பக்கம் எண் :

பெரியபுராணம்593

 
ரது இடைவிடாத வழிபாட்டின் பயனாகும். மாட்சிமையுடைய கொச்சி மன்னர்
இத்திருவிழாவுக்குக் கருணைகூர்ந்து அனுமதியளித்ததோடு தமது அரசாங்கத்தில்
ஆண்டுதோறும் ரூ.100 - இவ்விழாவுக்கு அனுமதித்துள்ளார்கள்; திருப்பனந்தாள் ஸ்ரீ
காசிமடத் ததிபர் ஸ்ரீமத் அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் சேரமான்
பெருமாணாயனார் பெயரால் ஆடிச்சுவாதி நாளில் தேவாரப்பரிசுக்கு ரூ.5000/-ம், ஆடிச்
சுவாதி விழாவில் மாகேசுவர பூசைக்கு ரூ.7000-ம் மூலதனம் வைத்து அச்சிவ
நல்லறங்கள் நீடு நடைபெற நிறுவியுள்ளார்கள்; சேரமானார் பெயராற் சத்திரம் நிறுவக்
கொச்சி மன்னர் சமஸ்தானத்தார் திருவஞ்சைக் களத்தில் கோயிலடியில் 11 செண்டு
நிலம் கோவைச் சேக்கிழார் திருக்கூட்டத்தார் வசமாக்கி உத்தரவும் அளித்துள்ளார்கள்;
மேற்படி சத்திரமும் மேற்படி ஸ்ரீ காசி மடத்து அதிபர்கள் அளித்த ரூ.5000-ல்
தாபிக்கப் பட்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் சர். R.K. சண்முகஞ் செட்டியார்
பேராதரவளித்தார்கள்.
 
     சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி வாழ்க! சேரமான் பெருமாணாயனார் சேவடி
வாழ்க!
 
4260.   வான நாடர்க ளரியயன் முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள் ளானையுங் கொண்டுவன் றொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ் மகோதையிற் றிருவஞ்சைக் களஞ்சேரக்
கானி லங்கொள வலங்கொண்டு மேவினார் கடிமதிற் றிருவாயில்.       32
 
     (இ-ள்) வான நாடர்கள்.....விடைகொண்டு - அவ்வருளிப்பாட்டினைக் கேட்ட
தேவர்களும் விட்டுணு பிரமன் முதலினோர்களும் முன் வணங்கி விடை பெற்றுக்
கொண்டு; தூநலம்....வன்றொண்டர்க்கு - வன்றொண்டருக்காகத் தூய நன்மை விளங்கும்
ஒளியுடைய வெள்ளானையினையும் உடன் கொண்டு; தேனலம்பு....கானிலங்கொள -
தேன் துளிக்கின்ற சோலைகள் சூழ்ந்த மகோதை நகரத்தில் திருவஞ்சைக் களத்தினைச்
சார அணுகும்போது கால் நிலத்திலே பொருந்த; வலங்கொண்டு.....திருவாயில் -
வலமாக வந்து காவலுடைய மதிற்றிருவாயிலை அடைந்தனர்.
 
     (வி-ரை) வான நாடர்கள் - தேவர் உலகத்தவர். தேவர்கள்;
 
     தூ.....வெள்ளானை - இவ்வடை மொழிகளின் சிறப்பினால் இது
அயிராவணத்தினைக் குறித்ததென்பாரு முண்டு; வன்றொண்டர்க்கு - வன்றொண்டர்க்காக;
 
     தேன் அலம்பு - தேன் துளிக்கும்; மகோதையில் திருவஞ்சைக்களம் -
மகோதை
- திருக்கொடுங்கோளூரும் அஞ்சைக்களமும், பிறவும் சேரர் தலைநகர்
என்பது குறிக்க மகோதையில் என்றார்;
 
     சேரக் கால் நிலம் கொள - தேவர்கள் கால் நிலம் தோயாத
தன்மையுடையவர்கள். ஆதலின் இங்குத் தாம் வந்த செயல் நிகழ்த்தலுக்காகத்
திருவஞ்சைக்களம் சேரக்கால் நிலந்தோயக் கொண்டனர் என்க. இங்கு, இவ்வாறன்றி
நம்பிகள் கானிலம் தோய வலங்கொண்டு என்று கூட்டியுரைத்தனர் முன் உரைகாரர்.
அது பொருந்தாமை உணர்ந்து கொள்க. "விண்மேற் செலும்" "விசும்பெழ" (4263-4)
பார்க்க.
 
     சோலைசூழ்ந் திருக்குமத் - என்பதும் பாடம்.                   32
 
4261. தேவர் தங்குழா நெருங்கிய வாய்தலிற் றிருநாவ லூரர்தங்
காவன் மன்னரும் புறப்பட, வெதிர்கொண்டு "கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை முடியவ ரருளிப்பா" டெனப்போற்றி
"ஏவ"லென்றபின்செய்வதொன்றிலாதவர் பணிந்தெழுந்தெதிரேற்றார்.