பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்486

     வகை :- பதும.......என்று - தாமரையின் நல்லமலர் போன்ற பாதத்தையுடைய
சிவனுக்கு ஒரு கோயிலை யான் விரைவாக அமைப்பது எப்போது என்று கவன்று;
கண்டுயிலாது....என்பர் - கண் உறக்க மின்றி அதனையே பகலுமிரவும் தமது மனத்தில்
நினைந்து அந்நினைப்பினாலே கோயில் எடுத்துத் திருவருளினைப் பெற்றது என்று
எடுத்துக் கூறுவர்; புது...பூசலையே - புதிய மணற் கானல்வழியே தென்றற் காற்று வந்து
வீசுதற்கிடமாகிய திருநின்றவூரில் வந்த பூசலார் நாயனாரையே.
 

     கோயிலைச் செய்குவதென்று கொலாம் - நிதியின்மையால் கோயில் அமைக்க
வழியின்றி வேறு எவ்வாற்றானமைப்பேன் என்று கவலைப்பட்ட நிலை;
கண்துயிலாது........நினைந்து - தூக்கமின்றி அப்பொருளையே நாள்தோறும் எண்ணி;
எல்லி - பகல்; இங்கு நாள்என்ற பொருளில் வந்தது. எல்லி தோறும் - நாடோறும்;
நினைந்து - நினைப்பினாற் கோயில் அமைத்து; “நினைவினை” (4171) என்பது
விரிநூல்; பூசலைப் (பற்றி) - நினைந்தருள் - பெற்றது - என்பர் என்று கூட்டுக.
நினைந்து - பெற்றது என்க.
 

     ஊரும் பேரும் பண்பும் தொகைநூல் பேசிற்று; இவற்றுடன் வரலாறும் வகைநூல்
வகுத்தது.
 
     விரி : - 4171. (இ-ள்) அன்றினார்.......எண்ணி - பகைவர்களுடைய புரங்களை
எரித்த சிவபெருமானுக்கு ஒருகோயில் அமைக்க எண்ணி; ஒன்றும் அங்கு உதவாதாக -
அதற்கு வேண்டும் நிதி ஒரு சிறிதும் அங்குக்கிடையாமற் போக; உணர்வினால்......என
- நினைப்பினாலே அமைத்தலே நல்ல பணியாகும் என்று உட்கொண்டு;
மனத்தினாலே...உற்றாம் - மனத்தினாலே நல்ல கோயிலை அமைத்த திருநின்றவூரில்
வந்த பூசலாருடைய நினைப்பினாலாகிய வரலாற்றினைச் சொல்கின்ே்றாம்.
 
     (வி-ரை) அன்றினார் - பகைவர்; “அன்றின ரரியென வருபவர்” (பிள்- வீழி -
வியாழக்கு - திருவிரா - 6); எடுத்தல் - அமைத்தல்; கட்டுதல்; ஒன்றும் - பொருள்
ஒரு சிறிதும்; முற்றும்மை.
 
     உதவாதாக - பெறாது போக.
 
     உணர்வினால் எடுக்கும் - மனத்தின் நினைத்தலாலே அமைக்கும்; நன்று -
இதுவே சிறந்ததாகச் செய்யத்தகுந்தது.
 
     மனத்தினாலே....செய்த - மனத்தின் செயலாற் கோயில் அமைத்த;
மனத்தினாலே - செய்த என்று கூட்டுக.
 
     நினைவினை - நினைப்பினாற் செய்த திருப்பணியினை; இப்பாடல் சில
பிரதிகளில் இல்லை.
 
     எடுக்க வேண்டி - என்பதும் பாடம்.                              1
 
4172. உலகினி லொழுக்க மென்று முயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான்மறை விளங்கு மூதூர்
குலமுதற் சீல மென்றுங் குறைவிலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வ மல்கி நிகழ்திரு நின்ற வூராம்.                       2
 
     (இ-ள்) உலகினில் ......நாட்டு - இ ந்நிலவுலகில் நல்லொழுக்கம் எக்காலத்திலும்
உயர்ந்து ஓங்கும் பெருமை யுடைய தொண்டை நாட்டிலே; நலமிகு.......மூதூர் - நலம்
மிக்க சிறப்புடைய நால்வேதங்களும் விளங்குதற் கிடமாகிய பழைய ஊராகும்; குலமுதல்
....திருநின்ற ஊராம் - குலத்திற்கு முதன்மையாகிய ஒழுக்கம் எந்நாளும் குறைவில்லாத
மறையவர்கள் தமது கொள்கையின் நிலைநின்ற செல்வம் நிகழ்கின்ற திருநின்ற
வூராகும்.