திருவாரூர்க் குளத்தில் அவர் திருவருளாற் பெற்றதுவும், அவ்வாறு பெறும் போது மாற்றுக் குறைய அதனையும் நிறையத் திருவருளாற் பெற்றதுமாகிய வரலாறுகளைக் குறித்தது. (ஏயர்கோன் - புரா - 104/3251 - 105/3264; மேற்படி 127/ 3281 - 137/ 3291; பாட்டுக்கள் பார்க்க.) வெய்ய - விரும்பத்தக்க; வெம்மை விருப்பம்; அடியாரிடுக்கண்களைப் போக்கும் படையாதலின் விருப்பம் விளைப்பதென்க; வெம்மையாகிய கொடிய என்பாரு முண்டு. கொள்ளாது - பெற்றவுடன் எடுத்துக் கொண்டு போகாமல்; வாசி - மாற்றுக் குறைவு; ஈண்டு அதனை நிறைவாக்குதல் குறித்தது; கேட்பது - அறிந்தார் சொல்லக் கேட்பது. வெய்ய பொன் என்று கூட்டி உரைப்பதுமாம். |
விரி :- 4170. (இ-ள்) செற்றார்தம்...போதில் - பகைவர்களது திரிபுரங்களை எரித்த மலை வில்லை ஏந்திய சிவபெருமானது செல்வ நிறைந்த திருமுருகன் பூண்டியின் வழியிற் போகும்போது; சுற்றாரும்.....எல்லாம் - சுற்றி நிறைந்த வில்வேடர்கள் பறித்துக் கவர்ந்து கொண்ட மிக்க நிதியின் சுமைகளை யெல்லாம்; சுமந்து.....உடன் செல்ல - என்றும் இளமுலை நாயகியாராகிய உமை அம்மை பங்கரது முதன்மையுடைய பூதகணங்கள் தாமே சுமந்து கொண்டு உடன் போதும்படி; முடியாப் பேறு......ஆமே - அளவற்ற பெரும் பேற்றினைப் பெற்ற நம்பியாரூராது திருவடிகளைத் துதிக்க அடியேன் முன்னைப் பிறவிகளிற் செய்த தவங்கள் மிகப் பெரியனவாகும். |
(வி-ரை) முன் பல பிறவிகளிலும் செய்த பெரிய தவங்கள் பலவற்றின் பயனாலன்றி நம்பிகளது கழல்பரவும் பேறு வாய்க்கப் பெறாதென்பது. |
செல்வத் திருமுருகன் பூண்டியினில் - வேடுவர் உருவொடு சிவகணங்கள் வந்து நிதி பறித்தது செல்வமின்மையாலன்று; தாமே மிக்க செல்வமுடையார் என்பது குறிப்பு; “வாங்கிப் பின் கொடுப்பதற்கோ” (3912) என்று குறித்தல் காண்க. |
வேடர் - வேடர் வடிவில் வந்த சிவகணங்கள். |
முற்றாத முலையுமையாள் - தல அம்மை பெயர். “ஏந்து பூண் முலைமங்கை” (பதிகம்). |
கணமே - ஏகாரம் தேற்றம்; உடன் செல்ல - ஏந்தித் துணை போத. |
மூடியா - அளவுபடாத; பெற்றார் - நம்பிகள்; வினையாலணையும் பெயர். |
தவம் - சாதி யொருமை. 2 |
64. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் முற்றும். |
11. பத்தராய்ப் பணிவார் சருக்க முற்றும். |