| (இ-ள்) அந்தணாளர் வணங்கி - வினவப்பெற்ற அந்தணர்கள் நம்பிகளை வணங்கி; அரும்புதல்வர்.....அழுகை - அரிய புதல்வர்கள் இருவர் ஐந்து வயது வந்தவர்கள்; குளித்த மடுவிலே ஒரு பிள்ளையை முதலை முன்விழுங்கிவிடத் தப்பிப் பிழைத்த பிள்ளைக்குப் பூணூல் அணியும் கலியாணமாகிய உபநயனம் நிகழ்வது இந்தமனை; மற்று ஒரு பிள்ளையை இழந்தாரது அழுகை அந்த மனையில் நிகழ்வது; என்று உரைத்தார் - என்று விடை கூறினார்கள். |
(வி-ரை) அந்தணாளர் - உரைத்தார் என்க. பிராயம் - வயது; பருவம்; குளித்த மடுவின் - விழுங்க - மடுவிற் குளித்தபோது ஒருமகவை விழுங்கிட; மடு - ஆழமாகிய நீர்நிலை; விழுங்க - மென்று தின்னும் இயல்பின்றி முதலைகள் தமது இறையினைப்பற்றி விழுங்கும் இயல்புடையன; விழுங்கியபின் ஒருவாற்றால் முதலைவயிற்றினைக் கிழித்து வெளிப்போந்து உயிர் பிழைத்தாரது வரலாறு முண்டு. |
பிழைத்தவன் - முதலை வாயிலகப்படாது தப்பிவந்து பிழைத்தவன். |
முந்நூலணியும் கலியாணம் - உபநயனம். பூணூல் கல்யாணம் என்னும் வழக்கும் காண்க. |
கலியாணம் இந்தமனை - கலியாணம் இந்தமனையில் நிகழ்வது. |
பிரமோபதேசம் என்னும் ஞான வாணியைச் சேர்வித்தல் என்பது குறிப்பு. மற்று - வினைமாற்றின்கண் வந்தது; அந்தமனை - அந்தமனையில் நிகழ்வது என்க. |
இழந்தார் - முதலையால் விழுங்கப்பட்டு மகவை இழந்தவர்களது; ஆறனுருபு விரிக்க. 6 |
| 4235. | இத்தன் மையினைக் கேட்டருளி யிரங்குந் திருவுள் ளத்தினராம் மொய்த்த முகைத்தார் வன்றொண்டர் தம்மை முன்னே கண்டிறைஞ்ச வைத்த சிந்தை மறையோனு மனைவி தானு மகவிழந்த சித்த சோகந் தெரியாமே வந்து திருத்தா ளிறைஞ்சினார். 7 |
(இ-ள்) இத்தன்மையினை....வன்றொண்டர் தம்மை - இந்தத் தன்மையைக் கேட்டு இரக்கங் கொண்ட திருவுள்ளத்தினைக் கொண்ட பூக்கள் நிறைந்த மாலையினையணிந்த வன்றொண்டரை; முன்னே...மனைவிதானும் - பார்த்து வணங்கவேண்டுமென்று முன்னமே மனம் வைத்திருந்த அந்த வேதியரும் அவரது மனைவியும்; மகவிழந்த....இறைஞ்சினார் - தமது மகவை இழந்த சித்தசோகத்தை அறியாராய் வந்து அவரது திருவடிகளை வணங்கினார்கள். |
(வி-ரை) இத்தன்மை - முன்பாட்டிற் கூறியவரலாறுகளின் நிலை. |
இரங்கும்...வன்றொண்டர்- இரங்கும் திருவுள்ளம் - இது வன்றொண்டர் திருவுள்ளது எழுந்த எல்லாவுயிர்களின் மேலும் பொதுவாய்ச் செல்லும் கருணைத் தன்மை; பூததயை என்பர்; மேல் (4237) கூறுவது, அம்மறையோன்பாலும் அவரது மனைவிபாலும் அவர்களது சிவனடிமைப் பண்புகண்டெழுந்த சிறப்புக் கருணைநிலை. |
முன்னே....சிந்தை - நம்பிகளது பெருமை கேட்டு அவர் திருவடிகளில் அன்பு கொண்டு அவரைக்கண்டு வணங்கவேண்டும் என்று இவர்கள் முன்னே பலநாளும் கொண்டிருந்த ஆர்வமுடைய மனம். |
சோகம் தெரியாமே - வலியதாகிய புத்திர சோகத்தின்பாற்பட்டு அப்போது அழுதுகெண்டிருந்த இவர்கள், நம்பிகளது வரவு கேட்டவுடன், முன்னர் மனத்துள் அழுந்தியிருந்த ஆர்வ மேலெழப் புத்திரசோகம் இருந்த இடம் தெரியது தானே |