பக்கம் எண் :

பெரியபுராணம்511

     கழல் சேர்வதற்குச் - செற்ற - என்றுகூட்டுக; கழல் சேர்வதற்கு - சேர்வதன்
பொருட்டு; வினை செற்ற திறம் அடியார்களித்து வழிபட்டதும், அரனை இடையறாது
நினைந்து வந்ததும் ஆம்.
 

     சிறப்பு - முன்னைத் தவ முதிர்ச்சி.
 
     முன்னைப் பிறப்புணர்ந்து - முன் பிறப்புணர்வுடனே பிறந்தனர் என்பது;
மேலும் “அருளால் முன் உணர்ந்து” என்பது காண்க. முன்னுணர்தல்
தவமுதிர்வாலும் திருவருளாலுமே வருவதாம்.
 
     ஆலயங்கள் - பெருக - மேல் வரும் 4208 - 4211 பாட்டுக்களையும்,
ஆண்டுரைப் பவையும் பார்க்க.
 
     கொற்றம் - வெற்றி; தவத்தின்வெற்றியும் அரசரது வெற்றியுமாம்.
இவர்தென்னவனாயுலகாண்ட என்றபடி பாண்டிய நாட்டையும் ஆண்டனர் என்ற
வரலாறுங்குறித்தது.
 
     பெருமை கூறுவாம் - சரிதம் கூறுவாம் என்னாது பெருமை என்றது, முன்னை
நிலையும் இங்கு வந்த வரலாறும் என இரண்டு சரிதங்கள் ஒரு புராணத்துட் கூறவரும்
இப்பெருமையும், ஆளுடைய பிள்ளையார் அரசுகள் நம்பிகள் முதலிய
பரமாசாரியர்களாலும் போற்றப்படும் பெருமையும், வைணவ ஆசாரியர்களாகிய
ஆழ்வாராதிகளும் போற்றும் பெருமையும் முதலிய அளவிறந்த பெருமைகளைக்
குறிக்க.                                                           5
 
     சரிதச்சுருக்கம் - நேசநாயனார் புராணம் ;- நல்லொழுக்க முடைய
பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி ஒன்றுண்டு. அதில்
அறுவையர் குலத்தில் செல்வம்மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர்
இடையறாது சிவனடியார்களைப் போற்றிவந்தார். ஒருபோதும் சிவனடிச்
சிந்தனைமறவார். வாக்கினாற் றிருவைந்தெழுத் தோதுதலையும் மறவார். தமது மரபின்
கைத்தொழிலாகிய நெசவுத்தொழிலைச் சிவனடியார்க்காகவே செய்து வந்தார், உடையும்
கீளும் பழுதில் கோவணமும் செய்து அடியவர்களுக்கு இடைவிடாது, நாளும், அவர்
வேண்டியவாறே முறையால் ஈந்து வந்து சிவனடி நிழல்சேர்ந்தார்.
 
     கற்பனை ;- (1) நல் ஒழுக்கம் பிறழாத மக்கள் வாழ்வது நகரத்துக்குப் பெருஞ்
சிறப்பாகும்.
 
     (2) குலமரபுத் தெரிழில் செய்து வாழும் நிலையில் அதனையே சிவத்தொண்டாகச்
செய்தல் பெருமையுடையது.
 
     (3) சிவனை இடையறாது நினைந்திருப்பதும் திருவைந்தெழுத்தை இடையறாது
ஓதுதலும், உடம்பினால் செய்தொழில்களைச் சிவனடியார்க் களிக்கும்படி செய்தலும்
ஆக மன மொழி மெய் என்ற மூன்றாலும் அடியார் பணிசெய்தல் மிக அரிது.
 
     (4) அடியார்களுக்கு வேண்டுவனவற்றை வேண்டுமாறு ஈயும் ஆற்றால்அளிப்பது
சிறந்த சிவபுண்ணியுமாம்.
 
     (5) அடியவர் வழிபாடே வீடுபேறு தரவல்லது.
 
     தலவிசேடம் - காம்பிலி :- பல்லாரிச் சில்லாவில் காம்பிலி (Kambili)
தாலுகாவில் உள்ளது காம்பிலி என்னும் நகரமாகும். அது நேசநாயனாரது தலம். இவர்
தஞ்சைச் சில்லா மாயவரம் - கூறைநாடு என்னும் கொர நாட்டில் வசிந்தார் என்றும்,
அங்கே சிவலாயத்தில் காம்பியிலிருந்து கொணர்ந்த விநாயகர் - தண்டபாணி
இம்மூர்த்திகளது திருவுருவங்களைத் தாபித்தார் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வூரில்
உள்ள சாலியர்கள் இவரது திருநாளாகிய பங்குனி - ரோகிணியில் இவரது விழாக்
கொண்டாடுகிறார்கள்.
 

67. நேச நாயனார் புராணம் முற்றும்