பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்504

4191.    

வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
    வளம்பெருக்க வளவர்குலம் பெருக்குந் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்குஞ்
    சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தஞ்செயலில் வழுவா தன்பர்க்
    குடைகீளுங் கோவணமு நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
    பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்.                 3
 
     (இ-ள்) வருநாள்.....திருநாடுபோல் - நீர்ப்பெருக்கு வரும் நாள் ஒரு காலத்தும்
பொய்யாது வரும் தெய்வத்தன்மை வாய்ந்த காவிரியாறு வளம் பெருக்கச் சோழர்
திருமரபு பெருக்கம் தங்களுடைய சோழநாட்டினைப் போலவே; செழியர்.......போற்றி -
பாண்டியர்களது பாண்டி நாட்டினையும் விளங்கச் செய்த சிறப்புடைய விளக்காகிய
மங்கையர்க்கரசி யம்மையாரது செய்ய சிறிய திருப்பாதங்களைத் துதித்து
.(அத்துணையாலே); ஒருநாளும்.....பேசலுற்றாம் - ஒரு நாளிலும் தமது செயலிற்
பிழையாது சிவனடியார்களுக்கு உடையும் கீளும் கோவணமும் நெய்து கொடுக்கும்
பெரும்புகழ் வாய்ந்த சாலியரது குலத்தில் அவதரித்த பெருந்தகையாராகிய
நேசநாயனாரது தன்மையினைப் பேசத் தொடங்குகின்றோம்.
 
     (வி-ரை) இஃது இதுவரை கூறிய சரிதமுடிப்பும், மேற் கூறப்புகும் சரிதத்
தோற்றுவாயுமாம்.
 
     வருநாள் என்றும் பிழையா - வருநாள் - நீர்ப்பெருக்கு வரும் நாள்; இஃது
உழவுக்குதவியாகிய பருவத்தே பெருகுதல்; “எந்நாளும் பொய்யா தளிக்கும்” (1206);
“வான் பொய்ப்பினும் தான் பொய்யா” (பட் - பாலை - 5); தெய்வப் பொன்னி -
தெய்வத்தன்மை வாய்ந்த என்றது பயிரையும் உயிரையும் வளர்க்கும் தன்மை.
உயிர்களைச் சைவத்திறத்திற் பெருகச் செய்து உய்வித்தல் காவிரியின் சிறப்பு.
 
     பொன்னி வளம்பெருக்க வளவர்குலம் பெருக்கும் - குடிவளம் பெருகக்
கோல் வளம் பெருகும் என்ற உண்மை.
 
     தங்கள் திருநாடு போல் - சைவத்திற் பிறழாது வளர்க்கும் தன்மை உவமை;
தங்கள் திருநாடு - தாம் அவதரித்த நாடாகிய சோழநாடு.
 
     சீர்விளக்கின் - சிறப்புடைய விளக்குப் போன்ற அம்மையாருடைய.
 
     தம்செயல் - அன்பர்க்களிக்கும் தொண்டு.
 
     நல்கும் - பெருந்தகையார் என்று கூட்டுக. உடைகீள் - உடையும் கீளும்;
உம்மைத் தொகை; கீள் - லங்கோடு என்பர்; திறம் - திருத்தொண்டின் திறத்தினை.
 
     ஒருநாளும்....நேசர் - நேசநாயனாரது வரலாற்றுச் சுருக்கமாகிய தோற்றுவாய்.
 
     பெருநாமம் - பெருகிய நற்பண்பு; சாலியர் - துணி நெய்யும் குலத்தவருள்
ஒருவகையினர். அறுவையர் குலம் - (4193) என்பது காண்க. சாலிகர் என்றும்
வழங்கும்.                                                         3
 
     சரிதச்சுருக்கம்; மங்கையர்க்கரசியம்மையார் புராணம் ;- இவர்,
மங்கையர்க்கெல்லாம் ஒப்பற்ற அரசியார்; எமது குலதெய்வம்; சோழர்களது திருக்
குலக்கொழுந்து; செங்கமலத் திருமடந்தை; பாண்டியர் குலத்துக்குவந்த பழிதீர்த்த
தெய்வப்பாவை; ஆளுடைய பிள்ளையாரருளினாலே தமிழ்நாட்டுக்கு நேர்ந்த சமணப்