உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
69. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (11) |
வகை |
| தனையொப் பருமெருக் கத்தம் புலியூர்க் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள் சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரனருள் பெற்றன னென்பரிப் பூதலத்தே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (83) |
விரி |
4215. | எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவ ரிறைவன் றன்சீர் திருத்தகும் யாழி லிட்டுப் பரவுவார் செழுஞ்சோ ணாட்டில் விருப்புறு தான மெல்லாம் பணிந்துபோய் விளங்கு கூடற் பருப்பதச் சிலையார் மன்னு மாலவாய் பணியச் சென்றார். 1 |
புராணம் :- இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், பன்னிரண்டாவது மன்னியசீர்ச் சருக்கத்துள், ஐந்தாவது திருநீலகண்ட யாழ்ப்பாணனார் புராணங்கூறத் தொடங்குகின்றார். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரது வரலாறும் பண்புங் கூறும் பகுதி. |
தொகை :- இதன் பொழிப்பு உரைத்துக்கொள்க. |
திருநீலகண்டர் என்பது இந்நாயனாரின் இயற்பெயர்; பாணனார் - என்பது அவரது திருமரபின் பெயர்; இப்பெயருடன் (குயவனார் ) முன்னம் ஒரு நாயனார் போற்றப்பட்டமையால், அவரினின்றும் வேறுபிரித்துணர்தற் பொருட்டு, மரபுடன் சேர்த்துத் திருநீலகண்டத்துப் பாணனார்க் கடியேன் என்றார்; இக்கருத்தேபற்றி முன்னர்க் குயவனார்கடியேன் என்றதூஉமென்க - பெயரும் மரபும் தொகைநூல் உணர்த்திற்று. |
வகை :- தனை.....புகழோன் - தனக்கொப்பில்லாத திருஎருக்கத்தம்புலியூரில் வந்தவதரித்த பெரிய புகழினை உடையவராகிய; நினை ஒப்பரும்.......பாணனை - |