நிலை இறைவரது தன்மைக்குக் கூடாதென்பதன்று; பூசலாரது பெருமையினை உலகறியச் செய்தலே திருவுள்ள மென்க. “தொண்டரை விளக்க” (4181) என மேற்கூறுதல் காண்க. |
பூசலன்பால் - பூசலென்பால் - சடையாரன்பர் - என்பனவும் பாடங்கள். 10 |
4181. | தொண்டரை விளக்கத் தூயோ னருள்செயத் துயிலை நீங்கித் திண்டிறன் மன்ன “னந்தத் திருப்பணி செய்தார் தம்மைக் கண்டுநான் வணங்க வேண்டு” மென்றெழுங் காத லோடுந் தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான். 11 |
(இ-ள்) தொண்டரை.....அருள்செய - தொண்டராகிய பூசலாரை உலகத்தார் அறியச் செய்யும் பொருட்டுத் தூயசிவபெருமான் இவ்வாறு அருளிச் செய்தாராக; துயிலை நீங்கி - துயிலுதலை விட்டு; திண்திறல்......காதலோடும் - திண்ணிய திறலினையுடைய அவ்வரசன் அந்தத் திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்கிட வேண்டும் என்று மேனமேல் எழுகின்ற பெருவிருப்பினோடும்; தண்டலை...சார்ந்தான் - சோலைகளின் கூட்டம் சூழ்ந்த திருநின்றவூரில் வந்து சார்ந்தனன். |
(வி-ரை) தொண்டரை விளக்க - இறைவர் அரசரது கனாவில் முன்கூறியபடி உரைத்தருளியதற்குக் காரணம் கூறியவாறு; “வாலிதா நிலைமை காட்ட” (378), “தம் தொண்டர் மறாத வண்ணமுங் காட்டுவான்” (407), “அல்ல னல்குர வான் போதிலும் வல்ல ரென்றறி விக்கவே” (445), “ஞாலத்தார் விரும்பி யுய்யும் அந்நெறி காட்டு மாற்றால்” (திருநீல - புரா - 10), “தொண்டரை விளக்கங்காண” என்பன முதலியவை காண்க. அருள் செய -அருளிச் செய்து மறைந்தருள. |
கண்டு நான் வணங்க வேண்டும் - அவரை விசாரித்துத், தம்மிடம் வரச்செய்ய வொட்டாது தாமே சென்று கண்டு வணங்க வேண்டும் என்பது தற்போத மற்ற அன்பின் பெருக்கு. நாயனாரை வணங்க வந்ததேயன்றிக் கோயில் தாபரம் காண அரசன் எண்ணி வந்தானல்லன்; இது திருவருட் குறிப்பு. |
எழு காதல் - மேன்மேல் பொங்கும் பெருவிருப்பம். |
சூழல் - கூட்டம்; செறிவு - இடம்; தண்டலை - சோலைகள். 11 |
4182. | அப்பதி யணைந்து “பூச லன்பரிங் கமைத்த கோயில் எப்புடை யது?” வென் றங்க ணெய்தினார் தம்மைக் கேட்கச் “செப்பிய பூசல் கோயில் செய்த தொன்றில்லை” யென்றார்; “மெய்ப்பெரு மறையோ ரெல்லாம் வருக” |
வென்றுரைத்தான் வேந்தன். |
(இ-ள்) வேந்தன் - அரசன்; அப்பதி....கேட்க - அந்தப்பதியினை யணைந்து பூசலார் என்னும் அன்பர் செய்த கோயில் எப்பக்கத்திலுள்ளது என்று அங்கு அணைந்தவர்களைக் கேட்க; செப்பிய......என்றார் - நீங்கள் சொல்லிய பூசலார், கோயில் செய்த ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்; மெய்....உரைத்தான் - அது கேட்டு, உண்மை நெறியினிற்கும் மறையவர்கள் எல்லாம் வருக என்று ஆணையிட்டான். |
(வி-ரை) அங்கண் எய்தினார் - தன் வரவு கண்டு அங்கு வந்த பதியவர். |
புடை - பக்கம். |
செப்பிய பூசல் - நீங்கள் சொல்லிய பூசலார் என்பவர். |