இங்கு - ஏத்த - என்பது இந்நிலவுகில் வந்து துதிக்க என்றதாம்; இங்குத் தாபித்தருளும் - என்றது இவ்வூரில் கோயிலினுள் திருமேனியில் தாபித்தருளும், என்றதாம். |
கண்ணுத லருள்பெற்று - இறைவரது திருவருளால் அறிவிக்கப் பெற்று என்று தாம் அறிந்தவகையினை அந்நாயனாரது உயர்வு தோன்ற எடுத்துக் கூறியபடி. |
யாது? - அடிபணிய வந்தேன் - என்பது யாது? என்று வினாவியதற்குக் காரணங் கூறியவாறு. யாது என்று வினாவியது வேறொரு காரணம் பற்றியதன்று என்பதாம். |
தாபித்தருளுதல் - பிரதிட்டை; ஒருசொல். 14 |
4185. | மன்னவ னுரைப்பக் கேட்ட வன்பர்தா மருண்டு நோக்கி “என்னையோர் பொருளாக் கொண்டே யெம்பிரா னருள்செய் தாரேல் முன்வரு நிதியி லாமை மனத்தினான் முயன்ற கோயில் இன்னதாம்” என்று சிந்தித் தெடுத்தவா றெடுத்துச் சொன்னார். |
(இ-ள்) மன்னவன்.....நோக்கி - அரசர் இவ்வாறு சொல்லக் கேட்ட அன்பராகிய பூசலாரும் மருட்சியடைந்து அவரைப்பார்த்து; என்னை.....அருள் செய்தாரேல் - என்னையும் ஒரு பொருளாகக் கொண்டே எமது பெருமான் அருளிச் செய்தாராயின்; முன் வரும்.....இன்னதாம் என்று - முன்னர்ப்பெரும் நிதி கிடையாமையால் மனத்தினாலே முயன்று நினைந்து நினைந்து செய்த கோயில் இதுவாகும் என்று; சிந்தித்து.....சொன்னார் - சிந்தனையின் செயலாகவே செய்த கோயிலினைத்தாம் விளங்க எடுத்துக் கூறினார். |
(வி-ரை) மருண்டு - தாமும் இறைவருமே அறிய நின்ற இந்நிகழ்ச்சிகள், தாம் எதிர்பாராத நிலையில், இறைவர் திருவருளால் வெளிப்பட்டு அரசர் வினவ நேர்ந்தது பற்றி மனமருட்சியடைந்து; |
என்னை - என்னையும்; இழிவு சிறப்பும்மை தொக்கது; |
அருள் செய்தாரேல் - அருளிச் செய்து வெளிப்படுத்தினாராயின்; அவர்தாமே வெளிப்படுத்தினாராதலின் தாம் அதனை உள்ளவாறே சொல்ல வேண்டுமென்று நினைந்து சொல்லப் புகுந்து என்க. அல்லாவிடின் தமது பணியை அவர், எவரும் அறியவெளிப்படுத்துவாரல்லர் என்பதாம். |
நிதியிலாமை - நிதியில்லாமையால். |
மனத்தினால் முயன்ற - நினைந்து நினைந்து முயன்று எடுத்த. சிந்தித்தெடுத்தவாறு - சிந்தனையினாற் செய்த; மனத்தினால் முயன்ற கோயில் - என்பது ஆலயம்தான் யாது என்றதற்கு விடை; சிந்தித்தெடுத்தவாறு - என்பது தாபித்தருளுநாள் இன்று என்று அருள் பெற்றுப் பணியவந்தேன் என்றதற்கு விடை; ஆதலின் கூறியது கூறலன்மையாதல் உணர்க. |
இதற்கு, இவ்வாறன்றி, என்னையோர்.......சிந்தித்து - கோயில் அமைக்கத் தகுதியில்லாத சிறியேனாகிய என்னையும் ஒரு பொருளாகத் தமது பெருங் கருணையினாலே ஏற்றுக்கொண்டு எமது பெருமான் இவ்வாறு அருளிச் செய்தாராயின், முன்னே கோயிற் பணிக்கு வேண்டும் நிதியில்லாமையால் வருந்தி, அதற்கடுத்த நிலையில் மனத்தினாலாயினும் கோயில் எடுப்பேன் என்று முயன்று செய்த இக்கோயிலும் இவ்வாறு அருள் ஏற்கப் பெற்ற தன்மைய தாயிற்றே என்று திருவருட் பெருமையைச் சிந்தித்துத் துதித்து, என்றுரைத்தலும் பொருந்தும். |