(7) நிதியில்லவர் சிவன் கோயில் அமைக்க முயன்றால் உலகம் அவரை ஆதரித்து நிதி தராது. |
(8) புறத்திலே கோயில் அமைக்க நிதியின்மையா லியலாமற் போயினும், அகத்திலே மனத்தினால் நிதியையும் சாதனத்தையும் தச்சரையும் தேடிக் கோயில் அமைத்தால் அப்புண்ணியத்தினு மிக்க பேறு பெறலாம். இது யாவரும் செய்யத் தக்கது; புறக்கோயிலமைத்தலினும் இது சிறந்ததுமாம். |
(9) புறத்தே அமைக்கும் கோயிலினும் அகத்தே அமைக்கும் கோயிலினில் இறைவர் மிக விரும்பி எழுந்தருளுவர். |
(10) மனக்கோயிலின் பெருமை இறைவரே உலகறியச் செய்யும் சிறப்புடையது. |
தலவிசேடம் - திருநின்றவூர் :- இது தொண்டை நாட்டில் உள்ளதோர் பதி; தேவாரப் பாடல் பெறாவிடினும் பூசலார் நாயனார் அவதரித்து மனக்கோயில் அமைத்துப் பணி செய்து அதில் இறைவரைத்தாபித்துப் பல நாள் பூசித்து இறையடியடைந்த சிறப்புடைய பதி; திருத்தொண்டத் தொகையுட் பேசப்படுதலால் தேவார வைப்புத் தலமுமாம். இப்போது தின்னனூர் என்று மருவி வழங்கப்படுகின்றது. இங்குச் சிவாலயம் உண்டு. அதில் பூசலார் நாயனாரது திருவுருவம் தாபித்து வழிபடப் பெறுகின்றது. கோயில் நன்கு கவனிக்கப்படுகின்றது. சுவாமி - மனக்கோயில் கொண்ட நாதர்; அம்மை - உமையம்மை. |
இது தின்னனூர் என்ற நிலையத்தினின்றும் தெற்கே கற்சாலை வழி ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. (தின்னனூர் நிலையத்தினின்றும் நேர் வடக்குக் கற்சாலை வழி 12 நாழிகை சென்றால் ஆரணியையடைந்து, அங்கு நின்றும் 6 நாழிகையளவில் திருக்கள்ளில் என்ற தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலத்தை அடையலாம்.) |
கச்சிக்கற்றளி - (4179) காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதல் கோயில் என்பர். இது மிகச் சிறந்த சிற்ப ஓவிய வேலைப்பாடுகளமைந்தது. திருக்கயிலாய மலையின் இயற்கையமைப்பினைப் போலவே சிகரங்களுடன் காணக் கோயில் அமைக்கப்பட்ட தென்பர். நாட்டுச் சரித்திர சம்பந்தமான சிறப்புக்கள் பலவுடையது. |
65. பூசலார் நாயனார் புராணம் முற்றும். |