பக்கம் எண் :

பெரியபுராணம்547

 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

70. சடைய நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோன்”

- திருத்தொண்டத் தொகை - (11)
 

வகை
 

தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னிற் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை யுரைப்பர் குவலயத்தின்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
குலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (84)
 

விரி
 

4227. தம்பி ரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பா லொருதூது செல்ல வேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான் பெருமா ளிணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார் ஞால மெல்லாங் குடிவாழ.               1
 
     புராணம் ;- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டாவது மன்னியசீர்ச்
சருக்கத்துள் ஐந்தாவது சடைய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்; சடைய
நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
 
     தொகை ;- எமது பிரானாகிய சிவபெருமான் றிருவடிகளையே அடைந்திட்ட
சடைய நாயனாருக்கும் இசைஞானியாருக்கும் காதலனாகி வந்த திருநாவலூர்த்
தலைவனாகிய அடியேன்.
 
     என்னவன் - எனது தலைவராகிய அவன்; அவன் - இவன் - என்பன
மகாவாக்கியப் பொருள் குறித்தன; (சிவஞா); அவன் - தற்பதப் பொருளாயுள்ளவன்;
என்னை ஆளாக உடையவன்;அடியே - ஏகாரம் பிரிநிலை; வேறொருவருக்கும்
ஆளாயடையாதவர்; இதனை “நிலவும் பணியு மணிந்தாரருள் பெற்ற........சடையனார்”
(4226) என ஆசிரியர் முன்னர் விரித்தருளினர்; அடைதல் - புகலாகச் சார்தல்; இங்கு
நம்பிகள் தம்மைச் சடையனார் - இசைஞானியார் - இவர்களின் காதலன் என்று
அறிவிக்கும் வகையால் அவர்களைத் துதிக்கும் திறம் காண்க. இது பற்றியே நம்பி