பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்588

 
இவ்வுலகத்து மனை வாழ்க்கை தம்மைவிட்டு நீங்கி ஒதுங்கி யிடவே “தலைக்குத்
தலைமாலை” என்று தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தினைத் தொடங்கினர்.
 
     (வி-ரை) காதலால்....உள்ளத்தார் - இஃது அன்று கோயிலை வலங்கொண்ட
பின் உள்ளணையும்போது நம்பிகளது மனநிலை, புரியும் உள்ளத்தர் - இடைவிடாத
நினைப்பினாலே உள்ள முழுதும் விழுங்கிய நிலையினர்; “ஒன்று சிந்தைநம் மூரன்”
(4260) என்பது காண்க.
 
     போற்றி - பலவாறும் துதித்து; இஃது இறைவரது புகழ்களைக் கீதம்
முதலியவற்றால் எடுத்துச் சொல்லி வணங்குதல். பதிகம் பாடுதல் வேறு; அது மேல்
வருதல் காண்க.
 
     அரிய செய்கையில் - செய்தற்கரிய தன்மையில் நின்று; இவ்வுலக வாழ்விலே
தமக்குப் பெரிதும் அன்புடைய தேவிமாரிருவரது இன்பமும், முடியுடை மன்னராகிய
சேரனாரது அரசச் செல்வ வாழ்வும், “இறைகளோ டிசைந்த இன்பமும்,
இன்பத்தோடிசைந்த வாழ்வும்”, இறைவரது அருட் பெருஞ் செல்வமும்
நிறைந்திருக்கப்பெற்ற நம்பிகள் அத்தகைய இவ்வுலக மனை வாழ்க்கையினைவெறுத்து
முத்தி விண்ணப்பம்செய்ய வருகின்றாராதலின் அக்குறிப்புப்பட “அரிய செய்கையில்”
என்றார். “செயற்கரிய செய்வார் பெரியர்” (குறள்).
 
     அலைப்புறும் - அலைத்தலைப் பொருந்திய; அலைத்தலாவது இன்பத்
துன்பங்களுக்கும் அவை காரணமாக விருப்பு வெறுப்புக்களும், அவற்றால் மீள மீளப்
பிறவிக்கும், அதனால் சென்று சென்று வரும் அலைச்சலுக்கும், காரணமாதல்,
 
     மனைவாழ்க்கை சரியவே - சரிதல் - தாமாகவே கழன்று விடுதல்;
‘உறங்கினேன் கை வெறும்பாக் கௌ'ப் பற்றுவிட்டொழிதல். மனைவாழ்க்கை - இங்கு
இல்வாழ்க்கையை உள்ளிட்ட இவ்வுலக வாழ்வு முழுதினையும் உணர்த்தி நின்றது; இது
பதிகத்தின் உட்குறிப்பு;. மேற்பாட்டும், பதிகம் 8-வது பாட்டும் பார்க்க. சரியவே -
சரிந்திடற்பொருட்டே. சரிதலாலே என்றலுமாம்.
 
     தலைக்குத் தலைமாலை என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
எடுத்தல் - தொடங்குதல்.                                    29
 
4258. எடுத்த வத்திருப் பதிகத்தி னுட்குறிப் “பிவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை யறுத்திட வேண்டு”மென் றன்பரன் பினிற்பாடக்,
கடுத்த தும்பிய கண்டர்தங் கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்;
 
4259.     மன்ற லந்தரு மிடைந்தபூங் கயிலையில் மலைவல்லி யுடன்கூட
வென்றி வெள்விடைப் பாகர்தாம் வீற்றிருந் தருளிய பொழுதின்கண்
“ஒன்று சிந்தைநம் மூரனை யும்பர்வெள் ளானையி னுடனேற்றிச்
சென்று கொண்டிங்கு வாரு” மென் றயன்முற் றேவர்கட் கருள் செய்தான்.
 
     4258. (இ-ள்) எடுத்த....என்று - அவ்வாறு தொடங்கிய அந்தத் திருப்பதிகத்தின்
உட்குறிப்பு இந்த உலகத்திற் பாசத் தொடக்குள்ள வாழ்க்கையினை அறுத்திட வேண்டு
மென்று கொண்டு; அன்பர்..பாட - அன்பராகிய நம்பிகள் அன்பு மிகுதியுடன் பாடியிட;
கடுத்ததும்பிய கண்டர் -விடம் மிக்கு விளங்கும் கழுத்