பக்கம் எண் :

பெரியபுராணம்489

     திரட்டி - ஒன்று சேர்த்து; வேண்டும் நிதியம் முற்றும் சேகரித்துக் கூட்டி.
 

     மனத்தினாற் - தேடி - நைவார் - பொருள் வளமில்லாதார் பணி செய்யப்
புகின் உலகம் ஆதரிக்காது வருந்தச் செய்யும் என்னுமியற்கை குறித்தது. ஏன்? பொருள்
வளமுள்ளார் தேடினும் உலகர் பணம் மனமுவந்து சிவன் பணிக்குதவ முன்வராதது
கண்கூடன்றோ? நைவார் - நைவாராகி; முற்றெச்சம்; நைவாராகிய நாயனார் என்று
வினைப்பெயராக வுரைப்பினுமாம்.
 

     மனத்தினாற் றிரட்டிக் கொண்டு - செல்வம் திரட்டுதல் மனத்தின் றொழிலிற்
றொடங்கும். அது முற்றினால் புறச் செல்வம் விளையும், ஈண்டு நாயனார் அகச்
செல்வமே ஆணிவேர் என்பதனை உணர்ந்து அதனைத் தேடி அமைத்தார்.
அகத்தொழிலே வினைவிளைவுக்குக் காரணமாகும் தன்மை திருமலைச் சிறப்பிற்
காண்க.                                                           5
 
4176.     சாதனத் தோடு தச்சர் தம்மையு மனத்தாற் றேடி
நாதனுக் கால யஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே
ஆதரித் தாக மத்தா லடிநிலை பாரித் தன்பாற்
காதலிற் கங்குற் போதுங் கண்படா தெடுக்க லுற்றார்.               6
 
     (இ-ள்) சாதனத்தோடு.....தேடி - கோயில் கட்டுதற்குரிய சாதனங்களோடு
தச்சர்களையும் மனத்தினாற் றேடிக்கொண்டு; நாதனுக்கு......நன்னாட் கொண்டே -
இறைவருக்கும் கோயில் செய்தற்குரிய நன்மை பெறும் நல்ல நாளும் வேளையும்
குறிக்கொண்டு; ஆதரித்து....பாரித்து - விரும்பி ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து;
அன்பால்......எடுக்கலுற்றார் - அன்பின் நினைவினாலே ஆசை மிகுந்து இரவினும்
உறங்காமல் கோயில் எடுக்கலாயினார்.
     (வி-ரை) சாதனம் - கோயில் எடுப்பதற்கு வேண்டும் கல் - மண் சுண்ணம் -
மரம் முதலாயின.
 
     தம்மையும் - தேடி - முன் பாட்டிற் பொருள் தேடியது பற்றிக் கூறியவாறே
என்று இறந்தது தழுவிய எச்சவும்மை.
 
     தச்சர் - கல் - மண் - மரமிவற்றாற் கோயில் எடுக்கும் பணியாளர்; சிற்பிகள்.
 
     நலம்பெறும் நன்னாட்கொண்டே - நன்மை பெறுவிக்கும் நன்னாளும் ஓரையும்
நிச்சயித்து அந்நாளில் அவ்வேளையில் தொடங்கி;
 
     ஆலயம் செய்நாள் - ஆலயப் பணிக்குரிய நாள்; செய் - கட்டுதற்குரிய.
 
     நலம்பெறும் - நலத்தினைப் பெறுவிக்கும்; செய்யும்.
 
     கொண்டே - ஏகாரம் தேற்றம்.
 
     ஆகமத்தால் - கோயில் சிற்பமும் கணிதமும்பற்றிச் சிவாகமங்களிற் கூறும்
விதியின்படி அளவு முதலியவை கண்டு; மேல் வரும் பாட்டுக்களில் உரைப்பனவும்
சிவாகமங்களில் விதித்த கோயிற் சிற்ப அமைப்புக்கள்.
 
     அடிநிலை - கடைகால்; அஸ்திவாரம் என்பர்; பாரித்தல் - பரப்புதல் -
கால்கொள்ளுதல்.
 
     அன்பால் - காதலில் - ஆலயம் எடுத்தல் அன்பினாலும், அதனைக் கங்குல்
போதும் கண்படாதெடுத்தல் காதலாலும் ஆவன. காதல் - ஆசை; விரைவில்
எடுத்து    முடித்துக் காணும் ஆசை; முறுகிய அன்பினால் விளைவது ஆசை.
     கங்குற்போதும் - உயிர்கள் எல்லாம் கண்படும் கங்குலிலும் என உம்மை
சிறப்பு. பகற் போதில் ஓய்வின்றி எடுப்பதன்றிக் கங்குலிலும் என இறந்தது தழுவிய
எச்சமுமாம்.                                                     6