களது திருவடி வணங்குதல் சிவகணங்களை வணங்கிய பயன் தந்து உயர்நெறியினை அணுகச் செய்யும் எனக் காரணக் குறிப்புப்பட உரைக்க. திருக்கணங்களே என்ற தேற்றேகாரமும், ஐம்பொறியும் என்ற முற்றும்மையும் தொக்கு நின்றன. |