பக்கம் எண் :

பெரியபுராணம்527

 
     ஆண்டருளி - ஏவிய நற்றொண்டு புரிந்து - ஆண்டருளுதலும்
தொண்டுபுரிதலும் என்ற இரண்டும் சிவனேவல் வழியமைந்தவாறே புரிந்தருளினர்.
சிவனியக்கியவாறே ஆன்மாக்கள் இயங்குவன என்பது பொதுவுண்மையே யாயினும்,
அதனை அறிந்து திருவருளின் உணர்வினுள் அடங்கி நின்று ஒழுகுதல் இவருக்குச்
சிறப்புரிமை என்க. இவருக்குச் சிவன் ஏவியருளிய நிலை, “முறையிற்
சிலம்பிதனைச்சோழர் குலத்து வந்து முன்னுதித்து, நிறையிற் புவனங் காத்தளிக்க
வருள்செய்தருள” (4202) என்றவிடத்துக் கூறப்பட்டது. ஏவிய - அடியார்கள் ஏவிய
என்றலுமாம்.
 
     பூவலயம் - வட்டமாகிய பூவுலம்; பூமி.
 
     பொதுநீக்கி - இவர் பாண்டிய நாட்டினையும் பிறநாடுகளையும் அரசு செலுத்திய
சரிதக் குறிப்பு; “தென்னவனா யுலகாண்ட செங்கணார்” (தொகை); “நிம்ப நறுந்
தொங்கல்”(வகை).
 
     இமையவர்கள் அடிபோற்ற - சிவத்தொண்டர்கள் தேவர்களும் பணியும்
உயர்வுடையோர் என்பது. “தேவாசிரியன்.”                               17
 

வேறு
 

4214.    கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர
வருநீர்மை யுடைய செங்கட் சோழர்தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை யிசைகொள் யாழின் றலைவரா யுலக மேத்தும்
திருநீல கண்டப் பாணர் திறமினிச் செப்பலுற் றேன்.                  18
 
     (இ-ள்) கருநீல.........வாழ்த்தி - கரிய நீல மலர்போன்ற மிடற்றினையுடைய
இறைவரது செம்மைதரும் கழலணிந்த திருவடி நீழல் சேரவரும் நீர்மையுடைய
கோச்செங்கட் சோழரது மலர்போன்ற பாதங்களை வாழ்த்தி அத்துணைகொண்டு;
தருநீர்மை...தலைவராய் - நீர்மைதரும் இசையினையுடைய யாழினது தலைவராய்;
உலகமேத்தும்.......செப்பலுற்றேன் - உலகம் பரவும் திருநீலகண்ட யாழ்ப்பாணரது
திறத்தினைஇனிச் சொல்லப்புகுகின்றேன்.
 
     (வி-ரை) ஆசிரியர், தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை
முடித்துக்காட்டி, இனிக் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
 
     கருநீலம் - நீலமலர். கருமை - இயற்கை யடைமொழி. அடிநீழல் சேரவரும்
நீர்மையுடைய
- ஏனையோர்க்குப் போலக் கன்மம் புரிந்து பிறவி பெருக்கும்
நிலையினன்றி, இவரது பிறவி திருத்தொண்டு செய்து திருவடி சார்தற் கென்றே
இறைவராற் றரப்பட்ட தென்பதாம். வருதல் - பிறவியில் வருதல்; இதனால் ஆசிரியர்
இவரது முற்பிற் சரித முழுதும் குறிப்பிற் பெறவைத்த சதுரப்பாடு கண்டுகொள்க. சேர -
சேர்வதற்காகவே; நீர்மை - தன்மை; நீர்மையாவது இங்கு முன்னைத்
தவமுதிர்ச்சியாகிய அன்பின் விளைவு.
 
     நீர்மை தரும் இசை என்க. இங்கு நீர்மையாவது இனிய தன்மையும்
இன்னிசையின் பயனுமாம்.
     இசைகொள் - இசையினை விளைக்கும் தன்மை கொண்ட.
 
     யாழின் தலைவர் - யாழிசைக் கலைவல்லமையில் முதல்வர்.           18
 
     சரிதச்சுருக்கம்; கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் ;- அடைக்கலம்
புக்க புறாவினுக்காக அதன் எடைக்குத் தமது தசையை அரிந்துகொடுத்த பெருமை