பக்கம் எண் :

பெரியபுராணம்545

 
     சரிதச்சுருக்கம்; திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் புராணம்;- நடுநாட்டில்,
திரு எருக்கத்தம்புலியூரில், பாணர் மரபில்
, நற்பான்மையினால் வந்தவதரித்தவர்
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், அவர் யாழ் பயிற்றும் சிறப்புக் காரணமாக
யாழ்ப்பாணர் என்றழைக்கப் பெற்றனர். குயவராகிய திருநீலகண்ட நாயனாரினின்றும்
வேறுபிரித்து உணர்தற்பொருட்டு இவர் பெயரை யாழ்ப்பாணர் என்ற அடைமொழி
புணர்த்தியே ஓதுவர். இவர் சிவபெருமானிடத்து மிக்க அன்புடையவர்; சிவனது
சிறப்புக்களை யாழிலிட்டு வாசித்துப் பரவும் நியமமுடையவர்; இவரது மனைவியார்
இசையே வடிவாயமைந்த மதங்க சூளாமணியார் என்பவர். இவ்விருவரும்
யாழிசையுடன் பொருந்தச் சிவன் புகழ்களைக் கண்டப்பாட்டும் உடன் பாடிப்
பரவிவருதல் வழக்கம்.
 
     இவர் சிவன் றானங்கள் பலவும் பணிந்துபோய்த் திருவாலவாயுடையாரது
கோயிலையணைந்து, திருவாயிலையடைந்து, வாயிலின் நின்று, இறைவர்புகழ்களை
விதிமுறைமையில் யாழிலிட்டு அருமையாக வாசித்தனர். அது கேட்டு மகிழ்ந்து,
இறைவர், அதனைத் திருவுள்ளத்துக் கொண்டு, அன்றிரவு தமது தொண்டர்க் கெல்லாம்
கனவிற்றோன்றிப் பாணனாரைத் தமது திருமுன்பு கொண்டு புகச்செய்ய
ஆணையிட்டருளினர்; அவ்வாறே பாணனாரது உணர்ச்சியிலும் உணர்த்தியருளினர்.
அதனால் பாணனார் இறைவர் திருமுன்பு புகுந்து இருந்து அவரது புகழ்களை
யாழிவிட்டுப் பாடினார்; தரையினிற் சீதம் தாக்கில் சந்தயாழ் வீக்கழியும் என்று
இவருக்குப் பலகையிடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் ஆணையிட, அவ்வாறே
தொண்டர்கள் பலகையிட்டனர். பாணனார் அதன்மேல் ஏறி யிருந்து யாழியற்றித்
துதித்துத் திருவருள் பெற்றுச் சென்றனர்.
 
     அதன்பின், இடையில் உள்ள பல தானங்களையும் கும்பிட்டுப், பாணனார்,
இறைவரது திருவாரூரினை அணைந்து தமது மரபின்படி கோயில்வாயில் முன்னின்று
இறைவர் புகழ்களை யாழிலிட்டுப் பாடினர்; இவருக்காக இறைவர் வடதிசையில்
வேறுவாயில் வகுத்தருளப் புகுந்து, திருமூலத்தான நாதர் முன்பு சென்று வணங்கினர்.
திருவருள் பெற்றுப் போந்து இடையில் பல பதிகளையும் வணங்கிப்போய் ஆளுடைய
பிள்ளையாரை வணங்கும் பொருட்டுச் சீகாழியில் அணைந்தனர்.
 
     ஆளுடையபிள்ளையார் இவருக்குத் தக்கவாறு சிறப்பருளித் தமது பதிகங்களை
யாழிலிட்டுப் பிரியாது உடனிருக்கும் பேற்றினை அளித்தருளினர். அவ்வாறு பல காலம்
ஆளுடையபிள்ளையாருடனே இருந்து திருநல்லூர்ப் பெருமணத்தில் அவரது
திருமணத்திலே அடியார் கூட்டத்துடன் அவருடனே கூடப் பரமர் திருவடி நீழ
லடைந்தனர்.
 
     கற்பனை ;- (1) யாழியற்றுதல் பாணர்க்குச் சிறப்பாயுரிய தொழில்.
 
     (2) பாணர்கள் திருக்கோயிலின் வாயிலில் அமர்ந்து இறைவரது புகழ்களை
யாழிலிட்டுப் பாடுதல் மரபு ஒழுக்கம். (4216 - 4222)
 
     (3) தீவிர மிகுதிப்பட்ட அன்பர்க்கு அவ்வவர் பக்குவ நிலைக்கேற்றவாறு
அவரவர் மரபொழுக்க நிலையினும் மேம்பட்ட திருவருள்களையும் செய்தருளுவர்
இறைவர். அதுபற்றி அவ்வவர் உலகியல் மரபொழுக்க விதி நியமங்களுக்கு
இழுக்கில்லை; இவ்வுண்மை கண்டு உலகம் ஒழுக்கநூல் விதிகளைக் கைவிடா தொழுகி
நலம் பெறுதல் வேண்டும். (4217 - 4222)