உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
65. பூசலார் நாயனார் புராணம் |
தொகை |
| “மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல் (வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு) மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (11) |
வகை |
| “பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான் கதுமெனச் செய்குவ தென்றுகொலா?” மென்று கண்டுயிலா ததுமனத் தேயெல்வி தோறு நினைத்தருள் பெற்றதென்பர் புதுமணற் றென்ன லுலாநின்ற வூர்தனிற் பூசலையே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (78) |
விரி |
4171. | அன்றினார் புரமெரித்தார்க் காலய மெடுக்க வெண்ணி யொன்றுமங் குதவா தாக “வுணர்வினா லெடுக்குந் தன்மை நன்” றென மனத்தினாலே நல்லவா லயந்தான் செய்த நின்றவூர்ப் பூச லார்தம் நினைவினை யுரைக் லுற்றாம். 1 |
சருக்கம் :- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டாவதாக “மன்னியசீர்” என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகைப் பாசுரத்திற் போற்றும் அடியார்களின் வரலாறு கூறும் பகுதி. |
புராணம் :- பன்னிரண்டாவது மன்னியசீர்ச் சருக்கத்துள் முதலாவது பூசலார் நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி. |
தொகை :- நிலைபெற்ற சிறப்பினையுடைய, வேதமோதும் வாக்கினையுடைய, திருநின்றவூரில் அவதரித்த பூசலார் நாயனாருக்கும் (வரிவளை யணிந்த மானியார் என்னும் மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் நேச நாயனாருக்கும்) அடியேனாவேன். |
மன்னியசீர்ப் - பூசல் என்று கூட்டுக. மன்னிய சீராவது புறப்பூசையினும், நிலைபெற்ற உறைப்புடைய அகப்பூசைத் தொழில் சிறப்புடையது என உலகினுக்கு இறைவர் காட்டியருளக் கருவியாயமைதல்; நாவன் - வாக்கினையுடையவன்; “மறைபயி றிப்பிய வாசகன்” (திருமுறை - ஆளுடைய பிள் - கலம் - 9); நின்றவூர் - நாயனாரது பதி; பூசல் - நாயனாரது பெயர். இங்குத் தொகை நூலுள் ஓரடியிற்பாதியில் மூன்று நாயன்மாரைப் போற்றிய சிறப்புக்குறிக்க. |