ஆக்கி; தாங்கு .....ஆக - தாங்கிய கைத்தொழிலின் செயல்களை யெல்லாம் தமது பெருமானுடைய அடியவர்களுக்கு ஆகும்படி; பாங்குடை.....நெய்வார் - பாங்கு பெறும் உடையும் கீளும் பழுதிலாத கோவணமுமாகிய இவற்றை நெய்வாராகி; |
4195. (இ-ள்) உடையொடு.......நெய்து - உடையினோடு நல்ல கீளினையும் ஒப்பில்லாத கோவணத்தினையும் நெய்து; விடையவர்......அளித்து - இடபத்தையுடைய இறைவரது அடியார்கள் வந்து வேண்டியவாறே கொடுக்கின்ற முறைப்படி இடையறாது கொடுத்து; நாளும்.....ஆகி - ஓவ்வொரு நாளும் அவர்களுடைய திருவடிகளை வணங்கித் துதித்து அடையும் நன்மையைப் பெற்றாராகி; அரனடி நீழல் சேர்ந்தார் - சிவபெருமானது திருவடிநீழலினை அடைந்தனர். 4 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன; தொண்டு செய்தலும் அதன் பயனும் இடையீடின்றித் தொடர்ந்துவரும் நிலைக்குறிப்புப்பட இவையும் தொடர்ந்து நின்றன. |
4194. (வி-ரை) குறிப்பு :- திருவாசகச் சொற் பொரு ளாட்சியினை மேற்கொண்டு போற்றி ஆசிரியர் அழகுபட எடுத்துக்காட்டியருளிய இடங்களில் இது சிறந்ததொன்றாகும். “சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் றிருப்பாதப் போதுக் காக்கி, வந்தனையும் அம் மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” என்பது திருவாசகத் திருவாக்கு. (41 - 26) |
ஆங்கு - முன்பாட்டிற் கூறிய “தேசினா” ராய் ஒழுகிவரும் அந்நிலையில். |
மனத்தின் செய்கை - நினைப்பு; செய்கை - நிகழ்த்திய செயல்; அரனடிப் போது - போது - மலர்; “திருப்பாதப்போது” - என்பது திருவாசகம். |
இங்குக் கூறிய மூவகைச் செய்கைகளையும் ஆக்குதலாவது அவ்வந்நிகழ்ச்சிகளையும் வேறொன்றிற் சேராது அவ்வவற்றின்பாலே யாகும்படி பயிலச் செய்தல். |
மனம் - வாக்கு கைத்தொழில் - என்பன மூன்று காணங்களையும் குறித்தல்காண்க. |
மனத்தின் செய்கை - அரனடிப் போதுக்காக்கி - மனம் சிவன்றிருவடிகளையே இடையறாது நினைந்திருத்தல்; சிவன் உயிர்களுக்கு இடையறாது செய்யும் பேரருளை இடையறாது நினைந்தவண்ணமாக நிற்றல். இஃது இடையறாத பயிற்சியால் வருவது. |
ஓங்கிய - மேன்மேல் எழுகின்ற - வாக்கு, முன்கூறிய மனத்தின் றொழிற்பாட்டின்படியே எழுகின்றதனாலும், பிறருமறிய வருதலானும் ஓங்கிய வாக்கு - என்றார். |
வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக்காக்குதலாவது வாக்கினால் இடையறாது திருவைந்தெழுத்தினை எண்ணி உச்சரித்துக் கொண்டிருத்தல். (பேதம் . 9ம் சூத்). |
உயர்ந்த அஞ்சசெழுத்து - மந்திரங்கள் யாவற்றினும் தலைசிறந்த திருவைந்தெழுத்து; “ஆதிமந்திர மஞ்செழுத்து” (2596); மகாமந்திரம்; “சிவனுக்கு மேற்பட்ட தெய்வமில்லை; ஐந்தெழுத்துக்கு மேற்பட்ட மந்திரமில்லை; என்பது பழமொழி. |
உயர்ந்த - எல்லா மந்திரங்களினும் மேலாகியதும், அம்மந்திரங்களை யெல்லாம் உண்ணின்று இயக்கம் சிவ சிற்சத்தியே உருவமாகியதும் ஆகிய; “ஆதி மந்திர மஞ்செலுத் தோதுவார் நோக்கு, மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே” (2596) என்ற விடத்து இப்பெருமையினை எடுத்துக் காட்டியவாறு காண்க. “வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” (திருவா). அங்கு மணிவார்த்தை என்றது திருவைத்தெழுத்தேயாம் என்று ஆசிரியர் பொருள் காட்டியருளும் நிலையும் கண்டுகொள்க. “சிவனஞ் செழுத்து”, “திருநாம மஞ்செழுத்து”, “மாசின் மணியின் மணிவார்த்தை” என்பனவாதி திருவாக்குக்களும் காண்க. “இருதலை மாணிக்கம்” என்ற வழக்கும் காண்க. |