உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
62. முப்போதுந் திருமேனி தீண்டுவார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (10) |
வகை |
| “நெறிவார் சடையாரைத் தீண்டிமுப் போதுநீ டாகமத்தின் அறிவால் வணங்கியர்ச் சிப்பவர் நம்மையு மாண்டமரர்க் கிறையாய்முக் கண்ணுமெண் டோளுந் தரித்தீறில் செல்வத்தொடும் உறைவார் சிவபெரு மாற்குறை வாய வுலகினிலே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (74) |
விரி |
4160. | எப்போது மினியபிரா னின்னருளா லதிகரித்து மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய் முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர். 1 |
புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவது, பத்தராய்ப்பணிவார் புராணத்துள், ஐந்தாவது, முப்போதுந் திருமேனி தீண்டுவார் புராணம் கூறத்தொடங்கி அவர்களது பண்பு கூறுகின்றார். |
தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க. முப்போதும் - காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்திப் பொழுதுகள். “முட்டாத முச்சந்தி மூவா யிரவாக்கு மூர்த்தியென்னப் பட்டானை” (நம்பி - கோயில் - 7) “சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர்” (நம். தேவா); உம்மை முற்றும்மை; திருமேனி - சிவலிங்கம் முதலிய சிவக் குறிகள்; தீண்டுதல் - தீண்டித் திருமஞ்சன மாட்டுதல், அணி, மாலை, சாந்து, சாத்துதல் முதலாகிய அகம்படித் தொண்டு செய்தல். திருமேனி - வடிவம்; இறைவருக்குத் திருவைந்தெழுத்தும் பஞ்சப்பிரமம் முதலிய மந்திரங்களும் தூலவடிவம்; ஆன்மா சூக்குமவடிவம்; சித்சத்தி அதிசூக்கும் வடிவம். மந்திர நியாசம் செய்யப்பட்ட சிவலிங்கம் முதலிய வடிவுகளும் இப் பெயரான் திருமேனி யென்று உபசாரமாக வழங்கப்படும். |