| | | (வி-ரை) பாலை....ஆராய்ந்து - பாடல், கண்டப்பாடல் என்றும் கருவிப்பாடல் என்றும் இருவகைப்படும். இவற்றுள் கண்டப்பாடல் உயிர்க்கிடனாம் கருவியாகிய உடற்பகுதிகளால், இயற்றப்படுதலாற் சிறப்புடையது. கருவிப்பாடல், உயிரற்ற கருவிகளாலியற்றப் படுதலின் அத்துணைச் சிறப்பில; அவை எந்த அளவுக்கு மிடற்றுப்பாடலுடன் ஒப்பிடவருமோ அந்த அளவுக்குச் சிறப்புடையன; அவ்வொற்றுமை பற்றித் தலைசிறந்த கருவிகள் குழலும் யாழுமாம்; இவ்விரண்டனுள்ளும் சொல்லையே ஒலிப்பதுபோன்ற தன்மையாற், குழல், மிகச் சிறந்தமையால் முன்வைக்கப்படும் இம்மூன்றனுள் கண்டப்பாடற் பாகுபாட்டமைதியினை முன்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்துள்ளும் (221), குழற்கருவியின் அமைதியினை ஆனாய நாயனார் புராணத்துள்ளும் (938; 947 - 953) விரித்தருளினர். ஆண்டாண்டும், பிறாண்டும் (III - பக். 1223) உரைத்தவை யெல்லாம் இங்கு வைத்துக் கண்டுகொள்க. குழற்கருவிக் குரைத்த தன்மைகள் எல்லாம் பெரும்பாலும் யாழ்க்கருவிக்கும் ஒக்கும். அவற்றுள் யாழ்ப் பண் அமைதிபற்றிச் சிறப்பாயறியப்படும் ஒருசில பண்புகளை மட்டும் ஈண்டச் சுருக்கி ஆசிரியர் எடுத்துக் கூறியருளுகின்றார்; அத்தன்மைகளுள் கருவி வீக்குதலும் கை பலமுறையு மாராய்தலும் குழலுக்கின்றி, யாழுக்குச் சிறப்பாயுரியனவாதலின் ஈண்டு எடுத்துக் கூறப்படுதல் கண்டு கொள்க. | பாலை ஈரேழு கோத்த பண்ணினில் - பாலை - ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம் என்று நான்கு வகைப்படும்; அவற்றுள், பாலையாழ் , குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ், என்ற நான்குவகைப் பண்களும் பிறக்கும்; பாலையா முள்ளே செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்ற ஏழு பாலையிசைகளும் பிறக்கும்; அவைவரன்முறை, இடமுறை எனத் திரிபுவகையால் இருதிறப்படும்; அவற்றுள் பல பண்களும் பிறக்கும்; ஆயப்பாலையாய் நின்ற பதினாற்கோவையி னிறுவிய செம்பாலை முதலிய இவ்வேழினையும் பாலையீரேழு என்பர். இங்குப் பண் என்றது ஆயப்பாலையை. | பண்ணினிற் கருவி வீக்கி - யாழிலிட நினைந்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பு ஆகிய நரம்புகளை அறிந்து வீக்கி; இதனைக் கலைத்தொழில்கள் எட்டனுள் பண்ணல் என்பர். | கை பலமுறையும் ஆராய்ந்து - முன்கூறிய அவ்வாறு வீக்கின நரம்பை, அகவிரல் புற விரல்களால் கரணம் செய்து தடவிப்பார்த்தல் பரிவட்டணையாம்; ஆரோகண - அவரோகண (ஏற்றல் - இறக்குதல்) வகையால் இசையினைத் தெரிதல் ஆராய்தலாம்; அநுசுருதி யேற்றல் தைவரல் எனப்படும்; இவற்றோடு வார்தல் முதலிய எட்டுவகை யிசைக் காணங்களையும் இயற்றி என்க. | இசைக் கரணங்கள் எட்டாவன; வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன; வார்தலாவது - சுட்டுவிரலாற் றொழில் செய்தல்; வடித்தலாவது - சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை உள்ளும் புறமும் ஆராய்தல்; உந்தலாவது - நரம்புகளைத் தெறித்து வலிவும் மெலிவும் நிரலும் அறிதல்; உறழ்தலாவது - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் நரம்புகளைத் தெறித்தல்; உருட்டல் - நான்குவகை; இடக்கைச் சுட்டுவிரலுருட்டல், வலக்கைச் சுட்டுவிரலுருட்டல் என்பன; தெருட்டலாவது - திருந்திய நரம்பை மிகவுந் தொட்டுத் திருகிவிடுதல்; அள்ளலாவது - சுட்டுவிரலாலும் பெருவிரலாலும் அள்ளுதல்; பட்டடையாவது - நரம்பு முற்றும் விளிமுறையாற் பற்றி எழுப்புதல். | | |
|
|