னத்துக்கொண்டு - புதிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு; புலி ........போற்றி - புலித்தோலை உடுத்த இறைவரை வணங்கி; நீற்றை முழுவது மெய்யணிவர் - அத்திரு நீற்றினைத் திருமேனி முழுவதம் பூசுவர்; இவரே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார். |
(வி-ரை) இவரே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார் என்பது இசையெச்சம். |
சாதியினிற் றலையான - என்பது பிறப்பின் மேன்மையும், தருமசீலர் - என்பது அக்குலத்தின் ஒழுக்க மேன்மையும் குறித்தன; சாதி என்பது பிறப்பினால் வருவது; நெல் முதலிய விதைமணிகள் பொறுக்கி எடுத்து, மேலும் விளைந்தபின் பொறுக்கி, இவ்வாறு தேர்ந்தெடுத்த மணிகளை வேறு சாதியாகக் குறிக்கும் உழவுத் தொழில் முறை பற்றி இங்கு வைத்துக் காணில், ஒழுக்கம் பற்றி வழிவழி வரும் குண நிலை மேன்மைகள் புலப்படும். சாதி குலம் பற்றிய பூசல்களும் ஒழிந்துபோம்; |
தத்துவத்தின் நெறி - இஃது உயிரினைப்பற்றி வரும் தத்துவ ஞானம் பற்றிய நெறி; உண்மைநெறி; தத்துவம் - உண்மை; சிவம்; சிவநெறி; |
கொள்கை நீதியினிற் பிழையாது - கொள்கை - என்றது முன் கூறிய உடல் - உயிர் இருநெறியும் பற்றிய ஒழுக்கத்தில் தாம் தாம் பற்றி நின்றதோர் கொள்கை வழக்கு; இவை பலப்பலவாகி இப்புராணத்துள் வந்த அடியார்களது பலதிறப்பட்ட தொண்டு நெறிகளை உணர்த்திற்று; நெறி - தொண்டின் நெறி; திருநீற்று நெறியில் நின்ற மெய்ப்பொருளார் - ஏனாதியார் வரலாறுகள் இங்குக் கருதற்பாலன. |
ஆதிவரும் மும்மலமும் - அநாதியாக உயிரினைப்பற்றிப் பிறப்பிற்கு காரணமாகி வரும் மூலமலங்கள். ஆதி - தொடக்கம்; மும்மலமும் - என்ற உம்மையினால் மலவாதனையும் கொள்க. அறுத்தல் - வலியின்றிச் செய்தல்; பாசனம் - பாத்திரம். 6 |
முழுநீறு பூசிய முனிவர் புராணம் - பண்பு - சாதியிற்றலையானவர்; தரும சீலமுடையோர்; தத்துவ நெறி யுணர்ந்தோர்; தமது கொள்கை நீதி பிழையாத நெறி நின்றோர்; நித்த நியம அங்கியில் (மூன்று வகைப்பட்ட) விதிப்படி எடுத்த திருநீற்றைப் புதிய பாத்திரத்திற்கொண்டு சிவனைப் போற்றி மேனி முழுவதும் அணிவோர்கள் முழுநீறு பூசிய முனிவர்கள் எனப்படுவர். |
கற்பனை :- (1) திருநீறு பெறும் வகையால் நான்கு வகைப்படும். இவற்றுள் அகற்பம் ஆகாது; ஏனைய கற்பம், அநுகற்பம், உபகற்பம் ஆவன. |
(2) இவை சிவாகமங்களின் விதித்தன. |
(3) முழுநீறு பூசிய முனிவராந் தன்மையோர் சாதியிற்றலையானவரும், தரும ஒழுக்கமுடையவரும், தத்துவ நெறியுணர்ந்தோரும், தமது கொள்கை பிழையாத நெறி நிற்போரும் ஆவர். |
(4) திருநீறு, நித்த நியம அக்கினியில் விதிப்படிக்கொண்டு புதிய பாசனத்தில் ஏற்கத்தக்கது. |
(5) திருநீற்றை அணியும்போது சிவனை உன்னி வணங்கி அணிதல் வேண்டும். |
(6) பொடியாகப் பூசும்போது மெய்ம் முழுதும் திருநீறு அணியலாம். |
(7) திருநீறு, மும்மலங்களையும் அறுத்து உயிருக்கு உய்திதரும். |
63. முழுநீறுபூசிய முனிவர் புராணம் முற்றும் |