போனக ஞானம் பொழிந்த - ஞானப்பால் உண்டமையினாலே வெளிப்பட்ட. |
புனித வாக்கு - சிவனையன்றிச் சொல்லாத திருவாக்கு ஆதலின் புனித வாக்கு என்றார். “கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன்” (பிள் - அச்சிறு பாக்கம் - 11). “கொன்றையா னடியலாற் பேணா வெம்பிரான் சம்பந்தன்” (திருத்தொண்டத் - 5). “போதியோ வென்னு, மன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்” (2986); “பிள்ளையார்தந் திருவாக்கிற் பிறந்த லாலே தாலழுமுன், புள்ள பாசம் விட்டகல வொழியாப் பிறவி தனையொழித்து.......சிவமே கூடின” (2881) என்பனவாதி உண்மை வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன. |
தேசுடைய பாடல் பெறுந் தவத்தினார் - தேசு -அருள்ஞான விளக்கம். தவத்தினார் - முன்னைப்பெருந்தவத்தினாலன்றி இப்பேறு பெறுதலமையா தென்பதாம். இப்பாடல்களாவன; “மங்கையர்க்கரசி ” என்ற திருப்பதிகத்துப் பாராட்டப் பட்டனவும், “மானினேர் விழி” என்ற பதிகத்துள் முன்னிலைப்படுத்தி யருளியனவும்மாம்; இவ்வாறு பிள்ளையாரால் முன்னிலைப்படுத்தியருளிய பெருமை அம்மையார் ஒருவருக்கே சிறப்பாய் உரியது; தவம் என்றது இக்குறிப்பும் தந்து நின்றது தேசுடைய பாடல் பெறும் - சமணர் புத்தராதி நலமில்லாதோரும் பிள்ளையார் திருவாக்கிற் பட்டனர் தாமே? எனில், அவ்வவர்க்கேற்ற தகுதிப்படி அவர்களும் உய்தி பெற்றனரேயாம் என்க. இவர்கள் நிலைமைபற்றி வேறு பிரித்தற் பொருட்டுத் தேசுடைய - என்றார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம். யாம் என் அறிந்து செப்புவது? - என்க. என்னென்றறிந்து செப்புவது? செப்பவல்லோமல்லோம் என்றபடி. |
தென்னர்.....அருளும் பெற்றர் - முன் ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் பிள்ளையாருடனிருந்து, பாண்டி நாட்டுப் பதிகளைப்பணிந்து, பின் அவர்பால் விடைபெற்று, மணமேற் குடியினின்றும் போந்தபின் (2791 - 2793) நிகழ்ந்த வரலாறுகள் நெடுமாறனாரைப் பற்றியவற்றை அவர் தம் புராணத்துள்ளும் (4070 - 4077); அம்மை யாரைப் பற்றிய வரலாற்றை இங்கும் கூறிமுடிக்கும் அமைப்புக் கண்டுகொள்க. |
மாசில் புகழ் நெடுமாறன் தனக்கு - மாசு இல்லையாகச் செய்யப்பட்டமையால் அதன்பின் நின்றசீர் நெடுமாறனாராகியவருக்கு என்க; மாசின்மையாற் புகழுடைய நெடுமாறனாராயினர் என்பது. |
நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் - ஆசறப்பெற்றபின் சைவ நெடுமாற னாராயினராதலின் அவருக்குச் சைவ வழி வழித்துணையாய் மன்னினர்; இஃது உயிரிணுக்கு வழித்துணையாம். அதன்முன், அவர் கூன் பாண்டியனாராய் இருந்தனர்; அப்போது அம்மையார் அவரது பாண்டிமா தேவியாராய் உடல் பற்றிய துணையளவில் அமைந்து, அவருயிருக்குரிய நன்மையைத் தாமே தேடிக்கொடுத்தனர். அதன் பின்னர்ச், சைவத்துள் நின்றமையால் சைவ வழித்துணையாய் நெடுங்காலமிருந்து சிவநெறிபாலித்தனர் என்பதாம். |
ஆசில் நெறி - குற்றத்தை இல்லையாக்கும் சிவஞான நெறி; ஆசு - ஆணவமலக் குற்றம். |
அருளும் - சைவ வழித்துணையாய் மன்னியதன்றி அருளும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. இவ்வாறு அம்மையாரது பிற்சரிதம் கூறி முடித்தமை காண்க. அவரோடும் கூட - அந்நாட் கற்புடைமகளிர் கணவனாருடன் செல்லும் மரபு குறித்தது. நெடுமாறனாரது சரித முடிபு அவரைப்பற்றிய அளவில் அவரது சரிதத்தில் முன் (4077) இவ்வாறு கூறி நிறைவாக்கியது காண்க. 52 |