பக்கம் எண் :

பெரியபுராணம்501

உண்மைப் பெருமை கண்டு விளங்கி உய்யும்படி தமிழாகரகிய ஆளுடைய
பிள்ளையாருக்கு அந்நோயினை விண்ணப்பித்து; வாசமலர்.....மானி - மணம்
பொருந்திய மலர்களைக் சூடிய கூந்தலையுடைய பாண்டிமா தேவியாராகிய மானியார்
என்றும் மங்கையர்க்கரசியம்மையார்; அவரால்....நாட்டகத்தே - அந்த ஆளுடைய
பிள்ளையாரது திருவருட்டுணையால் இந்நாட்டினில் அருகந்தர் என்னும் சமணர்களுக்கு
நாசம் விளைவித்தார்; கண்டீர் - காண்மின்கள்.
 

     பூசல் அயில் - பூசல் - போர்; போரில் வெல்லும் கூரிய படை; அனலாக -
சமணர் இட்ட தீயே வெப்பு நோயாகப் பற்ற; பொறாமையினால் -
பொறுக்கலாற்றாமையால்; பாண்டிமாதேவி - மானி - இவை பிள்ளையாரது தேவார
ஆட்சி; மானி அறிவித்து - விளைத்தாள் - கண்டீர் - என்று கூட்டுக. தேசம்
விளங்க - தேசம்
- உலகவர்; தேசத்தவர் சைவ நெறியில் விளங்க; தமிழாகரர் -
ஆளுடைய பிள்ளையார்; அருகந்தர் - சமணர். இவ்வரலாறு பற்றி ஆளுடைய
பிள்ளையார் புராணம் பார்க்க. இஃது அச்சரிதப் பகுதிக்கு ஆதரவாதலும் காண்க.
கண்டீர் - காணுங்கள்; அசை என்பாருமுண்டு.
 
     விரி :- 4189. (இ-ள்) மங்கையர்க்குத் தனியரசி - மங்கையர்க்கெல்லாம் ஒப்பற்ற
அரசியும்; எங்கள் தெய்வம் - எமது தெய்வமும்; வளவர் திருக்குலக்கொழுந்து -
சோழர்களது திருக்குலத்தின் கொழுந்து போல்பவரும்; வளைக்கைமானி -
வளையலையணிந்த மானியாரும்; செங்கமலத் திருமடந்தை - செங்கமலத்தில்
வீற்றிருக்கும் திருமடத்தை போல்பவரும்; கன்னிநாடாள்......பாவை - பாண்டி நாட்டை
ஆளும் பாண்டியர்களது குலத்துக்கு நேர்ந்த பழியினைத் தீர்த்த
தெய்வத்தன்மையுடைய பாவைபோல்பவரும் (ஆகிய); எங்கள் பிரான்...பரப்பினாரை -
பெரிய தமிழ் நாட்டிற்கு வந்த இடரை எங்களுடைய பெருமானாராகிய சீகாழித்
தலைவரது திருவருளினாலே நீக்கித் தமது பொங்கும் ஒளியைத் தரும் திருநீற்றினைப்
பரவச் செய்தவரை; போற்றுவார்...போற்றலாமே - போற்றுகின்றவர்களுடைய திருவடி
எம்மாற் போற்றத் தக்கதாகும்.
 
     (வி-ரை) முன், பாதங்கள் பரவலுற்றேன் - என்று தோற்றுவாய் (4188)
செய்தாராதலின் அதற் கேற்ப இப்பாட்டினால் துதியை விரிக்கின்றார்; பாதங்கள்
பரவுதலாவது அத்திருவடி பரவுவாரது திருவடியைப் போற்றுதலாம் என்பதாம்.
 
     மங்கையர்க்கு......பாவை - இப்பண்புகள் ஆளுடைய பிள்ளையாரது
“மங்கையர்க்கரசி” (ஆலவாய் - புறநீர்மை) என்ற திருப்பதிகப் பாட்டிற் கண்டவாறு
விரித்து உரை கூறியபடி.
 
     எங்கள் தெய்வம் - சைவவுலகுக்கும் சைவ நெறிக்கும் காவல் பூண்டு
வளர்த்தலின் எங்கள் தெய்வம் - என்றார். எங்கள் என்றது சைவவுலகம்
முழுவதையும் உளப்படுத்திக் கூறியது.
 
     வளவர் திருக்குலக் கொழுந்து - “சென்னி வளர் மதியணிந்த சிலம்பணிசே
வடியார்தம், மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர்" (1900) என்ற பெருமை
குறித்து. இப்பெருமை பற்றியே ஆளுடைய பிள்ளையார் புராணத்தைத் தொடங்கிய
குறிப்பும் காண்க; வளவர்கோன் பாவை - என்ற பதிகப் பகுதியை விரித்துரைத்தது.
 கொழுந்து போல்வரர்என்க.
 
     மங்கையர்க்குத் தனியரசி - மங்கையர்க்கரசி என்று பிள்ளையார்
பாராட்டியதைத் தனி - என்ற பண்பு தந்து மேலும் சிறப்பித்தவாறு; அரசிகள் பலரு
மிருத்தல் கூடுமாதலின், தனி - (ஒப்பற்ற) என்பது பிறிதினியைபு நீக்கிய விசேடனம்.