| | (இ-ள்) சேரர்.....அறிந்து - சேரமான் பெருமானார் தம்பிரான் றோழராகிய நம்பிகளது செயலினை அறிந்து அப்பொழுதே; சார....சார்வார் - சார நின்றதாகிய ஒரு குதிரையின் மேற்கொண்டு திருவஞ்சைக் களத்தினைச் சார்வாராக; வீர.....கண்டார் - வீரமுடைய வெள்ளானையினைச் செலுத்தி ஆகாயத்தின் மேலே செல்லும் மெய்த் தொண்டராகிய நம்பிகளைக் கண்டனர்; பாரின்.....செலவிட்டார் - நிலத்தில் நிற்கலாற்றாராய்த் தமக்கு முன்னே விரைவாய்ச் சென்ற தமது மனத்தினோடு குதிரையும் முன்பு செல்லும்படி விட்டனர். | (வி-ரை) சேரர் தம்பிரான் - தம்பிரான் - அரசர், மேலோர் முதலியோர்க்கு மலைநாட்டில் இன்றும் வழங்கும் மரபு வழக்குப் பெயர்; தம்பிரான் - தம்பிரான்றோழர் - சொற்பின் வருநிலை; தம்பிரான் தோழர் - இங்குத் தம்பிரான் - என்றது இறைவரது பெயராகவும், இடநோக்கி அரசர் பெயராகவும் சிலேடை வகையால் உரைக்க நின்றது; இது குறிக்கச் சேரர் தம்பிரான் என்றவாற்றாற் கூறிய குறிப்பும் காண்க. தம்பிரான் (தோழர்) - அரசர் தோழர் எனக் கொள்ளும்போது தமது தோழர் என்க. | செயல் அறிந்து - செயல் - நம்பிகள் மனத்தினுட் கொண்ட செயல்; அவர் தம்மைப் பிரிந்து திருவஞ்சைக்களம் போந்து முத்தி விண்ணப்பம் செய்ததும், வெள்ளானையினைக் கொண்டு தேவர்கள் போந்து இறைவரது அருளிப் பாட்டினைக் கூறியதும், அதனை ஏற்று, அவர் வெள்ளானையின் மேற்கொண்டு தம்மை மனத்தினுட் கொண்டவாறே விண்மேற் செல்வதுமாகிய எல்லாம் அறிந்து, இத்துணையும் செயல் என்ற வொருசொல்லாற் பெற வைத்தது ஆசிரியரது தெய்வக்கவி நலம்; இத்துணையும் சேரனார் கொடுங்கோளூரிலிருந்தவாறே அறிந்தது உயிரெல்லாம் சாற்று மாற்றங்களுணரும் அவரது சத்தியினாலும், அவருக்கு உணர்த்துமாறு எண்ணிய நம்பிகளது நினைப்பின் உறைப்பினாலுமாம்; "உயிர் எல்லாம் சாற்று மாற்றங்க ளுணர்பெருந் துணைவர்" (4262) என்றவாற்றாற் குறிப்பித்த நயமும் காண்க. | நீண்ட தூரத்து அப்பாற் கிளம்பும் மொழிகள், ஓசைகள் முதலியவை ஒலியலைகளாகப் பூத ஆகாயம் பற்றுக்கோடாக இப்பால் வந்து அவற்றை வாங்கும் கருவியமைப்பின் ஒழுங்கு மூலமாக நமக்குச் செவிப் புலப்படுதல், இந்நாளில், வானொலி தத்துவ ஆராய்ச்சியின் பயனாய் நாம் கண்ட உண்மை; Rodio Transmitting and Recieving Stations; Recieving set; என்பனவாதி விஞ்ஞான முறையமைப்புக்கள் ஆங்கிலத்திற் பேசப்படுவன. இதுபோல, இதனினும் மேலாய், நுண்ணிய அறிவாகாயம் பற்றுக் கோடாகக்கொண்டு ஒருவர் எண்ணிய நினைவுகள் ஒத்த உறைப்புடைய ஒருவரது உள்ளத்தினுள் அறிவலைகளாகச் சென்று தாக்கி, அந்நினைவுகளை அவர் அறிவுக்குப் புலப்படுத்துவன என்பது மனத் தத்துவ நூலோர் கண்ட மறுக்கலாகாத அனுபவவுண்மை; இவையெல்லாம் ஈண்டுப் "பெருந்துணை வரை மனத்தினிற் கொண்டு சார்ந்தார்" (4262) என்றும், "தோழர் தஞ்செய லறிந்து" (4263) என்றும் கூறியவாற்றால் உய்த்துணர வைத்தது ஆசிரியரது தெய்வக்கவி நலம். | இவ்வாறு நிகழ்வதற்கு இருவருக்குமிடையே செறிவுடைய மனவுறைப்பாகிய துணைத் தொடர்பு இருத்தல் வேண்டுமென்பதும் குறிப்பித்தவாறு காண்க. காணாமலே நட்புப் பூண்ட புலவர் பிசிராந்தையார் - கோப்பெருஞ் சோழர் இவர்களைப் பற்றிப் புறநானூற்றில் வரும் வரலாறுகளும் இங்குக் கருதற்பாலன; ஆயின், இங்கு, அதற்கு மேலாய் விளைந்த இவர்களது தோழமை, இறைவர்பால் கொண்ட அன்பு தரவந்த | | |
|
|