பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்566

 

     அவ்...எழுந்தருளி - அத்திரு வீதியினின்றும் பொய்கைக் கரையில் சென்றருளி;
வாழ் பொய்கை எனப் பிரித்து மகன் முன்னர் இறந்தானாயினும் பின்னர் வாழ்வுதரும்
பண்புடைய பொய்கை என்றும், இவ்வரலாற்றினை யறிந்து உலகம் வாழ்வு பெறநிற்கும்
பொய்கை என்றும் குறிப்புப்பட உரைக்க நிற்பதும் காண்க. பொய்கை -
மானிடராக்காத நீர்நிலை என்பர் நச்சினார்க்கினியர். கொடு - கொண்டு; இடைக்குறை.
 

     கரையில் எழுந்தருளி - என்றும், முதலை அவனைக் கொடுவருதற்கு -
என்றும் கூறிய நிலைகள் “யாது யாண்டொடுங்கிற்று அஃது ஆங்கு நின்று மீள
உளதாகும்” என்னும் சைவசித்தாந்த உண்மையினை உள்ளடக்கி விளக்கி நிற்கின்றன.
“ஒடுங்கிமலத்துளதாம்” (போதம் 1 - சூத்.) முன்பாட்டினும் “அந்த முதலை
வாய்நின்றும்” என்றதும் காண்க. எலும்பைப் பெண்ணாக்கிய அற்புத்திலும் இவ்வுண்மை
விளங்குதல் காண்க.
 
     எடுத்தார் - தொடங்கிப் பாடியருளினார்.
 
     வருதற்கு - வரும் பொருட்டுத் திருவருளினை நோக்கி ஆணை யிட்டருளி;
காரணப் பொருளில் வந்தது.
     திருப்பதிகம் - எடுத்தார் என்க.                                10
 
4239.     “உரைப்பா ருரை”யென் றெடுத்ததிருப் பாட்டு முடியா முன்னுயர்ந்த
வரைப்பான் மையினீ டடம்புயத்து மறலி மைந்தனுயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற் றுடலிற் சென்ற வாண்டுகளுந்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப முதலை வாயிற் றருவித்தான்.      11
 
     (இ-ள்) உரைப்பார்....முன் - எடுத்த அத்திருப் பதிகத்தில் “உரைப்பாருரை”
என்று தொடங்கிய திருப்பாட்டு நிறை வெய்தா முன்னே; உயர்ந்த...மறலி - உயர்ந்த
மலையின் தன்மைபோல நீண்ட பெரிய தோள்களையுடைய இயமன்; மைந்தனுயிர்
கொணர்ந்து - மகனுடைய உயிரைக் கொண்டு வந்து; திரைப்பாய்.....நிரம்ப -
அலைகளையுடைய நீரில் முதலையின் வயிற்றிலே நிலத்தில் இருந்து வளர்ந்ததுபோலக்
கழிந்த (இரண்டு) ஆண்டுகளும் உடம்பில் நிரம்ப; முதலைவாயில் தருவித்தான் -
முதலையின் வாயில் வரச் செய்தான்.
 
     (வி-ரை) “உரைப்பாருரை” என்று - இது திருப்பாட்டின் தொடக்கம்; எடுத்த -
தொடங்கிய; இஃது அத்திருப்பதிகத்தின் நான்காவது திருப்பாட்டு; இதன் ஈற்றடியில்
“அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே”
என்று நம்பிகள் இறைவர்பால் விண்ணப்பிக்கின்றார். திருப்பாட்டு - நம்பிகளின்
பாடலுக்குச் சிறப்பாய் வழங்கும் பெயர் வழக்கு; பிள்ளையார் பாடல் திருக்கடைக்
காப்பு என்றும், அரசுகள் திருவாக்குத் தேவாரம் என்றும் வழங்கும்;
“படியிலாநின்பாட்டில்” “வீட்டுக்கு வாயி லெனுந் தொடை” என்னும் குறிப்புக்கள்
காண்க.
 
     முடியா முன் - முடிந்த உடனே என்று விரைவு குறித்தது; முடியுமுன் என்னாது
முடியா முன்என்ற குறிப்புக் காண்க. “நாவா யசைத்த வொலியொலி மாறியதில்லை”
(தேவா) என்புழிப் போலக் கொள்க. பதிகப்பாட்டுக் குறிப்புப் பார்க்க.
 
     உயர்ந்த வரைப் பான்மை - உயர்ச்சியுடைய மலையின் தன்மை; வரை -
மலை; வரைப்பான்மை என்னின், வலிமை மட்டிலமையுமாதலின், உயர்ச்சியும்
கூடக்குறிக்க, உயர்ந்த - என்றார், உயராதவரைகளும் (சிறுகுன்றுகளும்) உளவாகலான்;
பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; மேல் நீள் தடம் என்பதும் காண்க.