பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்594

 
     (இ-ள்) தேவர்.....புறப்பட - முன் கூறியவாறு தேவர் கூட்டங்கள் வந்து
நெருங்கிய திருவாயிலின் வழியே திருநாவலூரர்களது காவலினைத் தரும் மன்னவராகிய
நம்பிகளும் (வழிபாடு முற்றியபின்) புறப்பட்டு வெளியேவர; எதிர்கொண்டு......என்ற பின்
- எதிர் கொண்டு திருக்கயிலையில் வீற்றிருந்தருள்கின்ற கொன்றை முதலிய பூக்கள்
பொருந்தித் ததும்பும் தண்ணிய கங்கை நீரினை ஏற்ற சடைமுடியவராகிய இறைவரது
அருளிப்பாடு என்று சொல்லித் துதித்து; அவருடைய ஏவல் இஃது என்று கூறியபின்;
செய்வதொன்று.....ஏற்றார் - வேறு செயலொன்றும் இல்லாதவராகிப் பணிந்து எழுந்து
எதிராக அந்த ஆணையினை உடன்பட்டருளினர்.
 
     (வி-ரை) தேவர் நெருங்கிய - நெருங்கிய - முன் பாட்டிற் கூறியபடி வந்து
கூடிய.
 
     வாய்தலில் - வாய்தலின் வழியாக - புறப்பட - நம்பிகள் வழிபாடு முடித்துப்
புறத்தே செல்ல அணைய; வாய்தல் - இவ்வாயில் அபிமுகத்துத் திருவாயில் என்பது
கருதப்படும். யானை வருதலும் நம்பிகள் புறப்படுதலுமாகிய அடையாளங்கள் இங்குப்
பொறிக்கப்பட்டுள்ளன.
 
     திருநாவலூரர்.....மன்னர் - நம்பிகள்; திருநாவலூரர் - நாவலூர் மக்கள்;
மன்னர் - தலைவர்.
 
     அருளிப்பாடு - ஆணை; கயிலை....அருளிப்பாடு - இறைவரது
ஆணையினைத் தெரிவிக்கும் முறை; மரபு; மேல் 4272-ல் வருவதும் காண்க. என -
என்று கூறி;
 
     ஏவல் - "தேவரீரை யானையின் மீதேற்றிக் கொண்டு வரும்படி இறைவரது
ஆணை" என்ற இறைவர் கட்டளையினை விரித்துரைத்தப்படி; என்ற பின் - என்று
கூறக்கேட்ட பின்பு;
 
     செய்வ தொன்றிலாதவர் - வேறு ஒன்றும் செயலில்லாதவராய்; ஒன்று -
ஒன்றும்; முற்றும்மை தொக்கது. சிவபெருமானது நியதியின்படி வரும் காலன்
முதலியோரது ஆணை வந்தபோது வேறு செயலிலாது செல்லும் நிலையிலுள்ள
உயிர்கள், இறைவரது ஆணை நேரே வந்தபோது உடன்பட்டுச் செல்வதன்றி வேறென்
செய்ய வல்லர்?
 
     எதிர் ஏற்றார் - அவர் கூறிய ஆணைக்குட்டு ஏற்று நின்றனர்.      33
 
4264. ஏற்ற தொண்டரை யண்டர்வெள்ளானையினெதிர்வலங்கொண்டேற்ற
நாற்ற டங்கடன் முழக்கென வைவகை நாதமீ தெழுந்தார்ப்பப்,
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவா ருயிரெல்லாஞ்
சாற்று மாற்றங்க ளுணர்பெருந் துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.
 
     (இ-ள்) தொண்டரை.....ஏற்ற - தேவர்கள் இவ்வாறு ஆணையினை ஏற்ற
நம்பிகளை எதிர்வலஞ் செய்து வணங்கித் தாங் கொணர்ந்த வெள்ளானையின் மீது
ஏற்ற; நாற்றடங்கடல்.....ஆர்ப்ப - நான்கு திசைகளிலு முள்ள பெரிய கடல்களின்
முழக்கம்போன்று ஐவகைத் தேவ துந்துபிகளும் எழுந்து சந்திக்க;
போற்றி......பொழிந்திட - துதித்துத் தேவர்கள் பூமாரி பொழிய; போதுவார்.....சார்ந்தார் -
போவாராகிய நம்பிகள் எல்லாவுயிர்களும் கழறிய சொற்களை யறிவாராகிய தமது
பெருந்தோழராகிய சேரமான் பெருமாணாயனாரைத் தம் மனத்தினுள்ளே நினைந்து
கொண்டவாறே சார்ந்தருளினர்.
 
     (வி-ரை) ஏற்ற - முன் கூறியவாறு அருளிப்பாட்டின் ஏவலை எதிர் ஏற்ற;
தொண்டரை - நம்பிகளை;
 
     அண்டர் - தொண்டரை - எதிர் வலங்கொண்டு வெள்ளானையின் ஏற்ற
என்க.