அழியாத பதித் தன்மைவாய்ந்த தூய உயிர்த்தொடர்பு; மற்றது அவ்வாறன்றிப் பசுத்தன்மை பற்றிய அழியும் தன்மையவாகிய பாசத்தொடர்பு; காணாமலே அன்புத் தொழும்பு பூண்ட அப்பூதியாரது எண்ணம், அரசுகளைத் தம்மையறியாமலே அப்பூதியாரது கடைத் தலையிற் செலுத்திய மனவுணர்வின் வலிமையும் ஈண்டுக் கருதற்பாலது. |
சார நின்றது ஓர் பரியினை - சார - அடுத்து; சிவமந்திரச் சார்பும், அது வாறாகத் திருக்கயிலைச் சார்பும் பெற நின்றதாகிய ஒரு ஒப்பற்ற பரி என்ற குறிப்பும் காண்க. |
சார்வார்.....கண்டார் - முன்னர்க் கூறியபடி ஞானாகாய வழியினாலே அறிவினுள் வெளிப்படக் கண்டார்; அது மனத்துள் அறிந்தநிலை; "அறிந்து" என்றது அக்குறிப்புடையது; கண்டார் - என்றது குதிரை யேறிக் கொடுங்கோளூரில் தமது திருமாளிகையினின்றும் திருவஞ்சைக்களம் சாரப் புறப்பட்ட எல்லையில் கண்ணாற் கண்ட வாயிற்காட்சி; முன்னர் அறிவினுள் அறிந்தது யோகக் காட்சி என்பர். |
விண்மேற் செலும் மெய்த் தொண்டர் - நம்பிகள்; சேரனார் கண்டபோது நம்பிகள் ஆகாய வீதியில் யானையின் மேற் செல்கின்றார் என்பது. யானையேறி நிலத்திற் சென்று, பின்னர்க் கடல்வழிச் சென்று கடலரையன் அலர் கொண்டு முன் வந்திறைஞ்சி வழி தந்த பின் ஆகாயத்திற் சென்ற நிலைகள் முன்னர் நிகழ்ந்தன என்பதுமாம். பதிகம் பார்க்க. தொண்டர் - பெருந் தொண்டராகு நிலையிலே இறைவர் அறிவிக்க அறிந்து, அந்நிலையிலேயே நின்று நம்பிகள்பாற் சேரனார் அன்பு பூண்டொழுகியமையால் ஈண்டு இவ்வாற்றாற் கூறினார். |
பாரில் நின்றிலர்.....விட்டார் - அவர் விண் மேற் செலக் கண்டனராதலின் அவரைப் பிரிந்து ஒரு சிறிதும் நிலத்தில் நிற்க இசையாது மனத்தை அவர்பாற் செலுத்தினார்; அதன் வேகத்தோடு ஒப்பப் (மனோ வேகத்தில்) பரியினையும் செலுத்தினார் என்பது; நின்றிலர் - நின்றிலராகி; பாரில் நின்றிலர் - நிற்கலாற்றாராய்; முற்றெச்சம். சென்ற - இறந்த காலம், மனம் முன் சென்றுவிட்டது என்றுணர்த்திற்று; சென்ற - தம் மனத்தொடு - என்றதும் விரைவுக் குறிப்பு. |
முன் செலவிடுதலாவது - மனத்தின் முன்னே என்றும், யானையின் முன் செல்ல என்றும் கொள்ள நின்றது; "முன் வலங்கொண்டு" (4264) என மேற் கூறுதல் காண்க. |
| திருவஞ்சைக் களஞ்சார - என்பதும் பாடம். |
| 35 |
| 4264. | விட்ட வெம்பரிச் செவியினிற் புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே இட்ட மாஞ்சிவ மந்திர மோதலி னிருவிசும் பெழப்பாய்ந்து மட்ட லர்ந்தபைந் தெரியல்வன் றொண்டர்மேல் கொண்டமாதங் கத்தை முட்ட வெய்திமுன் வலங்கொண்டு சென்றது மற்றதன் முன்னாக. |
| 36 |
(இ-ள்) விட்ட.....ஓதலின் - முன் கூறியபடி கடவி விட்ட விருப்பமுடைய குதிரையின் செவியிலே நில அரசர்களுள் முதன்மை பெற்ற வேந்தராகிய சேரமானார் விதிப்படி இட்டமாம் சிவமந்திரத்தினை ஓதினாராதலின்; இருவிசும்பு எழப் பாய்ந்து - பெரிய ஆகாயத்திலே எழும்பப் பாய்ந்து மேற்சென்று; மட்டலர்ந்த....எய்தி - மணம் பொருந்த அலர்ந்த மலர்களையுடைய பசிய மாலையணிந்த வன்றொண்டர் மேல் கொண்ட வெள்ளானையினை அணுகச் சேர்ந்து; முன் வலங்கொண்டு.....முன்னாக - முதலில் வலமாக வந்து அதன் முன்னாகச் சென்றது. |