சமைத்தனர். இவ்வாறு சிவத்தொண்டின் நெறியில் உலகங்காத்துச் செங்கண்ணார் சிவனடி நீழலடைந்தனர். |
கற்பனை ;- (1) தம்பால் அடைக்கலம் புக்கவர்களை தம் உயிர்கொடுத்தும் காப்பாற்றுவர் பெரியோர். |
(2) அடைக்கலம் புக்கவர் மனிதரேயன்றிச் சிறிய பிராணியாகிய பறவையாயிருப்பினும் அதனையும் உயிர்க்கீடாக மதித்து அதன்நிறைக்குத் தமது தசையை அரிந்து கொடுத்தும் காத்தனர் சிபிச்சக்கரவர்த்தி; இதுமிக்க பெரும்புகழ்ச் செயலாகும் (4198). |
(3) முற்றிய அறிவு இல்லாத யானை - சிலம்பி - முதலிய பிராணிகளும் தமக்கேற்றவாறு சிவவழிபாடு செய்யும்; இது முன்னைவினைப்பயனால் வருவது. “மிக்க தவத்தோர் வெள்ளானை” (4187); “ஞானமுடையவொரு சிலந்தி” (4199); இவற்றது முன்பிறப்பு வரலாறு புராணத்துட் பேசப்படுவது. |
(4) சிலம்பி வாய்நூலால் மேற்கட்டி எனப் பந்தர் செய்த செயல் இறைவர் திருமுடிமேல் சருகுதிராபடி எண்ணிச் செய்தமை அன்பின்றன்மை; அதனை வாய் எச்சில் நூலால் அமைந்த தென்று யானை எண்ணிச் சிதைத்ததும் அன்பின் செயல்; அதனால் சிலம்பி சினந்து யானையினைத் துதிக்கையின்வழி உட்புக்கு மூளைப்பக்கம் கடித்து இறக்கச் செய்ததும் அன்பின் செயல். இவை இருபாலும் அனைத்தும் சிவன்பால்வைத்த அன்பின் செய்கைகளாதலின் எல்லாம் சிவபுண்ணியச் செயல்களேயாய் அவ்வாறே பலன்றந்தன. சிவபுண்ணியச் செயல்களுட் காணப்படும் சினம், வன்கண்மை போன்றவை, ஏனை உலகச் செயல்களிற் பாவப்பலன் தருதல் போலன்றிப், புண்ணியப் பலன்களையேதரும். |
(5) தனது வாய்நூல் வலயப் பந்தலின்கீழ் இறைவரிருக்க எண்ணிச் சிலம்பி செயல் செய்தமையின் அதனை அரசராகப் பிறக்கச் செய்து, அவர் ஆணையின்கீழ் உலகம் இருக்க அருளினர் இறைவர். இது புண்ணியப்பலன் வருமாறு; “முறையில்....காத்தளிக்க” (4202). |
(6) சிலம்பி, தனது சிறுசத்தி கொண்டு இறைவரது திருப்பணி செய்தலும், அதன் நிறைவுவாராமையால் வருந்தவும் நேர்ந்தமையால், அதனை அரசராக்கிச் சிவனுக்குப் பெருங் கோயில்கள் பலவற்றையும் எடுக்கும்நிலை யருளினர் இறைவர். இதுவும் புண்ணியம் விளைவும் வழியாம். “முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித், தரணிதா னாள வைத்தார்” (தேவா). “சிலந்திவாய்ப் பந்தர் சிக்கென வியற்ற.....மருவு கோச்செங்க ணான்றனக் களித்த” (நம்பி). |
(7) யானை மிக வலிமையுடைய பெரிய பிராணியாயினும் சிறிய சிலந்தி உள்புக்குக் கடித்ததனையும் ஆற்றமாட்டாது உயிர் நீத்தது; நுட்ப உணர்ச்சியுடையதாதலின்; “சிறிய பகையெனினு மோம்புத றேற்றார்” (4201) என்றபடி பகைவரின் எளிமை நோக்கி இகழ்ச்சி செய்தலாகாது. |
(8) சிவவழிபாடு இம்மையேயும் மகப்பேறு முதலிய எல்லா வரங்களையும் தரவல்லது. (4204) |
(9) தம் உயிர்க்கு இறுதிவரும் காரியமேயாயினும் தமதுமகவு பெருமைப்பட வாழவேண்டுமென்பது கருதி, அதனையும் உட்பட்டு, உயிர் ஈவது தாயின் தலையன்பின்திறம். (4206) |