பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்536

 

     இன்னும் இவற்றின் விரிவெல்லாம் இசைநூல்களுள்ளும், சிலப்பதிகாரம்
அரங்கேற்றுகாதை - கானல்வரி - அடியார்க்கு நல்லாருரை, முதலியவற்றுட் கண்டு
கொள்க. கூர்ம புராணம் கண்ணன் மணம்புணர்ந்த அத்தியாயமும் காண்க.
மேற்கூறியவை பெரும்பாலும் சிலப்பதிகார உரையைத் தழுவி எழுதப்பட்டன.
 

     காலம் ஆதரித்த பண் - பாடும் நேரத்துக்கும் காலத்துக்கும் உரிய பண்; பகல்
இரவு - யாமம் - பெரும்பொழுது முதலிய காலக் கூறுபாடு பற்றி உரிய பண்கள்
வகுக்கப்படும்; இப்பண்பு இந்நாளில் கைவிடப்பட்டு வருகின்றமை வருந்தத் தக்கது!
 
     ஏலம் - மயிர்ச்சாந்து; “ஏல வார்குழ லாளுமை நங்கை” (நம்பி)
 
     பாணிகள் - இசைப்பாட்டுக்கள்; கீதங்கள்; பாணனார் யாழினொடு பொருந்த
மிடற்றுப்பாடலும் பாடினர் என்பது மேல் அறியப்படுதலால் (பாடுகின்றார் (4218); பாடக்
கேட்டு 4219) அதற்குரிய பாட்டின் பகுதியில், செலவு, விளையாட்டு, கையூழ்,
குறும்போக்கு என்ற நான்கு அமைதிகளும் மிடற்றும் பாடற் பகுதியில் எடுத்தல்,
படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்ற ஐந்தும் நிகழ்தல் முதலிய
இலக்கணமெல்லாம் மேற்கொள்ளப்படும். இவைபற்றி முன் உரைத்தவை எல்லாம்
ஈண்டு நினைவு சர்தற்பாலன பணிகள் யாழில் இருதலாவது - கீதங்களின் சொல்லமைதி
யாழ் இசையில் வெளிப்பட இயற்றுதல்                                    2
 
4217.    மற்றவர் கருவிப் பாடன் மதுரைநீ டால வாயிற்
கொள்ளவன் றிருவுள் ளத்துக் கொண்டுதன் றொண்டர்க் கெல்லாம்.
அற்றைநாட் கனவி லேவ, வருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு புக்கார்.             3
 
     (இ-ள்) மற்றவர்.......கொண்டு - மற்று அவரது (பாணனாரது)
யாழ்க்கருவியிலிடப்பட்ட பாடலினை மதுரையில் நீடுகின்ற திருவாலவாயில்
எழுந்தருளியுள்ள சௌந்திரபாண்டியராகிய அரசர் தமது திருவுள்ளத்துக் கொண்டருளி;
தன்....ஏவ - தமது திருத்தொண்டர்களுக் கெல்லாம் அன்று கனாவிலே தோன்றி
ஏவியபடியினாலே; அருட்பெரும்....புக்கார் - (அவ்வடியார்கள் மறுநாள்) சிவனருளைப்
பெற்ற பெரும் பாணனாரைப் பகைவர்களது புரங்களை அழித்த இறைவரது
திருமுன்பிலே கொண்டு புகுந்தனர்.
 
     (வி-ரை) மற்று அவர் - மற்று - உட்புகுந்து முன்பு பாடவேண்டிய
நிலையிலிருந்தும், அவ்வாறு இல்லாது புறவாயிலின் நின்று பாடிய அவர் என்ற
குறிப்புடன் நின்றது.
 
     கருவிப்பாடல் - யாழ்ப்பாட்டு; திருவுள்ளத்துக்கொண்டு - திருவுளத்தில்
விரும்பியமையால்; கனவில் - கனவில் தோன்றி; ஏவ - அவரைத் திருமுன்பு கொண்டு
புகும்படி ஏவ; அருள் - திரு அருளுக்கிலக்காகி அதனை நிரம்பப் பெற்ற.
 
     தெற்றினார் - பகைவர். வினையாலணையும் பெயர்.
 
     பெரும்பாணனார் - பாணர், பெரும்பாணர் சிறு பாணர் என்று இருவகையினர்;
இப்பகுப்பு அவர்களது யாழின் தன்மை பற்றியது. பெரும்பாணற்றுப்படை -
சிறுபாணாற்றுப்படை என்பன காண்க. “பெரும்பாணராவார்குழலர் பாணர் முதலிய
பெரிய இசைக்காரர்” (அடியார்க்).