மந்திரத்தினால் - சத்தியோசாத மந்திரம் சொல்லி. |
ஏற்ற - ஏற்றல் - கொள்ளுதல்; எடுத்தல்; ஏந்துதல்; இது சாந்திகம், பௌட்டிகம், காமதம் என மூவகைப்படும்; சாந்திகம் - கோமயமிடும்போது பசுவின் பிற்றட்டிலே கைவைத்து ஏற்பது; பௌட்டிகம் - நிலத்தில் விழுமுன் தாமரையிலையில் ஏற்பது; காமதம் - நிலத்தில் விழுந்தபின் எடுப்பது. |
சிவமந்திர வோமத்தால் - சிவாங்கி - சிவமந்திரங்களால் உளதாக்கி வளர்த்த சிவாக்கினியாகிய ஓமத்தீ. |
இட்ட - தீயில் இட்டுச் சாம்பராக்கி எடுத்த. |
திருக்கயிலையில் இடபதேவருடன் வாழ்கின்ற நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வழியாய்ச் சிவனாணைப்படித் திருப்பாற்கடலினின்றும் இவ்வுலகில் வழிவழிவரும் பசுக்களுள், ஈன்ற பத்து நாட்குட்பட்டதும், ஈனாத கிடாரியும், நோயுடையதும், கன்று செத்ததும், கிழடும், மலடும், மலந்தின்பதும் ஆகிய இவற்றை நீக்கிச் சிறந்தனவற்றுள், பங்குனி, தை மாதங்களில் வைக்கோலை மேய்ந்த பசுச் சாணத்தை முன்கூறிய வகையால், அட்டமி, அமாவாசை - பௌர்ணமி, சதுர்த்தசி, இந்நாட்களில் சத்தியோசாத மந்திரத்தால் ஏற்று, மேலிருக்கும் வழும்பை ஒழித்து, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தாற் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டை செய்து, ஈரமாகவேனும் உலர்ந்தபின்னரேனும், ஓமத்தீயினுள் ஈசானத்தால் இட்டுச் சுட்டு எடுத்த நீறு கற்பமாகும் என்பதாம்; இது சிவாகமவிதி. |
அநுகற்பநீறு |
4165. | ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண் டழகுறநுண் பொடியாக்கி யாவின் சுத்த நீரணிவித் தத்திரமந் திரத்தி னாலே நிசயமுறப் பிடித்தோம நெருப்பி லிட்டுச் சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத் திருநீறா மநுகற்பந் தில்லை மன்றுள் வாரணியு முலையுமையாள் காண வாடு மாணிக்கக் கூத்தர்மொழி வாய்மை யாலே. 3 |
(இ-ள்) தில்லை மன்றுள்.....வாய்மையாலே - தில்லையம்பலத்திலே வார் அணிந்த தனங்களையுடைய உமையம்மையார் காணும்படி திருக்கூத்தியற்றுகின்ற மாணிக்கக்கூத்தப் பெருமான் அருளிய சிவாகம விதிப்படி; ஆரணியத்து...பொடியாக்கி - காட்டில் உலர்ந்த பசுச்சாணத்தைக் கொண்டுவந்து சிறக்க நுண்ணிய பொடியாக்கி; ஆவின்....கொண்ட - பசுவினது சுத்தமாகிய கோசலத்தை விட்டுப் பிசைந்து அத்திரமந்திரத்தினாலே உண்டையாகப் பிடித்து ஓமத்தீயில் இட்டுச் சிறப்புற வெந்தபின் கைக்கொண்ட செல்வத்திருநீறு அநுகற்பமாம் - செல்வமாகிய திருநீறு அநுகற்பமெனப்படும். |
(வி-ரை) ஆரணியம் - பசுக்கள் மேயும் காடு; ஆவின் சுத்த நீர் - பசுவின் தூய மூத்திரம்; சுத்தம் - இயற்கை யடைமொழி; சுத்தம் செய்யும் நீர்என்க. |
நீர் அணிவித்துப் - பிடித்து - என்க. நிசயம் - திரட்சி; உண்டை. |
வெந்து கொண்ட - வெந்தபின் கைக்கைக்கொண்ட; வெந்து - வினையெச்சத்திரிபு; ஓம நெருப்பு - சிவ ஓமத்தீ. |