உடன் இருக்க நின்றது கண்டும், நம்பிகள், அன்று அவரைப் பிரிந்து, அவர் திருமஞ்சனத் தொழில் தொடங்கிடும்போதே தாம் தனித்துத் திருவஞ்சைக்களத்திற் சென்றருளினர். அதன் காரணம் என்னையோ? என வரும் ஐயப் பாட்டினை நீக்குதற்குப் “பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்துஞ், சேய நன்னெறி குறுகிட” என்றருளி, அதன் மேல் திருவஞ்சைக்களஞ் சார்தலைக் கூறுகின்ற அருட் கவிநயம் காண்க. இறைவரைத் தாம் பிரிந்து போந்த நிலை நீங்கிச் செல்கின்ற காலம் அணித்தாயினமையால் இவ்வாறு தமது தோழனாரைப் பிரிந்து போந்தனர் என்பது. |
மஞ்சனத் தொழில் - நீராடுதல்; பெரியோர்கள் அரசர்கள் முதலாயினவர் நீராடுதலை இவ்வாறு கூறுதல் மரபு; பெருமடங்களில் இன்றும், இவ்வழக்குக் காணலாம்; இறைவரது திருமுழுக்கினைத் திருமஞ்சனம் என்றும், திருமுழுக்குக்குரிய நீரினைத் திருமஞ்சன நீர் என்றும் கூறும் மரபு இன்றியமையாத வழக்கு; மற்றும் பெரியோர்களைப் பற்றிக் கூறுதல் இறைவரோடொப்ப எண்ணும் முறை பற்றிய உபசார வழக்கு. |
துணைவராம் - வன்றொண்டர் - குறுகிடக் குறுகினார் - இணைபிரியாத துணைவராயிருந்தும் பிரிந்து குறுகினார்; (அதற்குக் காரணம் குறுகிடலாலாவது என்றபடி) துணைவராம் - என்றது பிரியாத் துணைவராயிருந்தும் என்ற குறிப்புடன் நின்றது. |
துணைவர் ஆம் - ஆம் - ஆகும்; துணைவராதலின் பின்னர், அவரை (தோழரை - சேரரை) இறைவர்பால் அணைவிக்கும் தன்மையராகும் என்ற குறிப்பும் காண்க. “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்” என்ற திருக்குறட் கருத்தும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது. |
பாய - பரவிய - நிரம்பிய; கங்கைசூழ் -கங்கையினைக் கலைரபோலச் சூழ்ந்து சுற்றிய; இரண்டனுருபு விரிக்க; இவ்வாறன்றிச் சூழ் - கங்கை உள் நிரம்பிய என்றுரைத்தனர் முன் உரைகாரர். |
நெடுஞ்சடை - நெடுமையாவது ஆயிர முகத்தாலும் பரவி எழுந்த கங்கைப் பெரு நீரினை அடக்கி முடிக்கு மளவு நீளுதல். |
பாமரை ......நன்னெறி - திருமலைச் சிறப்பிற் கூறிய வரலாறு; (31 - 39). சேய - சேய்மையாகிய; செம்மைதரும் ஞானநெறி என்றலுமாம். செம்மை - சிவத்தன்மை; நன்னெறி - என்ற குறிப்புமது. |
குறுகிடுதல் - தீரும் - முடியும் - எல்லை அணித்தாதல்; சேய்மை குறுகுதல்; “தடுத்த செய்கைதான் முடிந்திட” (4260) என மேல் இதனை விளக்குதல் காண்க. எய்தும் - கூடும் நெறி; குறுகிட - சரா என்றுரைத்தலுமாம். 28 |
| 4257. | கரிய கண்டர்தங் கோயிலை வலங்கொண்டு காதலாற் பெருகன்பு புரியு முள்ளத்த ருள்ளணைந் திறைவர்தம் பூங்கழ லிணைபோற்றி அரிய செய்கையி லவனியில் விழுந்தெழுந் தலைப்புறும் மனைவாழ்க்கை சரிய வே “தலைக் குத்தலை மாலை” யென் றெடுத்தனர் தமிழ்மாலை. |
| 29 |
(இ-ள்) கரிய...வலங்கொண்டு - நீலகண்டரது கோயிலினை வலமாகச் சுற்றிவந்து; காதலாற் பெருகன்பு புரியும் உள்ளத்தார் - பெருவிருப்ப மிக்கோங்குதலாற் பெருகிய அன்பு நிலையே சிந்தையினை முழுதும் இடங்கொள்ளப் பெற்றவராகிய நம்பிகள்; உள் அணைந்து....போற்றி - உள்ளே சேர்ந்து இறைவரது பூப்போன்ற திருவடிகளிரண்டினையும் துதித்து; அரிய......எழுந்து - அருமையாகிய செயலினாலே நிலமிசை விழுந்து எழுந்து; அலைப்புறும்.....தமிழ்மாலை - அலைத்தல் பொருந்திய |