“மெய்ப்பெரு........வருக” - அங்கு எய்தினர் பூசல் கோயில் செய்ததொன்றில்லை என்று சொல்லவே, அவர் அறியார், மறையோர் அறிகுவர் என்று கொண்டு மறையோரைக் கூறினான் என்பதாம். அவருள்ளும் சிலர் அறிந்தும் சிலர் அறியாமலுமிருத்தல் கூடுமாதலின் எல்லாம் வருக என்றான் என்பதாம்; பூசலன்பர் - இருபெயரொட்டு; புடை - இடம், மெய்ப்பெருமறையோர் - ஆதிசைவர் என்ற குறிப்புப் போலும்; “சூழ்ந்த பெருமறை யவர்கு ழாமும் நம்பியும்” (தடுத் -புரா-65). 12 |
4183. | பூசுர ரெல்லாம் வந்த புரவலன் றன்னைக் காண “மாசிலாப் பூச லார்தா மா?” ரென, மறையோ ரெல்லாம், “ஆசில்வே தியனிவ் வுரா” னென்றவ ரழைக்க வொட்டான் ஈசனா ரன்பர் தம்பா லெய்தினான் வெய்ய வேலான். 13 |
(இ-ள்) பூசுரர்...காண - வேதியர்களெல்லாரும் வந்து அரசனைக்காண; மாசிலா.....ஆர் என - குற்றமற்ற பூசலார் தாம் யாவர்? என்று கேட்க; மறையோர்.....ஒட்டான் - அதற்கு மறையோர்கள் எல்லாம் அவர் குற்றமற்ற வேதியர்; இவ்வூரினர் என்றவர்களை அவரைப் போயழைக்க வொட்டாமல்; ஈசனாரன்பர்...வேலான் - இறைவரது அன்பராகிய பூசலாரிடத்தில் வெவ்விய வேலையுடைய அரசன் சென்று சேர்ந்தனன். |
(வி-ரை) பூசுரர் - நிலத்தேவர்; மறையவர்; புரவலன் - அரசன் - உலகங்காக்கின்றவன். |
என்றவர் - என்ற அவர்களை; அழைக்க வொட்டான் - அவர்கள் போய் அவரை அழைத்து வருதலை இசையாதவனாகி. |
ஒட்டான் - ஒட்டாதவனாகி; |
எய்தினான் - தான் சென்று சேர்ந்தனன்; வெய்ய வேலான் - வெய்ய வேலானாயினும் அன்பரிடம் விதிப்படி பணிதல் வேண்டி என்றபடி. |
ஒட்டா - தீசனார் - மாசிலாப்பூசலார் - என்பனவும் பாடங்கள். 13 |
4184. | தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் றொழுது “நீரிங் கெண்டிசை யோரு மேத்த வெடுத்தவா லயந்தான் யாதிங் கண்டர்நா யகரைத் தாபித் தருளுநா ளின்றென் றும்மைக் கண்டடி பணிய வந்தேன் கண்ணுத லருள்பெற்” றென்றான். 14 |
(இ-ள்) தொண்டரை.....தொழுது - சென்று அத்தொண்டர் பெருமானைக் கண்ட அரசர் அவரைத்தொழுது; நீர்.........யாது - தேவரீர் இவ்விடத்து எத்திசையார்களும் போற்றும்படி எடுத்த கோயில் எது?; இங்கு.......என்று - ஈண்டுத் தேவர் பெருமானாகிய சிவபெருமானை அத்திருக்கோயிலில் தாபித்தருளும் நாள் இன்று என்று தெரிந்து; உம்மை...பெற்று என்றான் - கண்ணுதற் பெருமானது திருவருளினால் அவ்வாற்றினைத் தெரிந்தவதனால் உம்மைக்கண்டு திருவடி தொழுவதற்கு வந்தேன் என்று சொன்னார். |
(வி-ரை) நீர் இங்கு.......அருள்பெற்று - என்றது அரசர் பூசலாரை நோக்கிக் கூறி வினாவியது. |
எண்டிசையோரும் ஏத்த - இறைவர் இத்திருப்பணியினை ஏற்றருளுதல் அறிவிக்க அறிந்தானாதலின் எல்லாரும் பரவும் நிலைமையினது என்றான். தான் எடுத்த கோயில் போன்ற தொன்றெனக் கருதினான் என்றலுமொன்று. |