பக்கம் எண் :

பெரியபுராணம்525

 
செய்ய எண்ணியன மேலும் மிகப் பலவாமாதலின் அவை இப்பயனே தருதல்பற்றியும்
தொகையால் அளவிட்டுக் கூறிற்றிலர் என்பது. “வேள்விக ளெண்ணி லாதன மாண
வியற்றினான்” (99); “எங்கு மாகி யிருந்தவர் பூசனைக் கங்கண் வேண்டு நிபந்தம்” (100);
“கோயி லெங்கணும் பூசை நீடி.....” (469); “முடிவிலா வறங்கள் செய்து” (1785) ;
“தப்பின்றி யெங்குமுள” (1798).
 
     ஏவிச் - சமைத்தார் - என்க. ஏவுதற் கருத்தா; இவர் விஷ்ணுவாலங்களும் பல
எடுப்பித்தார் என்பர்.                                             14
 
4211.     அக்கோயி றொறுஞ்சிவனுக் கமுதுபடி முதலான
மிக்கபெருஞ் செல்வங்கள் விருப்பினான் மிகவமைத்துத்
திக்கனைத்துந் தனிச்செங்கோன் முறைநி றுத்தித் தேர்வேந்தர்
முக்கண்முத னடமாடு முதற்றில்லை முன்னினார்.                15   
 
     (இ-ள்) அக்கோயில் தொறும்.....அமைத்து - அந்தத் திருக் கோயில்கள் தோறும்
இறைவருக்குத் திருவமுதுக்குரிய படித்தரம் முதலான மிகுந்த செல்வங்களைத் தம்
விருப்பத்தினாலே மிகவும் அமைத்து; திக்கனைத்தும்......நிறுத்தி -
எல்லாத்திக்குக்களினும் ஒப்பற்ற தமது செங்கோல் ஆணைமுறையினைச் செலுத்தி
நிறுத்தி; தேர்வேந்தர்....முன்னினார் - தேர்ப்படையினையுடைய செங்கண்ணார்
முக்கண்ணுடைய முதல்வராகிய இறைவர் திருநடம் செய்கின்ற முதன்மை பொருந்திய
திருதில்லையினை நினைந்து முற்படச் சென்றடைந்தனர்.
 
     (வி-ரை) அக்கோயில் தொறும் - அவ்வாறு மந்திரிகளை ஏவி அமைத்த அந்த
என அகரம் முன்னறி சுட்டு; அமுதுபடி - முதலான மிக்க பெருஞ் செல்வங்கள் -
திருவமுதுக்குரிய படித்தரம் முதலிய மானிபங்கள்; நிபந்தங்கள்; செல்வங்கள்
விரும்பினால் மிக அமைத்து
- இத்தனை போதியன - இத்துணை வேண்டப்படுவன
- என்று கணக்கிட்ட அளவுட்படாது விருப்பம் ஆர்தல் உறும்வரை மிகவும் அமைத்து
என்றபடி; சிவனுக்குச் செய்வன வெல்லாம் இவ்வாறு செய்தல் வேண்டு மென்பது
குறிப்பு.1
 
     தேர் - இனம்பற்றி யானை குதிரை முதலியவையும் கொள்ளப்படும்.
திக்கனைத்தும் - எண்டிசைகளினும்; முன்னினார் - சிந்தித்து அடைந்தனர்.
 
     திக்கனைத்தும்...நிறுத்தி - தமது அரசாணை எங்கும் செல்லும்படி
முடிமன்னராக ஆட்சிபுரிந்து.
 
     முக்கண் முதல் - முக்கண்ணராகிய முதல்வர்; சிவபெருமான். முதல் - முதல்வர்.
முதற்றில்லை - முதல் - முதன்மை; சிறப்பு. தலவரிசையுள் முதலாக வைத்து
எண்ணப்படுதலும் காண்க.
________________
 
     1    குறிப்பு; இச்செங்கண்ணனார் அமைத்த இந்த மிக்க படித்தரச்
செல்வங்கள் இப்போது அங்கங்கும் காணப்படவில்லை; எங்குச் சென்று யாவரிடத்
தொளித்தனவோ? இம்மாடக் கோயில்கள் பலவும் “அன்று கண்ட மேனிக் கழிவில்லை”
என்ற பழமொழிப்படி, பிற்காலத்தன்பர்களால் அவ்வப்போது வேண்டியபடி
செப்பனிட்டுச் சிறிய திருத்தொண்டுகளும் செய்யப்படாமல் சிதைவுற்று நிற்கும்
நிலையும், ஒரு வேளைக்குத் தானும் சிறிய அளவு திருவமுதும் திருவிளக்கும்
முதலியவைக்கும் இல்லாதநிலைவும், பிறவும் காண மனம் மிக வருந்துகின்றது; இவற்றுட்
சில கோயில்களில் “அடையாத வாயி லகம்” என்றபடி கதவுகள் தாமும் இல்லாத
நிலையும் காணவுள்ளது. சைவவுலகம் இந்நிலைகளைக் கண்டுகொண்டுதானிருக்கின்றது!
காலக்கொடுமை!