வளைக்கை மானி - “வரிவளைக் கைமட மானி” என்பது பதிகம். மானி - பெருமையை யுடையவர்; மானம் - பெருமை. |
செங்கமலத் திருமடந்தை - ஆயிரம் இதழ்க் கமலத்தில் வீற்றிருக்கும் ஞானாம்பிகை போல்பவர்; இலக்குமி போல்வார் என்பாருமுண்டு. “பங்கயச் செல்வி” என்பதும் பதிகம். |
கன்னிநாடு ஆள் தென்னர் - கன்னிநாடு - பாண்டிநாடு. தென்னர் - பாண்டியர்; தெற்கில் உள்ள பாண்டி நாட்டை ஆள்பவர். தென்னர் குலப்பழி - கூன் பாண்டியர் சமணத்தைச் சார்ந்து சைவ நெறிக்குத் தீங்கு விளைக்கத் துணையாய் நின்ற சிவாபராதமாகிய பெரும்பழி; “தென்னவன் றானுமுன்செய் தீவினைப் பயத்தி னாலே, அந்நெறிச் சார்வு தன்னை யறமென நினைந்து நிற்ப......நன்னெறி திரிந்து மாறி நவைநெறி நடந்த தன்றே” (2499) என்றதும், ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் அதன்மேல் விரித்தனவும் காண்க. ஒரு குலத்துள் வந்த ஒருவர் பெரும்புகழ் விளைத்து வாழ்ந்தால் அப்புகழ் அக்குலமுழுதும் சார்தல் போலவே, ஒருவரது பழியும் அக்குல முழுதும் பற்றும் என்பது நீதியாதலின் தென்னர் குலப்பழி என்றார். |
தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை - குலப்பழியானது அக்குலத்துள் வந்த கற்பரசியாராலே தீரப்பெறுவதாம் என்பது. பாவை - பபவைபோல்வார். |
எங்கள்பிரான் - சைவ வுலகின் ஞானத்தலைவர். எங்கள் தெய்வம் என்றதற் கேற்ப இவ்வாறு கூறினார். |
எங்கள்....பரப்பினாரை - திருநீறு பரப்புதற்குக் காரணமாயிருந்தவரை; தங்கள்....திருநீறு - திருநீற்றினைச் சோழமரபுக்கு உரிமையாக்கிய திறம் காண்க. |
தனித்திலதம் - பரவினாரை - புகழெம்மால் - என்பனவும் பாடங்கள். 1 |
4190. | பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர் போனகஞா னம்பொழிந்த புனித வாக்காற் றேசுடைய பாடல்பெறுந் தவத்தி னாரைச் செப்புவதியா மென்னறிந்து?; தென்னர் கோமான் மாசில்புகழ் நெடுமாறன் றனக்குச் சைவ வழித்துணையாய் நெடுங்கால மன்னிப் பின்னை ஆசினெறி யவரோடுங் கூட வீச ரடிநிழற்கீ ழமர்ந்திருக்க வருளும் பெற்றார். 2 |
(இ-ள்) பூசுரர்......என் அறிந்து - மறையவர்கள் தலைவராகிய சீகாழி வேந்தரது சிவஞான முண்டு பொழிந்த தூய திருவாக்கினாலே ஞான வொளியுடைய பாடலினாற் பாராட்டப் பெறுதற்கு உரிய பெரிய முன்னைத்தவமுடைய அம்மையாரது பெருமையினை நாம் என்னென் றறிந்து போற்றவல்லோம்?; தென்னர்....மன்னி - பாண்டி மன்னராகிய குற்றம்நீங்கிய புகழினையுடைய நின்ற சீர் நெடுமாறனாருக்குச் சைவத்திறத்தின் வழித்துணைவியாராகி நீண்ட காலம் நிலை பெற்றிருந்து; பின்னை - அதன் பின்பு; ஆசில்.....பெற்றார் - குற்றமற்ற சிவநெறியிலே அவரோடும் கூட இறைவரது திருவடிக்கீழே நிலைபெற்றிருக்கும் திருவருளினையும் பெற்றார். |
(வி-ரை) பூசுரர் சூளாமணி - மறையவர்கள் தலைமேற்சூடும் முடிமணிபோன்றவர்; பூசுரர் - மறையவர்; “நிலத்தேவர்” (1994); சூளாமணி - முடிமணி. |