பக்கம் எண் :

பெரியபுராணம்551

 

     உரைப்பது ஞானியையே - எடுத்துத் துதிப்பது இசைஞானிப்
பிராட்டியாரையேயாம்.
 

     காளையைப் பயந்தாளென்றும், அரன் திருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள்
என்றும் ஞானியையே உரைப்பது என்று கூட்டுக; கறு - கறுவுதல் - கோபித்தல்.
 
     பொள்ளல் - உள்துளை; பனைக்கை - பனைபோன்று பருத்து நீண்டதுதிக்கை;
“பனைக்கை மும்மத வேழம்” (தேவா); காளை - காளைபோன்ற நம்பியாரூரர்; இளமை,
வீரம், பெருமிதம் முதலிய பண்புகள் பற்றிக் காளை என்றார்; காளை போன்றவரைக்
காளை என்றதுபசாரம்; நயத்தல் - விரும்பி யமர்த்திக்கொள்ளுதல்; ஞானி -
இசைஞானியார் ; இசைஞானி - என்ற சொற் பொருள்தர உரைப்பது ஞானியை
என்றார்; ஆரூர்ப்புனித அரன்றிருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள் - என்க.
இவ்வம்மையார் கமலாபுரத்தில், சிவகௌதம கோத்திரத்தில், ஞானசிவாசாரியார்
பரம்பரையில் அவதரித்தவர் என்று திருவாரூர்ச் சாசனம் ஒன்றினாலறியப்படும் செய்தி
இங்குவைத்துக் கருதத்தக்கது. (கமலாபுரம் = திருவாரூர்); இவ்வம்மையாரது ஊர்
திருவாரூர் என்பதும், அதுகாரணமாக இவரது மகனாருக்கு ஆரூரன் என்று அடிப்பேர்
வைக்கக் காரணமாயிற்று என்பதும், இதுபற்றியே ஆரூர்த் திருமூலத் தானத்தே
யடிப்பே ராரூரன்,” “ஆரூரன் பேர் முடிவைத்த” என்பனவாதி நம்பிகள்
திருவாக்குக்கள் எழுந்தன என்பதும் ஈண்டுக் கருதத்தக்கன. இவ்வாறே ஆசிரியர்
சேக்கிழார் பெருமான் தமது தாயாரது தலமாகிய சோழநாட்டுத் திருநாகேச்சுரத்தைத்
தமது ஆன்மார்த்த தலமாகக் கொண்டதுபற்றி எனது “சேக்கிழார்” (9) பக்கத்தில்
உரைத்தவையும் கருதுக.
 
     விரி :- 4228. (இ-ள்) ஒழியா.......திருமனையார் - குறைவில்லாத பெருமையினை
யுடைய சடைய நாயனாரது செல்வம் பொருந்திய திருமனைவியாரும்; அழியா....பயந்தார்
- வேறெவ்வாற்றானும் அழியாத வலிமையுடைய முப்புரங்களை எய்து அழித்தவராகிய
சிவபெருமான் ஆண்டருளிய நம்பியாரூரரைப் பெற்றவரும் ஆகிய;
இழியா.....பிராட்டியாரை - இழிவில்லாத உயர்வுடைய குலமாகிய சிவவேதியரது
குலத்தின் வந்த இசைஞானிப் பிராட்டியாரை; என் சிறுபுன்.....முடியாது - எனது சிறிய
புன் மொழிகளாற் புகழ முடியுமோ? எனக்கு முடியாமையேயன்றி வேறு எவருக்கும்
முடியாது. (ஆல் -அசை)
 
     (வி-ரை) ஒழியாப் பெருமை - அளவில்லாத பெருமைகளை உடைய. நீங்காத
என்றலுமாம்.
 
     செல்வம் - அருட்செல்வம்; சிவச்செல்வம். உரிமை - இல்லற உரிமைக்குரிய.
 
     அழியா.......அழித்தார் - அழியா - வேறெவராலும் எவ்வாற்றாலும்
அழிக்கலாகாத.
 
     இழியாக்குலம் - சிவவேதியர் மரபு; குலத்தின் இழிவாவது - பிரமதேவனுடைய
படைப்பினுட்பட்டுப் பிறந்திறந்து உழலும் கீழ்மை; இழியாக்குலம் - அவ்விழிபுக்
கிடமின்றிச் சிவனது சிருட்டியுட் பட்டுச், சிவ னைம்முகங்களின் வழித் தோன்றி,
அவ்வழிவழி அதிகரித்துச் சிவாகமப்படி சிவனை அருச்சித்தலையே தமது
மரபுரிமையாகக் கொண்டொழுகும் குலம். “இழியாக் குலத்திற் பிறந்தோ மும்மை யிகழா
தேத்துவோம்” (நம்பி - தேவா - திருவாரூர் - செந்துருத்தி - 8); “எப்போது
மினியபிரா னின்னருளா லதிகரித்து” (4160) “மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை
செய்யும் வேதியர் குலம் ” (149); “மாசிலா மரபில் வந்த வள்ளல்” (186) என்பன
முதலியவை காண்க. பயந்தார் - “பயந்தாள்” என்பது வகைநூல். பயந்தார் -
தென்றமிழ்ப் பயனாயுள்ள திருத்தொண்டத் தொகை தரும் நம்பியைத் தந்தனர்