முன்னினார் - முன்னிச் சென்று அடைந்தனர் என்ற பொருள்தந்து நின்றது. 15 |
4212. | திருவார்ந்த செம்பொன்னி னம்பலத்தே நடஞ்செய்யும் பெருமானை யடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப உருகாநின் றுளங்களிப்பத் தொழுதேத்தி யுறையுநாள் வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார். 16 |
(இ-ள்) திருவார்ந்த.....வணங்கி - சைவமெய்த்திருவே மிக்க செம்பொற்றிரு வம்பலத்திலே திருநடம் செய்தருளுகின்ற இறைவரை அடிவணங்கி; பேரன்பு....உறையுநாள் - பேரன்பு மேன்மேலோங்க மனமுருகி மகிழ்ச்சியடையத் தொழுது துதித்து அங்குத் தங்கும் நாளிலே; வருவாய்மை......சமைத்தார் - வாய்மையொழுக்கத்தில் வருகின்ற தில்லைவாழந்தணர்களுக்கு உறையுளாகிய திருமாளிகைகள் பலவற்றையும் எடுப்பித்தார். |
(வி-ரை) திரு - சைவமெய்த்திரு; முத்தித்திரு; தலைசிறத்தல் - மிக்கோங்குதல்; உளம் உருகா நின்று களிப்ப என்க; உருகா நின்று - உருகி; |
உறையுநாள்....சமைத்தார் - தில்லையில் செங்கண்ணார் பலகாலம் தங்கி யிறைவரை வழிபட்டிருந்தனர் என்பதாம்; தானங்கள் பல சமைத்தார் - (4210) என்று கூறியபடியே ஈண்டும் “மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்” என்றார், “நாமிவரிலொருவர்” என்று இறைவரால் அருளிச் செய்யப்பெற்ற சிவத்திருப் பண்புடையார்கள் இத் தில்லைவாழந்தணர்களாதலின், இவர்கள் உறையும் திருமாளிகைகள் “கற்றாங் கெரியோம்பும்” சிறப்பினால் சிவனுறையும் தானங்களோ டொப்ப எண்ணப்படும் சிறப்புடையன என்ற குறிப்புத்தருதற்கு; இச்செய்தி “நல்ல வம்புமலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான்” என்ற வகைநூலின் ஆதரவுபெற்று அதனை விரித்துரைத்தபடியாம். |
வாய்மை வருமறையவர் என்க. தில்லைவாழந்தணர்கள். வாய்மையின் வருதலாவது சத்தாகிய தத்துவ நெறியில் வழிவழி ஒழுகிவருதல். (354 - 356) முதலியவை பார்க்க. எனவே இவையும் சிவன் றிருத் தொண்டாகப் போற்றப்பட்டன. |
தலைசிறக்க - சிறந்தோங்க. 16 |
4213. | தேவர்பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன் பூவலயம் பொதுநீக்கி யாண்டருளிப் புவனியின்மேல் ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்க ளடிபோற்ற மேவினார் திருத்தில்லை வேந்தர்திரு வடிநிழற்கீழ். 17 |
(இ-ள்) தேவர்பிரான்.....செம்பியர்கோன் - தேவர்பெருமானாராகிய சிவபிரானுடைய திருத்தொண்டினாலே கோச்செங்கட்சோழராக அவதரித்த செங்கண்ணார்; பூ.....புரிந்து - உலகம் பிறர்க்கும் பொது என்னாது தமக்கே சிறப்பாயுரியது என்று சொல்லும்படி தனியரசாட்சி புரிந்தருளி; புவனியின்மேல் ஏவிய நற்றொண்டு புரிந்து - இந்நிலவுகில் சிவபெருமான் அருள்செய்து செலுத்தியவாறு நல்ல சிவத்தொண்டுகளைச் செய்து; இமையவர்கள்.....கீழ் - தேவர்கள் வணங்கும்படி திருத்தில்லை நடராசரது திருவடி நிழலின்கீழ்ப் பொருந்தினார். |
(வி-ரை) திருத்தொண்டில் - முன் சிலந்தியாயிருந்து செய்த திருத்தொண்டின் பயனாலே; திருத்தொண்டுடனே ஆட்சியும் புரிந்து என்று கூட்டியுரைத்தனர் முன் உரைகாரர், |