4202. (வி-ரை) தரையிற் புடைப்ப - தரை - நிலம்; புடைப்ப - புடைத்ததனாலே எனக் காரணப்பொருளில் வந்தது. |
சிலம்பிதானும் உயிர்நீங்க - சிலம்பி தானும் - யானை வீழ்ந்திருந்ததனோடு சிலம்பியும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |
மறையிற்பொருள் - வேதங்களின் பொருளாவார் இறைவர். தரும் ஆற்றல் - தருகின்ற முறையாலே; ஆறு - வழி; வரங்கொடுத்து - சிவபதம் கொடுத்து. பனைமரங்களும் சிவத்தை அடைந்த நிலை கருதுக (2581). |
நிறை - உலகை முறைசெய்து நிறுத்துதல். பொறுமை என்றலுமாம். 6 |
4203. (வி-ரை) தொன்மைதரு - பழைமையாகிய படைப்புக் காலமுதல் என்பர். பெருந்தேவி - பட்டத்தரசி. |
திருப்படி - திருக்களிற்றுப்படி, பஞ்சக்கரப்படி, |
திருவடிக்கீழ் - என்பதும் பாடம். |
4204. (வி-ரை) மக்கட்பேறின்மையினால் - மகவில்லாமையால்; பிள்ளைப் பேறின்மையினால்” (875); “மகவி லாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு” (2938). வரம் - வேண்டும் பொருள். |
செக்கர் - செவ்வானம். |
திருவுள்ளஞ் செய்தல் - வரந்தருதல். |
மிக்க திருப்பணி - மிக்க - யானை, புனலாலும் மலராலும் வழிபாட்டினளவில் ஒழுகச், சிலம்பி அதனின் மிக்கதாகிய, இறைவரது திருமுடிமேற் சருகுவிழாதபடி திருப்பணியாய் திருமேற்கட்டியிழைத்தது; வழிபாட்டினும் மிக்க என்றபடி; ஒரு முறை யானை அழிக்க மறுபடியும் என மேல் மேல் மிக்கதாய் இவ்வாறு என்றலுமாம். சிலம்பி தன் சிறிய ஆற்றலுக்கு மிகுந்த என்றலும் பொருந்தும். வாய் நூலின் மிகுதிப்பாடாகிய அளவு என்றலுமாம்; இவ்வாறு பலவும் கண்டு கொள்க. |
திருப்பணி - இறைவர் தனது மேற்கட்டியின் கீழேதங்கும் கோயிலாக அமைத்ததனால் திருப்பணி என்றார். |
அக்கமலவதி -அகரம், முன்பாட்டிற்கூறிய அந்த என்று முன்னறிசுட்டு. |
அணிமகவு - அணி - சிவனுக்குக் கோயில் அமைக்கும்; அழகிய என்றலுமாம். வயிற்றில் - வந்து - அடைய - கருப்பத்துள் வந்து புக; “பனியிலோர் பாதிசிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து” (உடற்கூற்று வண்ணம்); “விழுங்கரு விற்றான்” (போதம்); “ஆவி வைத்தார்” (தேவா). |
மாதேவியார் தமக்கு - என்பதும் பாடம். 8 |
4205. (வி-ரை) கழை ஆர் தோளி - கழை - மூங்கில்; ஆர் - உவமவுருவு; பெண்களின் தோள்களுக்கு மூங்கிலினை உவமை கூறுதல் மரபு; பசுமை, நயப்பு, திரட்சி முதலிய பண்புகள் பொதுத்தன்மை. |
கருப்பநாள் - கருப்பமுற்றி மகவு பிறத்தற்குரிய நாள் எல்லை. 280 நாள் முதல் 300 நாள்கள்வரை இதன் எல்லை என்று கணக்கிடுவர். |
விழைவு ஆர்மகவு - விழைவு - பெருவிருப்பம்; நீண்டகாலம் பிள்ளைப் பேறின்றி இறைவர்பால் வரம்வேண்டிப் பெற்றமகவாதலின் விழைவார் என்றார்; யாவரும் விரும்பும் என்றலுமாம். |
| மகவு பெற அடுத்த வேலை - பிள்ளை பிறக்கும் நேரம். |