பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்496

     எடுத்து - விரித்து; விளக்கி.
 
4186.     அரசனு மதனைக் கேட்டங் கதிசய மெய்தி “யென்னே!
புரையறு சிந்தை யன்பர் பெருமை!” யென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு மீண்டுதன் மூதூர்ப் புக்கான்.                16
 
     (இ-ள்) அரசனும்.....எய்தி - அரசனும் அதைக் கேட்டு அங்கு மிக்க அதிசயம்
அடைந்து; என்னே.......போற்றி - குற்றமற்ற சிந்தையினையுடைய அன்பரது பெருமை
இருந்தவாறுதான் என்னே! என்று அவரைத் துதித்து; விரை.....தாழ்ந்து - மணமிக்க
மாலை கீழே படியும்படி நிலத்தின் வீழ்ந்து வணங்கி; முரசு.......புக்கான் - முரசுகள்
சத்திக்கும் சேனைகளுடனே மீண்டு சென்று தனது பழைய ஊரினையடைந்தான்.
 
     (வி-ரை) அதிசயம் - பெருமிதமாக அறிந்து மகிழ்ந்த மன நிலை. “அதிசயம்
கண்டாமே” (திருவா).
 
     புரை அறு - புரை - குற்றம்; இங்கு நிதியின்மையாகிய குறை என்ற பொருளில்
வந்தது. புரை அறு சிந்தை அன்பர் -அக்குற்றத்தைத் தமது சிந்தையின் செயலால்
அறுவித்தவர் என்பது; செல்வ மென்பது சிந்தையின் நிறைவே”.
 
     பெருமை - இறைவரது திருவருளுக்கு இலக்காக விளங்குதல்.
 
     மாலைதாழ - வீழ்ந்து தாழ்ந்து - அன்பின் பெருமையின்முன் அரசரின்
பெருமை தாழ்ந்துவிழ; தன்முனைப்பு அற்றநிலை.
 
     மூதூர் - காஞ்சிபுரம். “கச்சிமூதூர்” (நம்பி).                        16
 
4187.    அன்பரு மமைத்த சிந்தை யாலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப்
பொன்புனை மன்று ளாடும் பொற்கழ னீழல் புக்கார்.              17
 
     (இ-ள்) அன்பரும்....தாபித்து - அன்பராகிய பூசலாரும் தாம் மனத்தினாலமைத்த
ஆலயத்தில் சிவபெருமானை நல்ல பெரும்பொழுது வரத் தாபித்து;
நலத்தினோடும்.....பேணி - நன்மையோடு அதன்பின்பு செய்ய வேண்டிய
பூசனைகளையெல்லாம் பெருமையோடும் பல நாட்கள் விரும்பிச் செய்து வாழ்ந்து;
பொன்புனை...புக்கார் - பொன்னாலியன்ற திருவம்பலத்தில் ஆடுகின்ற பொன்னடியின்
நீழலை அடைந்தனர்.
 
     (வி-ரை) அன்பரும் - அன்பர் செயல் கேட்ட அரசனும் மூதூர்ப்புக்கான் (4186);
அரசனால் உலகறிய விளக்கம்பெற்ற அன்பரும் தாபித்துப் - பேணி - நீழல் புக்கார்
என, உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
 
     சிந்தை(யால் அமைத்த) ஆலயம் - என்க. சிந்தையினால் எனக் கருவிப்
பொருளில் வரும் மூன்றனுருபு விரிக்க; சிந்தை - மனம் என்று கொண்டு,
சிந்தையின்கண் அமைத்த என ஏழனுருபு விரித்தலுமாம். சிவபூசை (ஆன்மார்த்த பூசை)
யில் அந்தரியாக பூசை (அகப்பூசை)யை முன்னே சிறப்பாகச் செய்யும்படி வரும்
சிவாகம விதிகள் காணக்.
 
     நன்பெரும் பொழுது - நல்ல வேளை; நற்பொழுது; பொழுது - ஓரை முதலிய
காலப்பாகுபாடு; பெருமையாவது சிவனைத் தாபித்தற்குப் யன்பபட்ட நலம்.